Monday, May 13, 2019


இசையாயிரம்

முன்னுரை:
இசையாயிரம் நூல் கலிங்கத்துப்பரணி பாடிய சயங்கொண்டாரால் எழுதப்பெற்றது. இந்நூல் ஆயிரம் பாடல்களைக் கொண்டது. செட்டி மக்களின் மேல் பாடப்பட்டது இந்நூலாகும். ஆனால் கவித்திறம் மிகு சயங்கொண்டார் செக்கார இனத்து மக்களை இகழந்து பாடியுள்ளார். மேலும் கம்ப இராமாயணம் எழுதிய கம்பரும்  தனிப்பாடல் திரட்டில் செக்கார இனத்து மக்களை இகழ்ந்தே பாடியுள்ளார்பிறரை பழிப்பதே குற்றம் என்று கூறிய புலவர் பெருமக்கள் இவ்வாறு ஒரு இனத்தை இகழ்ந்துரைத்தனர் என்பது ஏற்கத்தக்கதன்று. கவிபாடிய வாயும் வசை பாடுமோ என எண்ணத்தோன்றுகின்றது.iஇந்நூல் அழிந்துபோன தமிழ் நூல் பட்டியல்களின் வரிசையில் உள்ளது. இந்நூல் பற்றிய குறிப்பு வேறு எங்கும் கிடைக்கவில்லை.     

சயங்கொண்டார்:
சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியைப் பாடிக் குலோத்துங்கன் புகழையும் அவன் தலைமைச் சேனதிபதி தொண்டைமானின் பெருமையையும் இந்நிலவுலகில் என்றும் நிலைபெறச் செய்தவர் சயங்கொண்டார் என்ற புலவர் பெருமான். அவர் குலோத்துங்க சோழனின் அவைக்களத்தை அணி செய்த ஒப்பற்ற புலவர்மணி. சயங்கொண்டாரது ஊர் அவரதுஇயற்பெயர் இன்னது என்பது அறியக் கூடவில்லை. அது போலவே அவரது பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை வரலாறு முதலிய செய்திகளும் நன்கு புலப்படவில்லை.  ஒரு பாடலில் அவரது ஊர் சோழ நாட்டுத் தீபங்குடி என்ற செய்தி கிடைக்கின்றது. 

காலம்:
முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1118) கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆண்டதாக வர லாற்று ஆசிரியர்கள் கூறுவர். இரண்டாம் கலிங்கப்போர் நடைபெற்றது கி.பி. 1112-ல். இந்தப் போரைத்தான் சயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியின் காவியப் பொருளாகக் கொண்டார், எனவே, சயங்கொண்டாரின் காலமும் குலோத்துங்கனின் காலமும் ஒன்றே என்று கொள்ளவேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால் இக்கவிஞர் கம்பருக்கு முந்தியவர் என்பது பெறப்படுகின்றது. பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையவர்கள் கம்பர் தன் காவியத்தை கி.பி. 1178-ல் பாடி முடித்து கி. பி. 1185-ல் அரங்கேற்றினர் என்ப
பலபட்டடைச் சொக்கநாதர் இவர் புகழை பிற புலவருடன் ஒப்பிடுவார் கீழ்க்கண்டவாறு.

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர்
சயங்கொண்டான்; விருத்த மென்னும்
ஒண்பாவில் உயர்கம்பன்; கோவை.உலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காளமேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காச
லாலொருவர் பகரொளுதே "

இசையாயிரம்:
இவர் பாடிய மற்றொரு நூல் கலிங்கத்துப் பரணியைத் தவிர புகார் நகரத்து வணிகரைச் சிறப்பித்து இசையாயிரம் என்ற மற்றொரு நூலும் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையால் அறியக்கிடைக்கின்றது. அந்நூலில் செட்டிகள் மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் புகார் தங்கட்கு ஊர் என்று பாடச் சொல்லச் சயங்கொண்டார் பாடியது என்ற தலைக்குறிப் புடன் காணப்படும்,

ஆடுவதுஞ் செக்கே ளப்பதுவு மெண்ணெயே
கூடுவதுஞ் சக்கிலியக் கோதையே-நீடுபுகழ்க்*
கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார் தாம்
உச்சிக்குப் பின்புகா ரூர் "

பொருள்:
செக்கார் இன மக்களால் ஆட்டப்படுவது செக்கு ஆகும், செக்காடுதலின் பயனாய் கிடைப்பது எண்ணெய்யே, அதை அளப்பவர்களும் செக்கார் மக்களே, அவர்கள் கூடி இன்பம் களிப்பது சக்கிலிய கோதையுடனே (பிண்ணாக்கு) நீண்ட புகழையுடைய காஞ்சிபுரத்து செப்பேட்டினை ஆராயுங்கால் செக்கார் மக்கள் உச்சி வேளை சென்ற பின்பு தான் எண்ணெய் விற்று ஊர் திரும்புவார் என்பதாகும். என்ற வெண்பாவால் இதனை அறியலாம்.

* இப்பாடலை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்

(இப்பாடல் ஒரு சிலேடை பாடல்,  இங்கு  சக்கிலிய கோதை என்பது பிண்ணாக்கிற்கும், கச்சி செப்பேடு என்பது பணம் எண்ணும் செயலுக்கும் உவமையாக கொடுக்கப்பட்டுள்ளது. உச்சிக்கு பின் புகாரூர் என்பது வெயில் தாழ்வதற்கு முன் தன் ஊர் புகமாட்டார்கள் என்பதாகும்)  

மேலும் இதன் பொருள் புரியாதோர் புலவர் தா.குருசாமி தேசிகர் அவர்களின் பொருள் விளக்கத்தை பயின்று தெளியவும்.  


 செக்கார் செட்டிகளைப் போல வாணிகம் செய்பவராயினும், அவரில் வேராய் இடைக்காலத்தே கம்பருக்கு கொடுமையுடையவராய் இருந்தனர் போலும். கம்பர். செக்காரப் பொட்டி மக்கள் என்றது அக்கருத்தை வற்புறுத்துகின்றது . கச்சிப்பதியிலுள்ள செப்பேட்டு வழக்கை யென்னுமிடத்து. உச்சிக்குப் பின் ஊர்க்குள் எண்ணெய் விற்று திரும்புவர் என்பதாம். இசையாயிரம் என்பது, 'செட்டிகளின் புகழ் பொருளாக ஆயிரம் பாட்டுக்கள் கொண்டதொரு நூலாகும். இந்நூலைப்பற்றிய செய்தியொன்றும் இக்குறிப்பின் வேறாக கிடைத்திலது.


கச்சிச் செப்பேடு
கச்சிச் செப்பேடு என்பது செக்கார் ஒழுகவேண்டிய விதிகள் பற்றி அரசாணையோடு பிறந்த சாசனம். திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு ஐந்தாவது - - - நாடும் நகரமும் கூடியிருந்து ஸ்ரீ காஞ்சிமா நகரில் செப்பேட்டுப்படி செய்யக்கடவ முறைமை என்று தொடங்கிச் செக்கார் செய்யக் கடவனவும், அல்லாதனவுமான விதிகளைக் கூறும் சாசனம். ஆகும்.


கம்பர்:
கம்பர் (கி.பி. 1180-1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய  கம்பராமாயணம் நூலானது புகழ் பெற்றதாகும். கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் என கருதப்படுகிறது.

 தனிப்பாடல்கள் திரட்டு:
தனிப்பாடல்கள் திரட்டு என்ற நூலில் இப்பாடல் கம்பரால் எழுதப்பெற்றதாய் கிடைக்கின்றது. இப்பாடலுக்கு கா.சு பிள்ளை உரையெழுதியுள்ளார்.

"செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்
பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,
முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே
எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்!"


பொருள்:
செட்டியார் மக்கள் வாழும் தெருக்கள் வழி செல்ல வேண்டாம், செல்வம் ஈட்டுதலையே குறிக்கோளாய் கொண்ட செக்கார மக்கள் வாழும் தெருக்கள் வழி செல்ல வேண்டாம். தலைவாசலின் அளவைக்குறைத்து யாரேனும் வீட்டினுள் நுழைந்தால் தலைவாசலில் முட்டியே வீடினுள் நுழைய வேண்டிய அந்தணர் வீடை எட்டி பார்க்க வேண்டாம். எந்நாளும் உணவின் மூலம் அனைவரையும் காப்பாற்றுவோர் வேளாண் தொழில் புரியும் வேளாளர்களே என இப்பாடல் நிறைவுறுகின்றது.

இது போன்று சில இனத்தை தாழ்த்தியும் ஓர் இனத்தை உயர்த்தியும் கொடிபிடிக்கும் எண்ணம் பல நூற்றாண்டுகளாக உள்ளதை இப்பாடல் வெளிப்படுத்துகின்றது. எத்தொழிலுக்கும் முதன்மை வேளாண்மை என்பதை மறுக்கவில்லை ஆனால் அதை காட்டி பிற இனத்தை தாழ்த்தி கூறுதலும் இப்பாடல் பிறந்தமைக்கு ஒரு கட்டுக்கதை கூறுதலும் ஏற்புடையதன்று.

உதவி நூல்கள்:
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
  • கச்சிச் செப்பேடு பற்றி மு. இராகவையங்கார் எழுதியுள்ள குறிப்பு. (மு. ராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி)
  • தமிழ் நாவலர் சரிதை செயங்கொண்டார், 119
  • தனிப்பாடல்கள் திரட்டு பாகம் 2-கா.சு. பிள்ளை