Sunday, May 26, 2024

செக்கு கல்வெட்டுகள் -2

                                                              செக்கு கல்வெட்டுகள் (பாகம்-2) 

கல்வெட்டு 20

 

 கல்வெட்டுப் பாடம்:

  “ஸ்ரீ மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் வம்பலம்

 ஸ்ரீ மல்ல(டி) நாட்டான் என்பவரால் பந்தலுடன் கூடிய பொது இடத்தில் செக்கு ஒன்றை செய்து தந்துள்ளார்.

 தகவல்:

பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில், வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன், சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆர்வவர் வசந்தன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர் செல்லியம்மன் கோவிலின் முன்புறம் தரையில் ஒரு கல் செக்கு பதிக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். தரையில் இருந்து 33 செ.மீ, உயரத்திலும் வெளிவிட்டம் 71 செ.மீ. உள்விட்டம் 51 செ.மீ. அளவுடையதாக கல்செக்கு உள்ளது. செக்கின் நடுவில் 30 செ.மீ ஆழத்திலும் 20 செ.மீ, விட்டத்திலும் குழி அமைந்துள்ளது. பக்கவாட்டு பகுதியில் இரண்டு வரிகளில், ஸ்ரீ மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் வம்பலம் என்று எழுதப்பட்டுள்ளது. பந்தல் ம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடம் ஆகும்.

எழுத்தின் வடிவத்தைக் கொண்டு 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம், என்று சுருதப்படுகிறது. 900 ஆண்டுகள் பழமையான சுல் செக்கு கண்டுபிடித்தது பற்றி வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன் கூறியதாவது வெங்கலம் சிவன் கோவிலில் உள்ள கி.பி. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டின் வழியாக, இவ்வூரின் பெயர் வெண்குளம் என்பதும், இவ்வூர் சோழர் காலத்தில் வணிகநகராக விளங்கியதும் தெரிகிறது பழங்காவத்தில் மன்னர்கள், படைத்தலைவர்கள்; செல்வந்தர்கள் கோவில் வழிபாட்டுக்கும் பொதுப் பயன்பாட்டுக்கும் கல் செக்குகளை தாளமாக வழங்கினர் பெரம்பலுார்மாவட்டத்தில், செஞ்சேரி சத்திரமனை, வேலூர் ஆகிய கிராமங்களில் கல்செக்குகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

கல்வெட்டு 21

 


கல்வெட்டுப் பாடம்: 

“ஸ்ரீ முத நீர் முரி மீ மங்கரை யுகங்து தட்டான் ஆசிரியர் பாறையி இதனய் காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு 

தகவல்:

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்திற்கு மேற்குபகுதியில் போடி சி.பி.ஏ கல்லூரி வரலாற்றுத்துறையும், மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து நடத்திய தொல்லியல் சார்ந்த களஆய்வில் கி.பி.10ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக்கு உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஏல விவசாயிகள் சங்கக்கல்லூரியின் முதல்வர் ராஜகுமாரன் வழிகாட்டுதல்படி இக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்களான மாணிக்கராஜ், கருப்பசாமி, ஆய்வு மாணவர் ராம்குமார் மற்றும் நெல்லூர் அரசுப்பள்ளியின் ஆசிரியர் கருப்பையா, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் முனைவர் சாந்தலிங்கம், முனைவர் பட்ட ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் அடங்கிய குழு நரசிங்கபுரம் கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ள மலை அடிவாரப்பகுதியில் உள்ளூர் மக்களால் பிணக்கா, புணல்கா மற்றும் கோம்பைக்காடு எனப்பல பெயர்களில் அழைக்கப்படும் பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான மாமரத்தோட்டத்தில் பெரும்பாறை என்ற இடத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக்கு உரல் கண்டறியப்பட்டது.

இக்கல்வெட்டு பற்றி முனைவர் சாந்தலிங்கம் கூறியதாவது, இந்த செக் உரல் பூமிக்கு கீழ் சுமார் 3 அடிக்கு கீழ்பாறையில் வெட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ முத நீர் முரி மீ மங்கரை யுகங்து தட்டான் ஆசிரியர் பாறையி இதனய் காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு. முது நீர் முரி மீ மங்கரை என்பது இந்த இடத்தை குறிக்கும் சொல்லாகும். தட்டான் என்ற வார்த்தை பொற்கொல்லறை குறிக்கும். ஆசிரியம் என்பது அடைக்கலம் கொடுக்கும் இடம் என்ற பொருளை தரும். எனவே ஒரு பொற்கொல்லர் வேறு ஒரு இடத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக இங்கு வந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் பாதுகாப்பிற்காக செல்லக்கலிங்கரை என்பவரின் மகனை நியமித்துள்ளார். செல்லக்கலிங்கரை மகன் இம்மக்களின் பயன்பாட்டிற்காக செக் உரல் ஒன்று வெட்டித்தந்துள்ளான் என்ற செய்தியை தருகிறது என்கிறார்.

மேலும் இவ்வாய்வு பற்றி மாணிக்கராஜ் கூறுகையில், இம்மலையை சுற்றி பண்டையக்காலத்தில் மக்கள் தனித்தனி கூட்டமாக ஆங்காங்கே வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிடுவதும் நிகழ்ந்துள்ளது. அப்போது ஒரு கூட்டத்தினர் இங்கு வந்து அடைக்கலம் அடைந்துள்ளனர் என்ற வரலாற்றுச் செய்தியும் இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. இவை தவிர இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டையக்கால மக்களின் வாழ்விடங்கள் தொல்லியல் தடயங்கள், பாறை ஓவியங்கள், பானை ஓடுகள், வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக் உரல்கள் மற்றும் நடுகற்கள் போன்ற தொன்மையான வரலாற்றுத்தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.

கல்வெட்டு 22

கல்வெட்டுப் பாடம்:

“வழுதிவளநாட்டு மிழலூர் அப்பனூழன் 'பொற்கொடிவீரர் யிட்ட செக்கு

தகவல்:

மதுரை மாவட்டத்து மேலூர் வட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டியிலும் வட்டெழுத்துப் பொறித்த கி.பி. 10-ஆம் நூற்றாண்டு கல்செக்கு ஒன்று கிடைத்துள்ளது, இது தற்பொழுது திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ளது. வழுதிவளநாட்டிலுள்ள மிழலூரினைச் சார்ந்த அப்பனூழன் என்பவன் 'பொற்கொடிவீரர்' என்ற வீரர் குழுவின் பெயரால் இச்செக்கினைச் செய்வித்ததாக அதிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது, வழுதிவளநாடு என்பது ஸ்ரீவைகுண்டம் வட்டதைச் சார்ந்த பழமையான உள்நாட்டுப் பிரிவாகும். இந்நாட்டில் இருந்த அப்பனூழன் பாண்டிய நாட்டின் வடபகுதிக்கு வந்து இச்செக்கினைச் செய்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டியநாட்டில் 'வீரக்கொடியார் பெயரில் வீரர்குழுவினர் இருந்திருக்கின்றனர். எனவே படைப் பிரிவில் 'கொடிவீரர்' பிரிவு ஒன்று இருந்தமை இதன்மூலம் தெளிவாகிறது.

கல்வெட்டு 23

கல்வெட்டுப் பாடம்:   

"ஸ்ரீ பிடாரன் மல்லன் செக்கு"

தகவல்:

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கூடலூர் நத்தமேட்டில் கண்டறியப்பட்ட செக்கு  கல்வெட்டு. பிடாரன் மல்லன் என்பவன் செக்குக்கு உரியவனாகக் காட்டப்பட்டுள்ளான். இச் செக்கு, பிடாரன் மல்லன் என்பவனுக்கு உடைமையானதாகும்.

கல்வெட்டு 24

கல்வெட்டுப் பாடம்:   

"ஸ்ரீ நொப்பிக்கலி ஏறாழி மகன் மாதேவன் செக்கு"

தகவல்:

செஞ்சி வட்டம் ஏம்பலம் என்ற ஊரின் நத்தமேட்டுப் பகுதியில் காணப்படும் செக்கின் மீது,  பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஏறாழி என்பவனின் மகன் மாதேவன் என்பவரின் செக்கு என வெட்டப்பட்டுள்ளது

கல்வெட்டு 25


கல்வெட்டுப் பாடம்:   

"ஸ்ரீ வடுகம்பட்டன் தன்னுடைய செக்கு வீசம்பட்டனுக்கு நகர மறிய பேர்பெறு குடுக்க இந் நகரமறி பிடாரியிக்கு திருவிளக்கினுக்கு நீர(க)ட்டிக் குடுத்(தா)ன் வீசம் பட்டன் இச்செக்கு"

தகவல்:

ரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் நத்தமேட்டிலுள்ள செக்கின் மீது, மேலுள்ளவாறு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் "ஸ்ரீவடுகம்பட்டன் தன்னுடைய செக்கு" என்று குறிப்பிடுவதன் மூலம், வடுகம்பட்டன் செக்குடைமையாளன் உறுதிப்படுத்தலாம். செக்குடைமையாளனான 'வடுகம்பட்டன்' என்பதை தன்னுடைய செக்கினைத் தன்பெயர் நிலைத்து நிற்கும் பொருட்டு, ஊரார் அறிய அவ்வூர்ப் பிடாரிக் கோயிலுக்கு, வீசம்பட்டன் மூலம் தாரை வார்த்துக் கொடுத்துள்ளான். வடுகம்பட்டன், பிடாரிக் கோயிலுக்குத் தன் செக்கினை நேரிடையாக வழங்காமல், வீசம்பட்டன் மூலம் தாரை வார்த்துக் கொடுத்துள்ளதால், வீசம்பட்டன்' என்பவன் சங்கரபாடியானாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் கோயில் நிர்வாகத்தில் பங்குபெற்ற செக்காரான சங்கரபாடியாரே கோயில் விளக்குகளுக்குக் கொடைகளைப் பெறும் பணியினையும் அதனைப் பராமரிக்கும் பணியினையும் மேற்கொண்டனர். 

கல்வெட்டு 26

கல்வெட்டுப் பாடம்:   

"சகர யாண்டு எண்ணூற் றெழுபத்தின் நேழு வாண கோபாடில் பெந்னை வடகரைக் காட்டாம் பூண்டியுடைய செக்கிழான் உலகளந்தான் விரட்டனிட்ட செக்கு இதி ரெட்டினான் தேவனார் கொரு முறள் யெண்ணை"

தகவல்:

திருவண்ணாமலைக்கு அருகில் ஆலையூர் நத்தமேட்டில் காணப்படும் செக்கின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், செக்கிழான் உலகளந்தான் விரட்டன் என்பவன் "செக்கிழான்" என்ற சொல்லின் மூலம் செக்குடைமையாளனாகக் காட்டப்பட்டுள்ளான். நிலவுடைமையாளன் "நிலக்கிழான்" என்று அழைக்கப்பட்டதைப் போன்று செக்குடைமையாளன் செக்கிழான்" என்று அழைக்கப்பட்டிருப்பது செக்காரில் செக்குடைமையாளர் இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றது.

 கல்வெட்டு 27


கல்வெட்டுப் பாடம்:   

"ஸ்வஸ்திஸ்ரீ சோமூர் மஹா தேவற்க்கு அஞ்ஞற்றுவர் இடுவிச்ச செக்கு"

தகவல்:

கரூர் வட்டம், வெள்ளியணை என்ற ஊரின் நத்தமேட்டுப் பகுதியிலுள்ள செக்கின் மீது, பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சோமூர் கோயிலிலுள்ள இறைவனுக்கு விளக்கு எரிப்பதற்காகும் எண்ணெயை ஆட்டுவதற்காக, வெள்ளியணையில் இருந்த 'ஐந்நூற்றுவர்' வணிகக்குழு, செக்குகளைத் தானமாக வழங்கியுள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட செக்குகளைச் செக்காரிடம் மானியமாகவோ, வாரமாகவோ கொடுத்து, அவர்கள் கோயிலுக்கு வழங்க வேண்டிய எண்ணெய் அளவினை நிர்ணயம் செய்து, அதனைக் கண்காணிக்கும் பணியினையும் கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.

கல்வெட்டு 28

     முதலாம் பராந்தக சோழனின் 15வது ஆட்சியாண்டில் கோவில் மதில் சுவரில் வெட்டப்பட்ட கல்வெட்டு.

 கல்வெட்டுப் பாடம்:

காவும் தெங்கும் இடம்பெறுவதாகவும் தமனகமும்

இருவாசியும் மருவும் செண்பகமும் செங்கழுநீரும்

மாவும் பலாவும் கமுகும் பனையும் உள்ளிட்டருவில்

பயன் மரமும் நடவும் இடவும் (பெறுவ)தாகவும் இட்ட

தெங்கும் பனையும் ஈழமுடறபெறாததாகவும்

பெருஞ்செக்கிடப் பெறுவதாக

தகவல்:

முதலாம் பராந்தக சோழனின் 15வது ஆட்சியாண்டில், திருவிடைமருதூருக்கு அருகில், ஐய்யப்பாடி என்ற ஊர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. அவ்வூரில் அமைக்கப்பட வேண்டிய மாளிகை, மரங்கள், பூந்தோட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இறுதியில் "பெருஞ்செக்கு" நிறுவப்பட வேண்டும் என்று கல்வெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சங்கரப்பாடியார்கள் கல்வெட்டுகள்:

கல்வெட்டுப் பாடங்கள்:

திருக்கோயிலூர் சபையோம் நகரந் திருக்கோயிலூர் சங்கரபாடியோம்; (தெ.இ.க.தொகுதி-1,55)

 

'திருநெல்வேலிச் சுத்தவல்லிப் பெருந்தெருவிற் சங்கரன்பாடியார் எண்ணெய் அளப்பாராக' (தெ.இ.க.தொகுதி-8,705)

 

'ஆமூர் கோட்டத்து மாமல்லபுரமாகிய சனனாதபுரத்துச் சங்கரபாடியான் கொள்ளம்பாக்கிழான் மாதேவன் எட்டி வைத்த திருநொந்தா விளக்கொன்று'” (தெ.இ.க.தொகுதி-23,98)


"இறைக்குடிகளில் பொன்காணவல்லா ரெனப்படுவாரை நோக்கி மாடவீதியார் கூடிக்

குடவோலை எழுதிப் புகவிட்டு தங்கள் சேரியில் நால்வரைக் குடவோலையில்

போந்தாரைக் கொள்வதாகவும் இப்பரி சேனையிலும் இருவரைக் கொள்வதாகவும்

இப்பரிசெய் சங்கரப்பாடியிலும் மூவரை(க்) கொள்வதாகவும்

இவர்களெல்லா ஜனத்துக்கு மொக்க பொன் காண்பார்களாகவும்" (தெ.இ.க.தொகுதி-06,295)

  சங்கரபாடியார். வாணியர், மணிக்கிராமத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், அஞ்சுவண்ணத்தார். நானாதேசிகள் போன்ற வணிகக் குழுக்கள், கோயில் ஆட்சிக் குழுவில் பங்கெடுத்துக் கொண்டன. சங்கரபாடியார் என்ற செக்கார் கோயில் நிர்வாகத்தில் பங்குபெற்றதோடு, கோயில் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்கி, நந்தா (நொந்தா) விளக்கு அளித்து அவற்றைப் பாதுகாக்கும் பணியினையும் செய்தனர். அவ்விளக்குகள் எரிவதற்காகக் கொடைகளைப் பெற்று அக்கொடைகளைப் பராமரிக்கும் பணியினையும் மேற்கொண்டனர்.

செக்கு மீதான வரிகள்:

செக்குத் தொழில் மீது விதிக்கப்பட்ட வரிகள், அதன் வணிகத் தன்மைக்கேற்ப, செக்குக்கடமை, செக்கார்ப்பாட்டம், செக்காயம், செக்கிறை, செக்குக்காணம், போன்ற பெயர்களில் வசூலிக்கப்பட்டுள்ளன. செக்குத் தொழிலுக்கும் செக்கு' என்ற பெயரில் தொழில்வரி வசூல் செய்யப்பட்டுள்ளதைக் கல்வெட்டில் காணமுடிகிறது. தனியார் செக்குகளை நிறுவிட வாய்ப்பளிக்கப்பட்ட போது, செக்கார் சமூகத்திலிருந்த செக்குடைமையாளர்கள் அரசின் அனுமதியினை உரிமக் கட்டணம் செலுத்திச் செக்குத் தொழிலை மேற்கொண்டுள்ளனர்.

"இருபதின்மர் சதுர்பேதிகளுக்கு பிரம்மதேயமாக கொடுத்து இவ்வூர் மநையும் மநைப்படப்பும் ஊராள்ச்சியும் செக்கும் தறியும் கூலமும் தரகும் கத்திக்காணமும்."

என்ற கல்வெட்டில், "செக்கும் தறியும்" என்பதில் செக்கு என்பது செக்குத் தொழில் உரிமம் ஆகும். தறி என்பது நெசவுத் தொழில் உரிமம் ஆகும். "செக்கு" என்ற பெயரில் உரிமக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு செக்குத் தொழில் உரிமம் வழங்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டின் மூலம் அறியலாம். செக்கு என்று குறிப்பிடப்படுவது பொதுவாகச் செக்கிலிருந்து வெளிப்படும் எண்ணெய் மீது இடப்பட்ட வரியாக இருந்த போதிலும், அது செக்கு இயந்திரங்களை (செக்கு) நிறுவுவதற்கு அரசால் வசூலிக்கப்பட்ட உரிமக் கட்டணமே ஆகும்.

முடிவுரை:

செக்குடைமையாளர்கள், செக்கிலிருந்து உற்பத்தி செய்த எண்ணெயில், செக்காருக்கு வழங்கிய கூலி போக, எஞ்சிய பெரும்பகுதி எண்ணெயைச் செக்கு வாணியர்" என்ற பெரும் எண்ணெய் வணிகர்களைக் கொண்டு வணிகம் மேற்கொண்டுள்ளனர். இத்தகைய பெரும்வணிகச் செக்காரே பிற்காலத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊர் மற்றும் கோயில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய செக்கார். "சங்கரபாடியார்" என்றும் அழைக்கப்படுவதைக் கல்வெட்டுகளில் காணலாம். நம் இனத்தின் பெருமைகளை இன்றும் செக்குக் கல்வெட்டுகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் தாங்கி நிற்கின்றன.

குறிப்புதவி:

1  தமிழ் இணைய பல்கலைக்கழகம்
2.   தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகள்
3.   தமிழக நாளிதழ்கள்
4.   கணேசன். நாக   "செக்கார் வணிக சமூகம் ஒரு வரலாற்றுப் பார்வை" – கல்வெட்டு இதழ் கட்டுரை
5.   ராசகோபால். சு "வரலாற்றில் செக்கு" – கல்வெட்டு இதழ் கட்டுரை

  1.  

 

No comments:

Post a Comment