Sunday, May 26, 2024

செக்கு கல்வெட்டுகள் -2

                                                              செக்கு கல்வெட்டுகள் (பாகம்-2) 

கல்வெட்டு 20

 

 கல்வெட்டுப் பாடம்:

  “ஸ்ரீ மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் வம்பலம்

 ஸ்ரீ மல்ல(டி) நாட்டான் என்பவரால் பந்தலுடன் கூடிய பொது இடத்தில் செக்கு ஒன்றை செய்து தந்துள்ளார்.

 தகவல்:

பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில், வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன், சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆர்வவர் வசந்தன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர் செல்லியம்மன் கோவிலின் முன்புறம் தரையில் ஒரு கல் செக்கு பதிக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். தரையில் இருந்து 33 செ.மீ, உயரத்திலும் வெளிவிட்டம் 71 செ.மீ. உள்விட்டம் 51 செ.மீ. அளவுடையதாக கல்செக்கு உள்ளது. செக்கின் நடுவில் 30 செ.மீ ஆழத்திலும் 20 செ.மீ, விட்டத்திலும் குழி அமைந்துள்ளது. பக்கவாட்டு பகுதியில் இரண்டு வரிகளில், ஸ்ரீ மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் வம்பலம் என்று எழுதப்பட்டுள்ளது. பந்தல் ம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடம் ஆகும்.

எழுத்தின் வடிவத்தைக் கொண்டு 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம், என்று சுருதப்படுகிறது. 900 ஆண்டுகள் பழமையான சுல் செக்கு கண்டுபிடித்தது பற்றி வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன் கூறியதாவது வெங்கலம் சிவன் கோவிலில் உள்ள கி.பி. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டின் வழியாக, இவ்வூரின் பெயர் வெண்குளம் என்பதும், இவ்வூர் சோழர் காலத்தில் வணிகநகராக விளங்கியதும் தெரிகிறது பழங்காவத்தில் மன்னர்கள், படைத்தலைவர்கள்; செல்வந்தர்கள் கோவில் வழிபாட்டுக்கும் பொதுப் பயன்பாட்டுக்கும் கல் செக்குகளை தாளமாக வழங்கினர் பெரம்பலுார்மாவட்டத்தில், செஞ்சேரி சத்திரமனை, வேலூர் ஆகிய கிராமங்களில் கல்செக்குகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

கல்வெட்டு 21

 


கல்வெட்டுப் பாடம்: 

“ஸ்ரீ முத நீர் முரி மீ மங்கரை யுகங்து தட்டான் ஆசிரியர் பாறையி இதனய் காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு 

தகவல்:

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்திற்கு மேற்குபகுதியில் போடி சி.பி.ஏ கல்லூரி வரலாற்றுத்துறையும், மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து நடத்திய தொல்லியல் சார்ந்த களஆய்வில் கி.பி.10ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக்கு உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஏல விவசாயிகள் சங்கக்கல்லூரியின் முதல்வர் ராஜகுமாரன் வழிகாட்டுதல்படி இக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்களான மாணிக்கராஜ், கருப்பசாமி, ஆய்வு மாணவர் ராம்குமார் மற்றும் நெல்லூர் அரசுப்பள்ளியின் ஆசிரியர் கருப்பையா, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் முனைவர் சாந்தலிங்கம், முனைவர் பட்ட ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் அடங்கிய குழு நரசிங்கபுரம் கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ள மலை அடிவாரப்பகுதியில் உள்ளூர் மக்களால் பிணக்கா, புணல்கா மற்றும் கோம்பைக்காடு எனப்பல பெயர்களில் அழைக்கப்படும் பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான மாமரத்தோட்டத்தில் பெரும்பாறை என்ற இடத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக்கு உரல் கண்டறியப்பட்டது.

இக்கல்வெட்டு பற்றி முனைவர் சாந்தலிங்கம் கூறியதாவது, இந்த செக் உரல் பூமிக்கு கீழ் சுமார் 3 அடிக்கு கீழ்பாறையில் வெட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ முத நீர் முரி மீ மங்கரை யுகங்து தட்டான் ஆசிரியர் பாறையி இதனய் காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு. முது நீர் முரி மீ மங்கரை என்பது இந்த இடத்தை குறிக்கும் சொல்லாகும். தட்டான் என்ற வார்த்தை பொற்கொல்லறை குறிக்கும். ஆசிரியம் என்பது அடைக்கலம் கொடுக்கும் இடம் என்ற பொருளை தரும். எனவே ஒரு பொற்கொல்லர் வேறு ஒரு இடத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக இங்கு வந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் பாதுகாப்பிற்காக செல்லக்கலிங்கரை என்பவரின் மகனை நியமித்துள்ளார். செல்லக்கலிங்கரை மகன் இம்மக்களின் பயன்பாட்டிற்காக செக் உரல் ஒன்று வெட்டித்தந்துள்ளான் என்ற செய்தியை தருகிறது என்கிறார்.

மேலும் இவ்வாய்வு பற்றி மாணிக்கராஜ் கூறுகையில், இம்மலையை சுற்றி பண்டையக்காலத்தில் மக்கள் தனித்தனி கூட்டமாக ஆங்காங்கே வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிடுவதும் நிகழ்ந்துள்ளது. அப்போது ஒரு கூட்டத்தினர் இங்கு வந்து அடைக்கலம் அடைந்துள்ளனர் என்ற வரலாற்றுச் செய்தியும் இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. இவை தவிர இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டையக்கால மக்களின் வாழ்விடங்கள் தொல்லியல் தடயங்கள், பாறை ஓவியங்கள், பானை ஓடுகள், வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக் உரல்கள் மற்றும் நடுகற்கள் போன்ற தொன்மையான வரலாற்றுத்தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.

கல்வெட்டு 22

கல்வெட்டுப் பாடம்:

“வழுதிவளநாட்டு மிழலூர் அப்பனூழன் 'பொற்கொடிவீரர் யிட்ட செக்கு

தகவல்:

மதுரை மாவட்டத்து மேலூர் வட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டியிலும் வட்டெழுத்துப் பொறித்த கி.பி. 10-ஆம் நூற்றாண்டு கல்செக்கு ஒன்று கிடைத்துள்ளது, இது தற்பொழுது திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ளது. வழுதிவளநாட்டிலுள்ள மிழலூரினைச் சார்ந்த அப்பனூழன் என்பவன் 'பொற்கொடிவீரர்' என்ற வீரர் குழுவின் பெயரால் இச்செக்கினைச் செய்வித்ததாக அதிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது, வழுதிவளநாடு என்பது ஸ்ரீவைகுண்டம் வட்டதைச் சார்ந்த பழமையான உள்நாட்டுப் பிரிவாகும். இந்நாட்டில் இருந்த அப்பனூழன் பாண்டிய நாட்டின் வடபகுதிக்கு வந்து இச்செக்கினைச் செய்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டியநாட்டில் 'வீரக்கொடியார் பெயரில் வீரர்குழுவினர் இருந்திருக்கின்றனர். எனவே படைப் பிரிவில் 'கொடிவீரர்' பிரிவு ஒன்று இருந்தமை இதன்மூலம் தெளிவாகிறது.

கல்வெட்டு 23

கல்வெட்டுப் பாடம்:   

"ஸ்ரீ பிடாரன் மல்லன் செக்கு"

தகவல்:

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கூடலூர் நத்தமேட்டில் கண்டறியப்பட்ட செக்கு  கல்வெட்டு. பிடாரன் மல்லன் என்பவன் செக்குக்கு உரியவனாகக் காட்டப்பட்டுள்ளான். இச் செக்கு, பிடாரன் மல்லன் என்பவனுக்கு உடைமையானதாகும்.

கல்வெட்டு 24

கல்வெட்டுப் பாடம்:   

"ஸ்ரீ நொப்பிக்கலி ஏறாழி மகன் மாதேவன் செக்கு"

தகவல்:

செஞ்சி வட்டம் ஏம்பலம் என்ற ஊரின் நத்தமேட்டுப் பகுதியில் காணப்படும் செக்கின் மீது,  பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஏறாழி என்பவனின் மகன் மாதேவன் என்பவரின் செக்கு என வெட்டப்பட்டுள்ளது

கல்வெட்டு 25


கல்வெட்டுப் பாடம்:   

"ஸ்ரீ வடுகம்பட்டன் தன்னுடைய செக்கு வீசம்பட்டனுக்கு நகர மறிய பேர்பெறு குடுக்க இந் நகரமறி பிடாரியிக்கு திருவிளக்கினுக்கு நீர(க)ட்டிக் குடுத்(தா)ன் வீசம் பட்டன் இச்செக்கு"

தகவல்:

ரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் நத்தமேட்டிலுள்ள செக்கின் மீது, மேலுள்ளவாறு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் "ஸ்ரீவடுகம்பட்டன் தன்னுடைய செக்கு" என்று குறிப்பிடுவதன் மூலம், வடுகம்பட்டன் செக்குடைமையாளன் உறுதிப்படுத்தலாம். செக்குடைமையாளனான 'வடுகம்பட்டன்' என்பதை தன்னுடைய செக்கினைத் தன்பெயர் நிலைத்து நிற்கும் பொருட்டு, ஊரார் அறிய அவ்வூர்ப் பிடாரிக் கோயிலுக்கு, வீசம்பட்டன் மூலம் தாரை வார்த்துக் கொடுத்துள்ளான். வடுகம்பட்டன், பிடாரிக் கோயிலுக்குத் தன் செக்கினை நேரிடையாக வழங்காமல், வீசம்பட்டன் மூலம் தாரை வார்த்துக் கொடுத்துள்ளதால், வீசம்பட்டன்' என்பவன் சங்கரபாடியானாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் கோயில் நிர்வாகத்தில் பங்குபெற்ற செக்காரான சங்கரபாடியாரே கோயில் விளக்குகளுக்குக் கொடைகளைப் பெறும் பணியினையும் அதனைப் பராமரிக்கும் பணியினையும் மேற்கொண்டனர். 

கல்வெட்டு 26

கல்வெட்டுப் பாடம்:   

"சகர யாண்டு எண்ணூற் றெழுபத்தின் நேழு வாண கோபாடில் பெந்னை வடகரைக் காட்டாம் பூண்டியுடைய செக்கிழான் உலகளந்தான் விரட்டனிட்ட செக்கு இதி ரெட்டினான் தேவனார் கொரு முறள் யெண்ணை"

தகவல்:

திருவண்ணாமலைக்கு அருகில் ஆலையூர் நத்தமேட்டில் காணப்படும் செக்கின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், செக்கிழான் உலகளந்தான் விரட்டன் என்பவன் "செக்கிழான்" என்ற சொல்லின் மூலம் செக்குடைமையாளனாகக் காட்டப்பட்டுள்ளான். நிலவுடைமையாளன் "நிலக்கிழான்" என்று அழைக்கப்பட்டதைப் போன்று செக்குடைமையாளன் செக்கிழான்" என்று அழைக்கப்பட்டிருப்பது செக்காரில் செக்குடைமையாளர் இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றது.

 கல்வெட்டு 27


கல்வெட்டுப் பாடம்:   

"ஸ்வஸ்திஸ்ரீ சோமூர் மஹா தேவற்க்கு அஞ்ஞற்றுவர் இடுவிச்ச செக்கு"

தகவல்:

கரூர் வட்டம், வெள்ளியணை என்ற ஊரின் நத்தமேட்டுப் பகுதியிலுள்ள செக்கின் மீது, பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சோமூர் கோயிலிலுள்ள இறைவனுக்கு விளக்கு எரிப்பதற்காகும் எண்ணெயை ஆட்டுவதற்காக, வெள்ளியணையில் இருந்த 'ஐந்நூற்றுவர்' வணிகக்குழு, செக்குகளைத் தானமாக வழங்கியுள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட செக்குகளைச் செக்காரிடம் மானியமாகவோ, வாரமாகவோ கொடுத்து, அவர்கள் கோயிலுக்கு வழங்க வேண்டிய எண்ணெய் அளவினை நிர்ணயம் செய்து, அதனைக் கண்காணிக்கும் பணியினையும் கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.

கல்வெட்டு 28

     முதலாம் பராந்தக சோழனின் 15வது ஆட்சியாண்டில் கோவில் மதில் சுவரில் வெட்டப்பட்ட கல்வெட்டு.

 கல்வெட்டுப் பாடம்:

காவும் தெங்கும் இடம்பெறுவதாகவும் தமனகமும்

இருவாசியும் மருவும் செண்பகமும் செங்கழுநீரும்

மாவும் பலாவும் கமுகும் பனையும் உள்ளிட்டருவில்

பயன் மரமும் நடவும் இடவும் (பெறுவ)தாகவும் இட்ட

தெங்கும் பனையும் ஈழமுடறபெறாததாகவும்

பெருஞ்செக்கிடப் பெறுவதாக

தகவல்:

முதலாம் பராந்தக சோழனின் 15வது ஆட்சியாண்டில், திருவிடைமருதூருக்கு அருகில், ஐய்யப்பாடி என்ற ஊர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. அவ்வூரில் அமைக்கப்பட வேண்டிய மாளிகை, மரங்கள், பூந்தோட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இறுதியில் "பெருஞ்செக்கு" நிறுவப்பட வேண்டும் என்று கல்வெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சங்கரப்பாடியார்கள் கல்வெட்டுகள்:

கல்வெட்டுப் பாடங்கள்:

திருக்கோயிலூர் சபையோம் நகரந் திருக்கோயிலூர் சங்கரபாடியோம்; (தெ.இ.க.தொகுதி-1,55)

 

'திருநெல்வேலிச் சுத்தவல்லிப் பெருந்தெருவிற் சங்கரன்பாடியார் எண்ணெய் அளப்பாராக' (தெ.இ.க.தொகுதி-8,705)

 

'ஆமூர் கோட்டத்து மாமல்லபுரமாகிய சனனாதபுரத்துச் சங்கரபாடியான் கொள்ளம்பாக்கிழான் மாதேவன் எட்டி வைத்த திருநொந்தா விளக்கொன்று'” (தெ.இ.க.தொகுதி-23,98)


"இறைக்குடிகளில் பொன்காணவல்லா ரெனப்படுவாரை நோக்கி மாடவீதியார் கூடிக்

குடவோலை எழுதிப் புகவிட்டு தங்கள் சேரியில் நால்வரைக் குடவோலையில்

போந்தாரைக் கொள்வதாகவும் இப்பரி சேனையிலும் இருவரைக் கொள்வதாகவும்

இப்பரிசெய் சங்கரப்பாடியிலும் மூவரை(க்) கொள்வதாகவும்

இவர்களெல்லா ஜனத்துக்கு மொக்க பொன் காண்பார்களாகவும்" (தெ.இ.க.தொகுதி-06,295)

  சங்கரபாடியார். வாணியர், மணிக்கிராமத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், அஞ்சுவண்ணத்தார். நானாதேசிகள் போன்ற வணிகக் குழுக்கள், கோயில் ஆட்சிக் குழுவில் பங்கெடுத்துக் கொண்டன. சங்கரபாடியார் என்ற செக்கார் கோயில் நிர்வாகத்தில் பங்குபெற்றதோடு, கோயில் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்கி, நந்தா (நொந்தா) விளக்கு அளித்து அவற்றைப் பாதுகாக்கும் பணியினையும் செய்தனர். அவ்விளக்குகள் எரிவதற்காகக் கொடைகளைப் பெற்று அக்கொடைகளைப் பராமரிக்கும் பணியினையும் மேற்கொண்டனர்.

செக்கு மீதான வரிகள்:

செக்குத் தொழில் மீது விதிக்கப்பட்ட வரிகள், அதன் வணிகத் தன்மைக்கேற்ப, செக்குக்கடமை, செக்கார்ப்பாட்டம், செக்காயம், செக்கிறை, செக்குக்காணம், போன்ற பெயர்களில் வசூலிக்கப்பட்டுள்ளன. செக்குத் தொழிலுக்கும் செக்கு' என்ற பெயரில் தொழில்வரி வசூல் செய்யப்பட்டுள்ளதைக் கல்வெட்டில் காணமுடிகிறது. தனியார் செக்குகளை நிறுவிட வாய்ப்பளிக்கப்பட்ட போது, செக்கார் சமூகத்திலிருந்த செக்குடைமையாளர்கள் அரசின் அனுமதியினை உரிமக் கட்டணம் செலுத்திச் செக்குத் தொழிலை மேற்கொண்டுள்ளனர்.

"இருபதின்மர் சதுர்பேதிகளுக்கு பிரம்மதேயமாக கொடுத்து இவ்வூர் மநையும் மநைப்படப்பும் ஊராள்ச்சியும் செக்கும் தறியும் கூலமும் தரகும் கத்திக்காணமும்."

என்ற கல்வெட்டில், "செக்கும் தறியும்" என்பதில் செக்கு என்பது செக்குத் தொழில் உரிமம் ஆகும். தறி என்பது நெசவுத் தொழில் உரிமம் ஆகும். "செக்கு" என்ற பெயரில் உரிமக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு செக்குத் தொழில் உரிமம் வழங்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டின் மூலம் அறியலாம். செக்கு என்று குறிப்பிடப்படுவது பொதுவாகச் செக்கிலிருந்து வெளிப்படும் எண்ணெய் மீது இடப்பட்ட வரியாக இருந்த போதிலும், அது செக்கு இயந்திரங்களை (செக்கு) நிறுவுவதற்கு அரசால் வசூலிக்கப்பட்ட உரிமக் கட்டணமே ஆகும்.

முடிவுரை:

செக்குடைமையாளர்கள், செக்கிலிருந்து உற்பத்தி செய்த எண்ணெயில், செக்காருக்கு வழங்கிய கூலி போக, எஞ்சிய பெரும்பகுதி எண்ணெயைச் செக்கு வாணியர்" என்ற பெரும் எண்ணெய் வணிகர்களைக் கொண்டு வணிகம் மேற்கொண்டுள்ளனர். இத்தகைய பெரும்வணிகச் செக்காரே பிற்காலத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊர் மற்றும் கோயில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய செக்கார். "சங்கரபாடியார்" என்றும் அழைக்கப்படுவதைக் கல்வெட்டுகளில் காணலாம். நம் இனத்தின் பெருமைகளை இன்றும் செக்குக் கல்வெட்டுகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் தாங்கி நிற்கின்றன.

குறிப்புதவி:

1  தமிழ் இணைய பல்கலைக்கழகம்
2.   தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகள்
3.   தமிழக நாளிதழ்கள்
4.   கணேசன். நாக   "செக்கார் வணிக சமூகம் ஒரு வரலாற்றுப் பார்வை" – கல்வெட்டு இதழ் கட்டுரை
5.   ராசகோபால். சு "வரலாற்றில் செக்கு" – கல்வெட்டு இதழ் கட்டுரை

  1.  

 

செக்கு கல்வெட்டுகள் - 1

    

செக்கு கல்வெட்டுகள்

(பாகம்-1)

 

1.0 முன்னுரை

பழங்காலத்தில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அதனால், பல பொருள்கள் மீது அவற்றை நிலையாக எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று. முதலில் கல்லின் மீது எழுத வேண்டிய செய்தியை ஓவியம்போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு சாசனம் எனப்படும். கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டன. பின்னர் அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. சில செப்பேடாகவும் எழுதப்பட்டன. பல கல்வெட்டுகளில் ‘இந்த ஓலையை ஆதாரமாகக் கொண்டு கல்லிலும், செம்பிலும் எழுதிக் கொள்ளலாம்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள்கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல், உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும்.

2.0 கல்வெட்டின் பகுதிகள்

பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டிருக்கும்:

(1) மங்கலச் சொல்

(2) மெய்க்கீர்த்தி

(3) அரசன் பெயர்

(4) ஆண்டுக் குறிப்பு

(5) கொடை கொடுத்தவர்

(6) கொடைச் செய்தி

(7) சாட்சி

(8) காப்புச் சொல்

(9) எழுதியவர்

ஆனால் பல செக்கு கல்வெட்டுகளில் இம்முழுமை காணப்பெறாது. சில செக்கு கல்வெட்டுகளில் மட்டுமே இம்முழுமை காணப்படும்.

3.0 செக்கு சமூகம்

      செக்குத் தொழில் வேளாண் தொழிலை அடிப்படையாக கொண்டது. வேளாண் தொழிலில் பெரிய அளவில் நிலங்களை பெற்றிருந்த உடமையளார்கள், காணியுடையார், நிழக்கிலார், உழுவித்துண்போர் என அழைக்கப்பட்டனர்.  வேளாண் நிலங்களில் தங்கள் உழைப்பை செலுத்தியோர் உழுகுடி, உழவர், உழுதுண்போர் என அழைக்கப்பட்டனர். இதுபோன்ற வர்க்க பிரிவுகள் வேளாண் தொழிலை அடிப்படையாக கொண்ட அனைத்து தொழில்களிலும் காணப்பட்டன.

செக்கு தொழிலில் செக்குக் கருவிகளை  உடமையாக பெற்றிருப்போர் உயர்ந்தோராகவும் செக்கு தொழிலில் நேரடியாக தங்கள் உழைப்பை செலுத்தியோர் அதற்கு அடுத்த நிலையில் செக்காராகவும் அறியப்பட்டனர்.  செக்குக் கருவிகளை உடமையாக உழுவித்துன்போரும் பெற்றிருந்தனர்.

செக்கு கருவிகளைக் கொண்டு எண்ணெய் ஆட்டி பெரிய அளவில் வணிகம் செய்தோர் வாணிக செட்டியார் என்றும் எண்ணெய் ஆட்டும் தொழிலில் நேரடியாக தங்கள் உழைப்பை செலுத்தியோர் வாணியர் என்றும் அழைக்கப்பட்டனர், பிற்காலத்தில் சில சாதி, சமய, சமூக, ஏற்றத்தாழ்வுகள் காரணமாக வாணியர்கள் தங்களை உயர்வு கருதி வாணியச் செட்டியார் என்றே அழைத்துக்கொண்டனர். இன்னும் சிலர் ஆரிய வர்ணங்களோடு ஒப்பிட வேண்டி தங்களை வணிக வைசியர் என்றும் அழைத்துக்கொண்டனர். தமிழகத்தில் பல செக்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல செக்கு கல்வெட்டுகள் மூலம் அன்றைய கால வாணியர்கள் நிலையை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

3.0 செக்கு கல்வெட்டுகள்

கல்வெட்டு 1

கல்வெட்டுப் பாடம்:

 1.ஸ்ரீ கடம்பம் புவ[ந] [வர்]க்கு சாதனமி ட்ட

            ”ஸ்ரீ கடம்ப புவனநாதர்க்கு சாதனமாக இட்ட செக்கு”

தகவல்:

         திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலையில் உள்ள புங்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த நெடுமலை கிராமத்தில் வாடிவாசல் கருப்பு கோவில் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள களத்துமேட்டுப் பகுதியில் முட்புதர்களுக்கிடையே கிடந்த பாறைகளில் செக்குக்கல் ஒன்று எழுத்துப்பொறிப்புடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நெடுமலை கிராமத்தைச் சேர்ந்த நா.சதீஸ் குமார் என்பவர் அளித்த தகவலின் பேரில் பள்ளி முதல்வர் பாலா பாரதி, போடி ஏலக்காய் விவசாயிகள், சங்க கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்க ராஜ், வரலாற்று ஆசிரியர் கருப்பையா, தாயனூர் பழனியாண்டி, கொத்தமங்கலம் சத்யசீலன் ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனர். இதில் அந்த செக்கு கல்வெட்டு 76 செண்டிமீட்டர் வெளிவிட்டமும், 48 செண்டிமீட்டர் உள்விட்டமும் கொண்டுள்ளது. இந்த செக்கானது 13 செண்டிமீட்டர் விட்டத்தைக்கொண்ட துளையுடன் காணப்படுகிறது. ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழியில் எண்ணெய் ஆட்டுவதற்கான வசதி கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனை வரலாற்று ஆய்வாளர் திரு இராஜகோபால் சுப்பையா வாசித்து எடுத்துரைத்தார். மேலும் அவர் கூறியதாவது, ‘எழுத்துப் பொறிப்பின் அடிப்படையில் இந்தச் செக்கு கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்தச் செக்கிற்கு வடமேற்கே 150 அடித் தொலைவில் உள்ள மற்றொரு பாறையில் தலை உடைக்கப்பட்ட அய்யனார் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்களை ஆட்ட ஊருக்குப் பொதுவாக கல்செக்கு செய்து தருவது வழக்கம். அதில்தான், மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஆட்டுவார்கள். அதன்படி பார்த்தால், கண்டுபிடிக்கப்பட்ட இந்த உரலில் தான் கி.பி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த மக்கள் எண்ணையை ஆட்டி பயன்படுத்தியிருக்க வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.

கல்வெட்டு 2

கல்வெட்டுப் பாடம்:

‘ஸ்ரீ குந்தை காடன்முரி செய்வித்தது'

 

”காடன் முரி என்பவரால் மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட செக்கு”

தகவல்:

         1200 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான செக்கு கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்களான விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், சங்கீதா ஆகியோர் இணைந்து கண்டறிந்துள்ளனர். பழங்காலத்தில் மின்சாரம் இல்லாததால் விளக்குகள் எரிப்பதற்கும், சமையலுக்கும் எண்ணெயின் தேவை மிக மிக முக்கியமானதாக இருந்துள்ளது. எண்ணெய் எடுப்பதற்கு கல்லால் ஆகிய சிறு உரல் போன்ற கல்செக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை, கோயில் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென செய்து தானமாகத் தரப்பட்டன. செக்கில் எண்ணை ஆட்டுபவர்கள் செக்குக்குக் கூலியாக ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெயை கோயிலுக்கோ அல்லது அரசுக்கோ செலுத்தியிருப்பர். குறுநில தலைவர்களாக, ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் சிலர் இது போன்ற கல்செக்கை உருவாக்கி தானமாக கொடுத்துள்ளனர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நலம் பெறவும் வேண்டுதலின் பேரில் இத்தகைய செக்குகள் தானமாக தரப்பட்டுள்ளன. இப்படித் தானமாக தரும்போது அதைச் செய்து கொடுப்பவர் தன் ஊர், தந்தை பெயருடன் தன் பெயரையும் கல்வெட்டாக அந்தக் கல்செக்கில் பொறித்து தரும் வழக்கமும் இருந்துள்ளது. நாகலூரில் மாரியம்மன் கோயில் தெருவில், சாலையில் ஓரத்தில் இருந்த ஒரு கல்செக்கை ஆய்வு செய்தோம். கிழக்கு திசையில் சாய்ந்தபடி புதையுண்ட நிலையில் அந்தக் கல்செக்கு காணப்பட்டது. இதன் வெளிவிளிம்பு விட்டம் 67 செ.மீ, உள் விளிம்பு 54 செ.மீ, நடுவில் உள்ள குழியின் ஆழம் 32 செ.மீ என உள்ளது. உரலின் மையப்பகுதியில் ஒரு வரியில் கல்வெட்டு வளைவாக பொறிக்கப்பட்டுள்ளது. அதன் எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும்போது, பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் எனக் கருதலாம். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு இது. இது தமிழ் மற்றும் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதில் 'காடன்முரி' என்பது கல்செக்கை தானம் கொடுத்தவரின் பெயராகவும், 'குந்தை' என்பது அவரின் தந்தை பெயராகவும் இருக்கலாம் என கருதமுடிகிறது. 'ஸ்ரீ குந்தை காடன்முரி' என்பவர் இந்தக் கல்செக்கை செய்து தந்துள்ளார் என்பது இதன் பொருளாகும். செய்வித்தது என்ற சொல்லில் வரும் 'ய்' என்ற யகரம் இக்கல்வெட்டில் வித்தியாசமாக வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்வெட்டு 3


 


கல்வெட்டுப் பாடம்:

                    'காடனுத்த நாடி இடுவித்த செக்கு'

 

”காடனை நாடி மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட செக்கு”

தகவல்:

         மதுரை, வாடிபட்டி அருகே உள்ள சரந்தாங்கி, வெ. பெரியகுளம் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து வந்துள்ளார். அப்போது விவசாய நிலத்தில் வித்தியாசமான கருங்கல் பாறை ஒன்று இருந்துள்ளது. அந்த கருங்கல் பாறை செக்கு கல் போல இருந்துள்ளது. மேலும் அந்த பாறையில் பழங்கால தமிழ் எழுத்துக்களும் இருந்துள்ளது. இதையடுத்து பேராசிரியர் ராஜகோபால், இந்த கருங்கல் செக்கு பாறை குறித்து வரலாற்று ஆர்வலர்கள் சிலருடன் சேர்ந்து ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி, அந்த செக் பாறை 1300 ஆண்டுகள் பழைமையானது என்பதும், அதிலிருந்த எழுத்துக்கள் மூலம் குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் எழுத்தறிவோடு இருந்துள்ளனர் என்பதும் தெரிய வருவதாக ராஜகோபால் கூறுகிறார். ஆய்வாளர் ராமர், வேலுச்சாமி படியெடுத்து 1300 ஆண்டுகளுக்கு முந்தையது, என கூறினர்.9ம் நுாற்றாண்டின் முற்கால பாண்டியர் கால கல்வெட்டான இதில் 'காடனுத்த நாடி இடுவித்த செக்கு' என வட்டெழுத்தில் பொறித்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறினார். 'காடனுத்த நாடி' என்பதற்கு செக்கை உருவாக்கியவர் என்று பொருள், என்றார். இந்த கருங்கல் செக் உள்பட மதுரையைச் சுற்றிக் கண்டறியப்படும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தமிழரின் நாகரிகம் மிகவும் பழமையானது என்பதை நிரூபிக்க முடியும் என ராஜகோபால் கூறுகிறார்.

கல்வெட்டு 4


கல்வெட்டுப் பாடம்:

      ஸ்ரீ குடிகம் நல்லூரார் இடுவிச்ச கற்செக்கு பட்டசாலியன் உ’

 

”குடிகம் என்ற ஊரைச் சேர்ந்த நல்லூரார் அவர்களால் செய்விக்கப்பட்ட கல்செக்கு”

தகவல்:

         மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பெரியகட்டளை கிராமத்தில், வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதி, பேராசிரியர் அழகர்சாமி, கலைப்பண்பாட்டு ஆய்வாளர் காந்திராஜன், ஆர்வலர் அருண் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது மேட்டுக்காடு பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அருகில் 9-ம் நூற்றாண்டு பாண்டியர் கால வட்டெழுத்துடைய கற்செக்கு கண்டறியப்பட்டது. 'இங்கு கிடைத்த கற்செக்கு 32 அங்குலம் வெளிவிட்டம், 23 அங்குலம் உள் விட்டம், 14 அங்குலம் ஆழம் கொண்டது. கற்செக்கு உரலின் வட்டமான மேல் விளிம்பில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. தொல்லியலாளர்கள் சொ.சாந்தலிங்கம், சு.ராஜகோபால் உதவியோடு வாசித்ததில், ‘ஸ்ரீ குடிகம் நல்லூரார் இடுவிச்ச கற் செக்கு பட்டசாலியன் உ’ என பொறிக்கப்பட்டுள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில் கோயில்களுக்கு நிலதானம் வழங்கப்பட்ட தேவதான கிராமங்களும், பிராமணர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்ட பிரம்மதேய கிராமங்களும் நல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் 9, 10-ம் நூற்றாண்டுகளில் இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட இப்பகுதி குடிகம் நல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியகட்டளை என அழைக்கப்படுகிறது. மேலும் வழக்கமாகக் கல் செக்குகள் உரல் வடிவில் இருக்கும். ஆனால் இங்கு தொட்டி போன்ற வடிவில் உள்ளது. இதில் எண்ணெய் வெளியேற துவாரம் இருக்கிறது. எண்ணெய் வித்துக்களை ஆட்டுவதற்கு ஊருக்கு பொதுவாக கல்செக்கு செய்து தருவது அறச்செயலாகக் கருதப்பட்டுள்ளது'' என்றார்.


கல்வெட்டு 5

கல்வெட்டுப் பாடம்:

 தலையூர் கிட்சேரி புறன்டி வேட்டுவன் உத்தமன் போத்தன் நான சோழபாண்டியப் பல்லவரையன் மக்கள் போத்த வீமனும், போத்த நாச்சியுமிட்ட செக்கு’

”தலையூர் கிட்சேரி புறன்டி என்ற ஊரின் வேட்டுவன் உத்தமன் போத்தன் நான சோழபாண்டியப் பல்லவரையன் மகன்கள் போத்த வீமனும், போத்த நாச்சியுமிட்ட   செக்கு”

தகவல்:

         வேடசந்தூரை அடுத்த தொன்னிக்கல்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள குடகனாற்றின் மேற்கு கரையில் செக்கு உரல் கல்வெட்டு ஒன்று இருந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் சி.மாணிக்கராஜ், ரா.உதயகுமார், ஆ.கருப்பையா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், செக்கு உரலில் மைப்படி எடுத்த கல்வெட்டை கல்வெட்டு வல்லுனர் சாந்தலிங்கம் உதவியுடன் படித்து பார்க்கப்பட்டது. இது 11-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். தன் மேல் பகுதியில் 2 கல்வெட்டில், தலையூர் என்ற ஊரை சேர்ந்த கிட்சேரி புறன்டி வேட்டுவன் உத்தமன் போத்தன் நான சோழபாண்டியப் பல்லவரையன் மக்கள் போத்த வீமனும், போத்த நாச்சியுமிட்ட செக்கு என்று 2 வரிகள் இடம் பெற்றுள்ளது. அந்த கல்வெட்டின் அருகில் உள்ள மற்றொரு தனிப்பாறையில் போத்த நாச்சி உரல் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்பாட்டிற்காக சோழ பாண்டிய பல்லவராயனின் மகன் போத்தவீமனும், மகள் போத்த நாச்சியும் செக்கை செய்து கொடுத்துள்ளனர் என்று தெரியவருகிறது. மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிவதற்கு இந்த செக்கு உரல் கல்வெட்டு முக்கிய வரலாற்று ஆவணமாக அமையும் என்றனர். 


கல்வெட்டு 6

 

கல்வெட்டுப் பாடம்:

ஸ்ரீ வெண்பிநாட்டுக் குறண்டிக் காமன் அருளன் இடுவிச்ச செக்கு இதில் துட வெண்ணை மன்றத்து மாராயனுக்கு அட்டு(க) வேண்டவென்பான் இன் பாவம் கொழ்க

ஸ்ரீ வெண்பிநாட்டுக் குறண்டிக் காமன் அருளன் இடுவிச்ச செக்கு மன்றத்து மாராயானுக்கு துடவு அளவு எண்ணெய் கொடுக்க வேண்டாம் என சொல்பவன் பாவம் கொள்வான்”

தகவல்:

         தேனி மாவட்டம் போடியில் உள்ள ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ், மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்களான உதயகுமார், பாண்டிஸ்வரன் ஆகியோர் இணைந்து திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு பகுதியில் ஓவா மலைப்பகுதியில் கள ஆய்வு நடத்தினர். அந்த கள ஆய்வில், கி.பி. 10–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று செக்கு உரலில் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த வட்டெழுத்து கல்வெட்டு குறித்து பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் பேராசிரியர் சாந்தலிங்கம் கூறியது: இந்த செக்கு உரல் கல்வெட்டில், வட்டெழுத்து தமிழ்மொழியாக மாறிய நிலையில் எழுத்து பொறிப்புகள் காணப்படுகிறது. இந்த உரலை வெண்பி நாட்டில் குறண்டி என்னும் ஊரைச் சேர்ந்த கோமன் அருளன் என்பவர் செய்ததாக கூறப்பட்டுள்ளது. வெண்பிநாடு -  ஒரு ஆட்சிப் பகுதிகுறண்டி - ஊர்ப் பெயர்காமன்  அருளன் - கொடையாளி இடுகுறிப்பெயர்; இடுவிச்ச - உண்டாக்கிய, கொடுத்த; செக்கு - எண்ணெய் பிரிக்கும் பொறிதுடவு- ஓர் அளவு (liquid); எண்ணெய் - செக்கில் ஆட்டியநெய்; மன்றத்து - ஊர்மக்கள் கூடும் பொதுவிடம்மாராயம் (அன்) - பெண் பூப்பு எய்திய நற்செய்தியை சுற்றத்தாரிடம் சொல்பவன்; அட்டு(க) - நீர்கொண்டு தாரை வார்க்க, நீரட்டுதல், தானமாக கொடுக்கவேண்டவென்பான் - கூடாது என்று தடுப்பவன், கொழ்க  - கொள்க. இ ன் - இதன் என்பதில் இடையெழுத்து '' தேய்ந்து போயிருக்கலாம். குறண்டி என்பது இன்றைய மதுரை – அருப்புக்கோட்டைச் சாலையில் ஆவியூருக்கு அருகில் இருக்கும் ஊராகும். மேலும் இந்த ஊரில் வரலாற்று சிறப்பு மிக்க பராந்தகபருவதம் என்னும் மலையில் திருவல்லப்பெரும்பள்ளி, திருக்காட்டாம்பள்ளி என்ற பெயர்களில் 9 மற்றும் 10–ஆம் நூற்றாண்டில் சமணப்பள்ளி செயல்பட்டுள்ளது. இதன் மூலம் குறண்டி என்பது வரலாற்று பழமை வாய்ந்த ஊர் என்பதை அறிய முடிகிறது. இந்த செக்கு உரலில் எடுக்கும் துடவு எண்ணெயை மன்றத்து மாராயனுக்கு வழங்க வேண்டாம் என்பவன் பாவத்தை கொள்வான் என்று வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. துடவு என்பது ஒருவித முகத்தலளவை குறிக்கும் சொல்லாகும். மாராயன் என்பது அந்த காலத்தில் அரசாங்க நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒருவித பட்டமாகும். எனவே இந்த “கல்வெட்டில், மாராயன் என்ற அதிகாரிக்கு இந்த செக்கு உரல் மூலமாக எடுக்கப்படும் எண்ணெயை வழங்க வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் பாவத்துக்கு உட்படுவார்கள்” என்று எச்சரிக்கையும் இந்த கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு மூலம் கி.பி. 9 மற்றும் 10–ஆம் நூற்றாண்டில் அடர்ந்த இம்மலைப் பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்துடன் வாழ்ந்துள்ளதையும், அரசு அதிகாரிகளுக்கு கொடைகள் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது. பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கும் இந்த வட்டெழுத்து கல்வெட்டை தொல்லியல் துறையினர் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


கல்வெட்டு 7

  

கல்வெட்டுப் பாடம்:

                  கோடன் ( _ _ ?) நாடு இடு ஊர் செக்கு’

கோடன் இட்ட செக்கு

தகவல்:

         மதுரை அலங்காநல்லூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் சேர்ந்த கணேசன் கொடுத்த தகவலின்பேரில், மெய்யியல் ஆய்வாளர் ஹாருன் பாஷா மற்றும் ஆசிரியர் விவேக் இருவரும் அப்பகுதியில் கள ஆய்வு நடத்தினர். முட்புதருக்கு நடுவில் 5 செ.மீ ஆரமும், 1 அடி ஆழமும் கொண்ட, குழியுடன் இருக்கும் செக்கு ஒன்றைக் கண்டறிந்தனர். இந்த செக்கிற்கு மேல்புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட 2 வரி தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டறியப்பட்டது. எழுத்துகளின் வரிவடிவம் கிபி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கிறது. இக்கல்வெட்டில் “கோடன் ( _ _ ?) நாடு இடு ஊர் செக்கு’’ – எனும் செய்தி வெட்டப்பட்டு இருந்தது. கோடன் என்னும் ஊருக்குப் பொதுவாக வெட்டிக் கொடுக்கப்பட்ட செக்கு என்பது அதன் பொருள். ஊருக்கு பொதுவாக எள், ஆமணக்கு போன்ற விதைகளை ஆட்டி, எண்ணை திரிப்பதற்காக இச்செக்குகள் பயன்பட்டன. திருச்சி, விழுப்புரம், தேனி போன்ற இடங்களில் இச்செக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரையிலும் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செக்குக்கு அருகில் அதே பாறையில் எண்ணை சேகரிப்பதற்கு தொட்டியும் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் உள்ள கோடன் நாடு என்னும் பெயருக்கு இணையாக இதற்கு அருகில் உள்ள ஊர் கோடாங்கிப்பட்டி ஆகும். மேலும் இங்கு கோடன், காடன் என்னும் பெயரிடும் வழக்கு மக்களிடையே உள்ளது. கல்வெட்டினை தொல்லியல் ஆய்வு மாணவர் பென்சர் படித்து விளக்கினார். மேலும் பல தொல்லியல் தடயங்கள் குழுவினரால் பார்வையிடப்பட்டன.


கல்வெட்டு 8

 

 கல்வெட்டுப் பாடம்:

ஸ்ரீ விளக்கமாறனேன் என் மகன் மூக்கனைச்சாத்தி இட்ட செக்கு. பூசித்தனாற்ர்க்கு பிழி பிண்ணாக்கு மூன்று செக்கு’’

ஸ்ரீ விளக்கமாறனேன்னின் மகன் மூக்கனின் நினைவாக இட்ட செக்கு கோவிலில் பூசித்தவற்கு பிழியப்பட்ட பிண்ணாக்கு மூன்று தரவேண்டும்.”

தகவல்:

         சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. வாழப்பாடியைச் சேர்ந்த கவிஞர் பெரியார் மன்னன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கவிஞர் மன்னன், மருத்துவர் பொன்னம்பலம், பெருமாள் ஆசிரியர், ஜீவநாராயணன், வீராசாமி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழு புழுதிக்குட்டைப் பகுதியில் உள்ள கரியராமர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கல் செக்கில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.தரையிலிருந்து கல்செக்கானது 40 செ.மீ உயரமுடையது. இதன் வெளிவிட்டம் 57 செ.மீ.  உள் விட்டம் 45 செ.மீ அளவுடையதாகவும் இருக்கிறது. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். உள்விட்டம் உள்ள பகுதியில் இரண்டு வரிகளில் 12 வார்த்தைகளில் கல்வெட்டானது அமைந்துள்ளது. எழுத்தின் வடிவத்தைக் கொண்டு இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். 'ஸ்ரீ விளக்கமாறனேன்' எனக் கல்வெட்டு  தொடங்குகிறது. விளக்கமாறன் என்பவன் தன் மகன் மூக்கனை என்பவன் இறந்துவிட்டதால் அவன் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இதுவாகும். பழங்காலத்தில் எண்ணை வித்துக்களை ஆட்ட ஊருக்குப் பொதுவாக கல்செக்கு செய்து தரும் வழக்கம். மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை இந்த உரலில் ஆட்டி எண்ணையை எடுத்துக்கொண்டு கல்செக்குக் கூலியாக புண்ணாக்கைத் தரும் வழக்கம் இருந்துள்ளது. இப்போது கண்டறியப்பட்டுள்ள இந்த கல்செக்கு கல்வெட்டு மூலம் இங்கு வந்து வழிபடுவோருக்கு பிரசாதமாக பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றை தர சொல்லியிருப்பது ஒரு புதிய செய்தியாகும்.

கல்வெட்டு 9


கல்வெட்டுப் பாடம்:

…………………………’’

குரோதன ஆண்டில் புக்கண்ணராயர் ஆட்சிக்காலத்தில் கலைவாணிகன் என்பவன் இந்த கல்செக்கு உரலை ஊருக்கு தானம் அளித்துள்ளார்.”

தகவல்:

         காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அரியவகை செக்கு கல்வெட்டு ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதை வரலாற்று ஆய்வு மையத்தினர்  கண்டுபிடித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்செக்கு ஒன்று மண்ணில் புதைந்து கிடப்பதை தமிழக தொல்லியல்துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தை சார்ந்த அரியவகை கல்செக்காகும். இக்கல்செக்கு கிடைத்த பகுதி செக்குமேடு என்றும் அழைக்கப்படுகிறது. 1923-ஆம் ஆண்டில் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்கள் மக்கள் வாழ்வில் பெரும் இடம் பிடித்திருந்தது. சமையல் பயன்பாட்டிற்கும்,மருத்துவத்துக்கும் கல்செக்குகளே பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாத வீட்டிற்கும்,கிராமங்களில் விளக்கு இல்லையென்றால் தெருவிளக்காகவும் கல்செக்குகளே பயன்பட்டிருக்கின்றன. இவை அரசுக்கு வருவாயையும் ஈட்டித் தந்திருக்கின்றன. ஒரு மன்னரோ அல்லது பெரும் செல்வந்தரோ தனது குடும்பத்தார் உடல்நலம் பெறவேண்டி ஆலயத்திற்கோ அல்லது ஊருக்காகவோ கல்செக்கை தானமாக வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறு தானம் வழங்கும் செக்கில் எந்த ஆண்டு,யார் தானமாக வழங்கினர் என்பதையும் குறிப்பிட்டனர். அதன்படி இச்செக்கில் மூன்று வரியில் குரோதன ஆண்டில் புக்கண்ணராயர் ஆட்சிக்காலத்தில் கலைவாணிகன் என்பவன் இந்த கல்செக்கு உரலை ஊருக்கு தானம் அளித்துள்ள செய்தி இடம்பெற்றுள்ளது.


கல்வெட்டு 10

  

கல்வெட்டுப் பாடம்:

            ‘1. ஸ்ரீ பரதன் கூரிதனநன் மகன் றிக்கு (செக்கு 1)

2. ஸ்ரீறைபொ மகன் செக்கு’ (செக்கு 2)

”முதல் செக்கில் ஸ்ரீ பரதன் கூரிதன் மகனின் செக்கு என்றும் 2 ஆவது கல்செக்கில் ஸ்ரீறை பொ மகனால் செய்விக்கப்பட்ட செக்கு என வெட்டப்பட்டுள்ளது.”

தகவல்:

   திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் கோவிலூர் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், மதன்மோகன், ஸ்ரீதர், பழனிச்சாமி, நந்தகுமார், ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூன்று செக்கு கல்வெட்டுகளும் இரண்டு நடுகற்களும் கண்டெடுக்கபட்டன . இதில் உள்ள 2 செக்கு கல்வெட்டில் 10 ஆம் ஆண்டு எழுத்தமைதியில் கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு “ஸ்ரீ பரதன் கூரிதனநன் மகன் றிக்கு “ என்று வெட்டப்பட்டுள்ளனது. இதன் பொருள் ஸ்ரீபரதன் என்பவர் மகன் இச்செக்கை செய்தளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு செக்கில் ஸ்ரீறைபொ மகன்  என்று உள்ளது. இதன் பொருளும் செக்கு செய்து கொடுத்தவர்களின் பெயராக இருக்க வாய்ப்புள்ளது. இது அதிகமான பொறிந்து போய் உள்ளதால் படிக்க இயலவில்லை. இந்த செக்குகள் மூலம் அந்த காலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டிற்கும் கோயில் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இந்த செக்குகள் மூலம் இரண்டு புதிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. ஏற்க்கனவே கோவிலில் கிடைக்க பெற்ற  கல்வெட்டுகள் மூலம் இக்கோவிலின் காலம் இதுவரை 12 ஆம் நூற்றாண்டு என கணிக்கபட்டிருந்தது. இந்த கோயிலில் சிவனுக்கு விளக்கு ஏற்றவும் மக்களின்  பயன்பாட்டிற்கும் எண்ணெய் உற்பத்தி செய்ய 3 செக்குகள் ஏற்படுத்தப்பட்டன என்றும் அறியலாம். இதன் மூலம் கோயிலின் காலம் 2 நூற்றாண்டுகள் முன்னோக்கி செல்கின்றது. இரண்டாவதாக கோவிலூர் சிவன் கோயில் அருகே ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புலிகுத்திப் பட்டான் நடுகல்லிலும் மங்கல பரதன் மகன் வில்லி என்பவர் இறந்த செய்தி வருகிறது. இந்த பரதன் என்ற பெயர் இந்த செக்கு கல்வெட்டிலும் வருகிறது. எனவே இந்த பகுதியை பரதன் என்ற வம்சா வழியை சேர்ந்தவர்களின் ஆளுகைக்கு கீழ் இப்பகுதி இருந்தது என அறியலாம். இவையும் ஆய்வுக்குரியவைகளாகும்


கல்வெட்டு 11

 

கல்வெட்டுப் பாடம்:

 ஸ்வஸ்திஸ்ரீ இச்செக்கு வைத்தேன். விளக்கெறிக்க ஆவடுகன் கவரனேன். இதி ஆட்டினார் ஒரு உழக்கு எண்ணெய் அட்டுக

”மங்கலமாக இச் செக்கு வைத்தேன் இச்செக்கினை விளக்கெறிக்க எண்ணெய் ஆட்டுவதற்கு ஆவடுகன் கவரனேன் செய்துகொடுத்துள்ளார். இதில், எண்ணெய் ஆட்டுபவர்க்கு ஒரு உழக்கு எண்ணெய் வழங் வேண்டும் என்று குறிப்பிடுகிறது.”

 தகவல்:

      விழுப்புரம் அடுத்த கெடார் அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் ரமேஷ், ரங்கநாதன் லைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுப்பட்டபோது, அங்குள்ள உரல்கொல்லை என்னுமிடத்தில் எழுத்து பொறிப்புடன் கூடிய கல்செக்கு ஒன்றை  கண்டுபிடித்தனர். இது குறித்து உதவி பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது; கிராமத்தில் உள்ள உமாமகேஸ்வரர் சிவன் கோவிலுக்கு அருகில் உரல் கொல்லை என்று அழைக்கப்படும் நிலத்தில் 122 செ.மீ.. நீளம், 117 செ.மீ., அகலம், உட்புற குழி 30 செ.மீ. கொண்ட கல் செக்கு உள்ளது. இதன் ஓரத்தில் மூன்று வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. செக்கின் அருகே சிவன் கோவில் உள்ளது. கோவிலுக்கு விளக்கு எறிக்கவே இந்த செக்கு செய்து கொடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. இதன் எழுத்தமைப்பை கொண்டு இச்செக்கு கி.பி., 10ம் நூற்றாண்டை சேர்ந்தது எனலாம். முதலாம் ராஜேந்திர சோழனின் மலேசிய (கிடாரம்) வெற்றிக்கு பிறகு கிடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டான்.திருவாரூருக்கு அருகில் கிடாரம்கொண்டான் என்ற ஊர் உள்ளது: இதுபோல் கிடாரம்கொண்டான் என்று இருந்து அதுவே சுருங்கி கிடார் என்றாகி பின். கெடா என்று மறுவி வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற கல்வெட்டு கேட்பாரின்றி கிடக்கிறது பழமையையும், வரலாற்று சிறப்பையும் கருதி இவற்றை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


கல்வெட்டு 12

 

கல்வெட்டுப் பாடம்:

தெந்முட்ட நாட்டு கெண்ணிமங்கலத்து குடியான் சேவடி இடுவிச்ச செக்கு

”தென்முட்ட நாட்டு கிண்ணிமங்கலத்து ஊரைச் சேர்ந்த குடியானவன் சேவடி என்பார் (அடியார்கள்) செய்து கொடுத்த செக்கு.”

 தகவல்:

      தேனி ஆண்டிபட்டியில் 9ம் நூற்றாண்டின் செக்கு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் கண்டுபிடித்தார். இது 9ம் நூற்றாண்டின் பாண்டியர் கால கால்வெட்டு என ஆய்வாளர் ராஜவேலு தெரிவித்தார்.அந்த காலத்தில் வெளியூர் பயணிக்கும் பயணிகள் துறவிகள், வணிகர்கள், மக்கள் உணவு: சமைக்க நீர்நிலை அருகே செக்கு செதுக்குவர். இதை கோயில்களுக்கு மன்னர், மக்கள் தானமாக தரும் போது தந்தவர் விபரம் பொறிக்கப்படும் இக்கல்வெட்டு மதுரை கிண்ணி மங்கலத்தில் கிடைத்த தமிழ் பிராமி வட்டெழுத்து கல்வெட்டுடன் ஒன்றி போகிறது. இதிலுள்ள 'சேவடி' இறை தொண்டு செய்யும் 'சேவடி கூட்டம்' என்பவர்களை குறிக்கிறது. பராம்பரிய பெருமையுள்ள கல்வெட்டை பாதுகாக்க வேண்டும். என்றார்.    

கல்வெட்டு 13

  'பவித்ர மாணிக்கம்' எனும் பெண்'தலசோமர் கட்டிய கோவிலுக்கு கொடுத்துள்ள செக்கு'.

தகவல்:

      . சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை, குன்னூர் அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்கள், விஜி, சந்தியா, இளையராஜா, விஜய், ரேவந்த், சிவராஜ் ஆகியோர், கடந்த, 4ல், கல்லூர் மலைக்கிராமத்தில் களப்பயணம் மேற்கொண்டனர். அப்பகுதியில், செக்கு கல்வெட்டை கண்டறிந்து, தமிழ் ஆசிரியர் பெருமாளிடம் தெரிவித்தனர்ஆய்வு செய்த சென்னையைச் சேர்ந்த, மூத்த தொல்லியல் ஆய்வாளர் ராஜகோபால் கூறியதாவது: எண்ணெய் ஆட்ட, கல்லால் வடிவமைத்த செக்குகள், கோவிலுக்கு கொடையாக வழங்கப்பட்டன. எண்ணெய் பிழிந்தெடுக்கும் தொழில், அரசுக்கு முக்கிய வருவாயாக இருந்தது. இதனால், உடன் பிறந்தவர், உறவினர்கள் நலம் பெற வேண்டி. கோவிலுக்கு செக்கு செய்து கொடுப்பர். அதில், தானமாக வழங்கும் நபர் விபரம், கல்வெட்டாக வைக்கப்படும். 'பவித்ர மாணிக்கம்' எனும் பெண், 'தலசோமர் கட்டிய கோவிலுக்கு கொடுத்துள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.  அதன்படி, 10ம் நூற்றாண்டில், சோழர் காலத்துடைய இந்த கல்வெட்டில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல் செக்குகள், எட்டாம் நூற்றாண்டு முதல், கல்வெட்டுகளுடன் கிடைக்கின்றன கல்வராயன்மலையில், சின்னமாங்கோட்டில், 11ம் நூற்றாண்டு, ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு வாழப்பாடி புழுதிக்குட்டையில் செக்கு கல்வெட்டு முன் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகோபால் கூறுகையில், ‘‘10ம் நூற்றாண்டில் தேவரடியாராக விளங்கிய பெண்களுக்கு மாணிக்கம் என்று பெயர் சூட்டப் பட்டது. அப்போது, விளக்கு எரிப்பதற்கும், சமைக்கவும்எண்ணெய் இன்றியமையாததாக இருந்தது. எனவே எண்ணெய் ஆட்ட, கல்லால் ஆன செக்குகள் கொடையாக வழங்கப்பட்டன என்றார். பழங்காலத்தில் தனது உடன் பிறந்தோர் அல்லது உறவினர் நலம் பெற வேண்டி கோயிலுக்கு செக்குக்கல் செய்து கொடுப்பார். இவ்வாறு கொடுக்கும் செக்கில், அவரது விவரம் கல்வெட்டாக வெட்டி வைக்கப்படும். கிபி 8ம் நூற்றாண்டு முதல், தமிழகத்தில் பல இடங்களில் செக்குகள், கல்வெட்டுகளுடன் காணக்  கிடைக்கின்றன. 

கல்வெட்டு 14

 

கல்வெட்டுப் பாடம்:

 ஸ்வஸ்திஸ்ரீ கூரியூர் பெருளான் சின்பகை மகன் செக்கு மாதேவர்க்(கா)………கத்தான் இது

கூரியூரை சேர்ந்த பெருவன் என்ற சினபகையின் மகன் சேந்தன் என்பவர் இந்த செக்கை செய்து கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செக்கில் எடுக்கப்படும் எண்ணெய்யில் ஒரு ஆழாக்கு தினமும் மகாதேவர் என்ற இறைவனுக்கு வழங்க முறை செய்யப்பட்டுள்ளது. மேலும், இறைவனுக்கு நாள்தோறும் வழங்கப்படும் எண்ணெய், தர்மத்தை காப்பவர்களின் கால்தூசி, என் முடிமேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.”

தகவல்:

       வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் சோழர்கால செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது 11ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமம் பெரிய ஏரிக்கரையில் செக்கு கல்வெட்டு இருப்பதாக, அதே கிராமத்தை சேர்ந்த முனைவர் சுப்பிரமணி என்பவர், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் பிரகாஷ், செயலாளர் பாலமுருகன், இணைச்செயலாளர் பிரேம்குமார் மற்றும் குழுவினர் செல்லங்குப்பம் கிராமத்திற்கு சென்றனர். பெரிய ஏரிக்கரையில் மண்ணில் புதைந்திருந்த கல் செக்கை தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த கல் செக்கை சுற்றி கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. சோழர் காலம் 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. கூரியூரை சேர்ந்த பெருவன் என்ற சினபகையின் மகன் சேந்தன் என்பவர் இந்த செக்கை செய்து கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செக்கில் எடுக்கப்படும் எண்ணெய்யில் ஒரு ஆழாக்கு தினமும் மகாதேவர் என்ற இறைவனுக்கு வழங்க முறை செய்யப்பட்டுள்ளது. மேலும், இறைவனுக்கு நாள்தோறும் வழங்கப்படும் எண்ணெய், தர்மத்தை காப்பவர்களின் கால்தூசி, என் முடிமேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவம் குழுவினர் கூறுகையில், `இந்த செக்கு கல்வெட்டு இவ்வூரில் கிடைத்தது அரிய கல்வெட்டு. இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் மகாதேவர் என்பது சிவனைக் குறிக்கிறது. மேலும், செல்லங்குப்பத்தில் அழிந்துபோன சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் மேலும் கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.


கல்வெட்டு 15

  ஸ்ரீகோவஞ்சேந்தன் என்பவர் இந்த செக்கினை ஊர் மக்களின் நலனுக்காக செய்தளித்துள்ளார்.

தகவல்:

      அருப்புக்கோட்டை அருகே கி.பி.7-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கள ஆய்வு அருப்புக்கோட்டை அருகே உள்ள மூளிப்பட்டி என்னும் கிராமத்தின் விவசாய நிலத்தில் உள்ள ஒரு பாறையில் சற்று மாறுபட்ட வடிவமுடைய எழுத்துக்கள் காணப்படுவதாக நிலத்தின் உரிமையாளர் கனிராஜ், கணேஷ் பாண்டி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன், வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் கள ஆய்வு மேற்காண்டனர். இதில் 76 செ.மீ. வெளிவிட்டமும், 48 செ.மீ. உள்விட்டமும் 13 செ.மீ. துளையுடன் கூடிய ஓர் செக்கின் மேற்புறத்தில் ஒரு வரியுடன் கூடிய கி.பி. 7-ம் நூற்றாண்டினை சார்ந்த வட்டெழுத்துக்கள் காணப்படுவதனை உறுதி செய்துள்ளனர். இந்த எழுத்துக்கள் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளருமான சாந்தலிங்கம் அவர்களின் உதவியோடு படிக்க பெற்றது. ஒரு வரியுடன் கூடிய இக்கல்வெட்டில் ஸ்ரீகோவஞ்சேந்தன் என்னும் ஒரு பெயர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள ஸ்ரீகோவஞ்சேந்தன் என்பவர் இந்த செக்கினை ஊர் மக்களின் நலனுக்காக ஏற்படுத்தி இருக்காலம். முற்காலத்தில் ஊருக்கு பொதுவாக இது போன்ற செக்கு ஏற்படுத்துவது வழக்கத்தில் இருந்துள்ளது. இந்த செக்குகளில் மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஆட்டி பெறப்படும் எண்ணெய்யை பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

கல்வெட்டு 16

கல்வெட்டுப் பாடம்:

 பொடுவித்த செக்கு, குப்பம்மாக்கு கணக்கு கந்தசுவாமி, எழுத்தும் கல்வேலை நாகப்பன்

 பொடுவித்த செக்கு, குப்பம்மாக்கு கணக்கு கந்தசுவாமி, எழுத்தும் கல்வேலை நாகப்பன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அந்த வாசகத்தில் உள்ள ‘பொடுவித்த’ என்பதை பொடி செய்வதற்கான செக்கு என கருதலாம். குப்பம்மாக்கு கணக்கு கந்தசுவாமி என்பதை ‘குப்பம்மா கணக்கில் கந்தசுவாமி உபயம் செய்தது என்று பொருள் கொள்ளலாம்.

தகவல்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி, சேவூர் போன்ற இடங்களில் முந்தைய காலங்களில் எண்ணை தயாரிப்பதற்கான செக்குகள் அதிகளவில் இருந்துள்ளன. எண்ணை வணிகம் இப்பகுதிகளில் அதிகளவில் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் நடுவச்சேரி அங்காளம்மன் கோவில் எதிரில் சாலையோரம் கல்வெட்டு எழுத்து பதிக்கப்பட்ட செக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மின்சார கருவிகள் வந்த பிறகு நிலக்கடலை அரைப்பதற்கான உரல்கள், எண்ணை செக்குகள் போன்றவை பயனற்று ஆங்காங்கே வீசப்பட்டிருக்கலாம். அப்படி கண்டெடுக்கப்பட்டது தான் இந்த செக்கு. இது 17-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணேசன் எழுதிய கொங்கு நாட்டு கல்வெட்டுக்கள் நூலில் குறிப்பு காணப்படுகிறது. அங்குள்ள கோதைப்பிராட்டீஸ்வரர் கோவிலுக்கு தீபம் ஏற்ற இந்த செக்கில் எண்ணை ஆட்டி கொண்டு செல்லப்பட்ட குறிப்புகளும் உள்ளன எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்வெட்டு 17


கல்வெட்டுப் பாடம்:

                “பரதன் காரிதன் மகன் ன்றிட்டிட செக்கு

  2 கல்செக்குகளை பரதன் காரிதன் மகன் செய்துகொடுத்துள்ளார்.

தகவல்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிலூரைச் சுற்றிலும் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த எச்சங்கள் காணப்படுகின்றன. கோவிலூரில் உள்ள திருமூலநாதர் கோயிலின் கருவறையின் தெற்கு பக்கத்தில் முப்பட்டைக் குமுதத்தில் வீர ராஜேந்திர சோழனின் 3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் ‘கங்க குறுநில மன்னன் பிரிதிவி கங்கன் அரசகங்கள் நாயன் வருகிறான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் இராஜராஜ சோழனின் 29-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் ‘பிருதிவி கங்கன் கூத்தாடுந்தேவன்’ என்பவரின் பெயர் உள்ளது. கோயிலுக்கு தெற்கு பள்ளத்தாக்கில் பெரிய ஏரிக்கு கிழக்கில் விவசாய நிலத்தில் அதே நிலத்தில் ஒரு கல்செக்கும் புதைந்துள்ளது. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “பரதன் காரிதன் மகன் வென்றிட்டிட வாட்டி மோடி செக்கு” என பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செக்கின் கல்வெட்டு தவிர மற்ற பகுதி கழனியில் புதைந்துள்ளது. இந்த செக்கின் விட்டம் 75 செ.மீ. இந்த நிலத்திற்கு தெற்கில் மேட்டில் வெங்கடேசன் என்பவரது நிலத்தில் இரண்டு கல் செக்குகள் காணப்படுகின்றன. ஒரு செக்கில் “பரதன் காரிதன் மகன் (வெ)ன்றிட்டிட செக்கு” என்றுள்ளது. இந்த செக்கின் விட்டம் 1 மீட்டர் 20 சென்டி மீட்டர். அதே நிலத்தில் வேறு கல் செக்கும் மேற்படி கொடையாளி அளித்திருக்கிறார். இந்தச் செக்கின் விட்டம் 1மீட்டர். செக்குகள் செய்த காலத்தில் அதிக அளவில் இலுப்பை மரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆமணக்கு அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும். இவற்றின் விதைகளை செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுத்து வீட்டுக்கு பயன்படுத்தி கோயிலுக்கும் விளக்கேற்றியிருக்க வேண்டும். தற்காலத்தில் இலுப்பை மரங்கள் இல்லை என்பதுடன் ஆமணக்கு பயிரிடுவதும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

கல்வெட்டு 18 

கல்வெட்டுப் பாடம்:

 கோனு

கோனு இட்ட செக்கு.”

தகவல்:

       தாளவாடி மலையிலுள்ள மலைக் கிராமத்தில் மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்ததை வெளிப் படுத்தும், கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய கல் செக்கு கண்டறியப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், மரூர் கிராமம் அருகே தொல்லியல் மேடு ஒன்றைக் கண்ட வரலாற்று ஆர்வலர்கள், அங்கு  ஆய்வு மேற் கொண்டனர். அந்த ஆய்வில் மரூர் கிராமத்தில், சுமார் 4 அடி உயரமுள்ள கல் செக்கு ஒன்றையும் அதன்  கீழ்ப்பகுதியில் தமிழ் பிராமி போன்ற குறியீடுகளும்  காணப்பட்டன. அதைப் படியெடுத்து தொல்லியல் அறிஞர்களான சென்னை ராஜகோபால், ஈரோடு புலவர் செ.ராசு ஆகியோர், கண்ணாடி பிம்பத் தோற்றத்தில் 'கோனு' என்று படித்தறிந்தனர். மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் இவை என்றும் உறுதி படுத்தினர். இதே போல சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன் மலைப் பகுதியிலும் 10ம் நூற்றாண்டின் செக்கு கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

கல்வெட்டு 19

      சோம ஸ்ரீ சாலிவாகன சகாப்தம், கிபி 1626 தை மாதம் 14ம் தேதி வெள்ளிக்கிழமை குரும்புலியூர் பஞ்சநதீஸ்வரர் தர்மசம்ரதனி அம்மன் நித்திய அபிஷேகத்திற்காக, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வீரம ரெட்டியார் குமாரர் சுப்பி ரெட்டியார் என்பவரே இந்த கல் செக்கினைச் செய்துகொடுத்திருக்கிறார். இந்தக் கல் செக்கைப் பயன்படுத்தும் பொதுமக்கள், அதிலிருந்து பெறப்படும் எண்ணெயில் அரைப்படி என்னை வீதம் குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவிலுக்கு தானமாக வழங்க வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது..

தகவல்:

பெரம்பலூர் அருகே  பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சி யாளர் செவ்வேல் ஆகியோர் இயற்கை வேளாண் சாகுபடியாளரான எளம்பலூர் உப்போடை கார்த்திகேயன் என்பவருடன் பாளையம் கிராமத்திற்கு வந்து, அங்கு ஆர்சி தொடக்கப்பள்ளி, செபஸ்தியார் மேடை ஆகியவற்றின் நடுவே சுமார் 7அடி உயரமுள்ள 2 கல்செக்குகள் இருப்பதை கேள்விப்பட்டு நேரில் வந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியில் அவர்களுக்கு சுமார் 400ஆண்டுப் பழமையான கல்செக்கு என்ற கல்வெட்டுத் தகவல் இருந்தது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பிறகு ஆராய்ச்சியின் முடிவில் வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன் தெரிவித்ததாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை, வேலூர் ஆகிய கிராமங்களில் அப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கு திருவிளக்கு பூஜைகளுக்கு எண்ணெய் வழங்க உபயமாக வசதி படைத்த நபர்களால் அக்காலத்தில் அந்தந்த ஊர்களின் பயன்பாட்டிற்காக கல்செக்கு செய்து கொடுத்திருப்பது தெரிய வருகிறது. இதில் மற்ற ஊர்களில் 20ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்பட்டாலும் பாளையத்தில் மட்டும் 393ஆண்டுகள் பழமை வாய்ந்த 17ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப் பட்டுள்ளது. 7அடி உயரத்திற்கும் 3அடி அகலத்திற்கும் உள்ளதாக வடிவமைக்கப் பட்டுள்ள கல்செக்கு அதிநவீனமானதாகக் காணப் படுகிறது. அது தற்போது பராமரிப்பின்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை இதனைப் பாது காத்து அடுத்து வரும் சந்ததிகளுக்கு தமிழர்கள் கல்செக்கினைப் பயன்படு த்திய விதம், கோவில்களின்மீது காட்டிய அக்கரை தெரியவரும். இதுபோன்ற 400ஆண்டு பழமையான கல்வெட்டு வேறு இடங்களில் இதுவரை கண்டறியப் படவில்லை எனத் தெரிவித்தார்.

                                                         (தொடர்ச்சி: செக்கு கல்வெட்டுகள் - 2)