Thursday, March 24, 2022

வலங்கை - இடங்கை வரலாற்றில் வாணியர்கள்

 

வலங்கை - இடங்கை வரலாற்றில் வாணியர்கள்

1.0   முன்னுரை

  வலங்கை இடங்கை வரலாறு பிற்கால சோழர்காலத்தில் தொடங்குகின்றது. வலங்கை இடங்கை புராணம் பற்றிய சுவடிகள், வலங்கை சரித்திரம் பற்றிய சுவடிகள், இடங்கை வலங்கை சாதி பற்றிய வரலாற்று சுவடிகள்(1), புதுவை இடங்கை வலங்கை சாதி பற்றிய வரலாற்று சுவடிகள்(2) கீழ்த்திசை நூலகத்தில் காணக்கிடைக்கின்றன. இச்சுவடிகளினை 1995 ஆம் ஆண்டு இணைத்து தமிழக அரசு பதிப்பித்தது. இச்சுவடிகளில் வாணியர்கள் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணக்கிடைக்கின்றன. இச்சுவடிகளில் இடங்கை வலங்கை சாதி பற்றிய வரலாற்று சுவடியில் (1) வகைப்படுத்தப்பட்ட 98 வகை சாதிகளுக்குள் இடங்கை பிரிவில் 24 வது சாதியாக வாணிய நகரத்தானும், 46 வது சாதியாக செக்காட்டு வாணியனும் கொடுக்கப்பட்டுள்ளது. வாணியர்கள் வைத்திருந்த அடையாளச் சின்னங்கள் பற்றியும் விரிவாவாக தரப்பட்டுள்ளன.

2.0   வலங்கை -இடங்கை சுருக்க வரலாறு

வலங்கை இடங்கை புராணம் ‘ராசிப் புள்ளையனுக்கு ஒழிகரே நாட்டுப் புன்னப்பான் எழுதிக்கொடுத்த பட்டயம்’ என தொடங்குகின்றது. இடங்கை வலங்கை சாதி பற்றிய வரலாற்று சுவடி ஒன்றில் (1) இடங்கையில் 10 சாதிகள் மட்டுமே இருந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.

   ‘இடங்கை - வலங்கைப் போராட்டம் சோழர் காலத்தின் மையப் பகுதி என்று கருதப்படும் 11ஆம் நூற்றாண்டின் இறுதி - 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான சுமார் 900 ஆண்டுகள் இப்போராட்டம் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் தொடர்ந்து குறிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்த சாதிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்து நீண்ட காலங்களாகத் தங்களுள் பூசலிட்டு வந்ததாக அக்குறிப்புகள் பேசுகிகின்றன. இடங்கை-வலங்கை போராட்டம்   தொடக்க காலம் எனபது  கி.பி.பத்தாம் நூற்றாண்டு என்பதை அறிய முடிகிறது.                    

பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக  இடங்கை-வலங்கைப் போராட்டம் நடந்துள்ளதாக சான்றுபகருகின்றது. 'இடங்கை-வலங்கை சாதி வரலாறு ' எனும் தலைப்பிட்ட கையெழுத்துச் சுவடி சென்னை பல்கலைக்கழக  நூலகத்தின் பன் சுவடிகள் பிரிவில் காணப்படுகிறது!  இச்சுவடியானது, இடங்கை-வலங்கை பிரிவுகளைச் சேர்ந்த,  98  சாதிகள்  கரிகால சோழன் காலத்தில் ஏற்பட்டன என்று கூறுகின்றது.

நடக்காத, நம்ப இயலாத  கதைகளை, புராணங்களை, உண்மையாக நடந்த வரலாறுகள் போலவும், நடந்த உண்மையான வரலாற்றை, உண்மைகளை புராணங்கள், என்றும் திரித்து கூறுவதும்  பிராமணீயத்தின்  செயல்பாடுகளில் ஒன்றாக இருந்துவருகின்றது.

தென்னிந்திய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்  அவர்கள், "இடங்கை-வலங்கைப் பாகுபாடு  எவ்வாறு தொடங்கியது  எனபது மர்மமாக  இருக்கிறது என்றும் பழைய காலத்தில் இருந்தே  இப்போராட்டம் இருந்தது" எனவும் குறிப்பிடுகின்றார்.

இடங்கை-வலங்கைப் போராட்டம்  கி.பி.பத்தாம் நூற்றாண்டில், ஆதித்ய கரிகாலன் காலத்தில், ஆதித்ய கரிகாலன் பிராமண அதிகாரிகளால் கொல்லப்பட்டு, இயற்கை நீதிக்கு  எதிராக, உத்தம சோழன் அரசனாகப்பட்ட  சூழ்நிலையில் தொடங்கியது என்பது விளங்குகிறது. உத்தம சோழன் அரசன் ஆக்கப்பட்ட முறையை  எதிர்த்த,   அதனை ஏற்க இயலாத, உழைக்கும் மக்கள், ஆதித்ய கரிகாலன் ஆதரவுப்  படைகளுக்கும், உத்தம சோழனின் ஆட்சியை ஏற்றுகொண்ட  பிராமணர்கள், அவர்களது ஆதரவாளர்களுக்கும்  இடையில் ஏற்பட்ட மோதல்கள், போராட்டங்களே. இடங்கை-வலங்கைப் போராட்டத்தின்  தொடக்கம் எனபது இதனால்  எளிதாக  விளங்குகின்றது இது உறுதிபடுத்தப்படாத தகவலாக உள்ளது.

கோயில்கள்  அந்தணர்கள் என்னும் பிராமணர்களின் கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில்  வந்துவிட்டப் பிறகு, பிராமணர்கள் தங்களது ஆதிக்கம்,மற்றும் தங்கள்  இன நலத்தை  தொடர்ந்து  தக்கவைத்துக் கொள்ள எண்ணி, பிற சமுதாயத்து மக்களை, குறிப்பாக உழைக்கும்  கீழ்தட்டு  மக்களை அடக்கி  ஆளாவும், அடிமைப் படுத்தவும்  தங்களது அதிகாரத்தை  பயன்படுத்தி வந்துள்ளனர்.

     ஆதாவது பெரிய கோவில்களையும் தேவதானங்களையும் பிராமனர்களிடம் வயல்வெளிகளை நிழக்கிழார் மற்றும் வேளாளர்களிடம் இழந்த வணிகர்களும் ஆசாரிமார்களும் பூசகர் என்னும் அந்தஸ்தை அடைய இதர சிறு கோவில்களையும் வணிகதளங்களையும் கைப்பற்ற நடந்த இன மோதலே இந்த வலங்கை இடங்கை சண்டை.

வலங்கை-இடங்கை சண்டை என்பது போர்க்களம் கண்ட சண்டை கிடையாது தெருவிலே முட்டி மோதிக்கொண்ட செட்டியார்களும் அவர்களுக்கு உட்பட்ட உழைக்கும் வர்க்கத்தினரும்  மற்றும் ஆசாரிகளும் அவர்களுக்கு உட்பட்ட  சமூகத்தவரும் கொண்ட மோதலே இந்த இடங்கை வலங்கை சண்டை இது அன்றாடம் வேர்வை சிந்தி உழைக்கும் மக்களுக்கு தவறாக வழிகாட்டப்பட்டதால் வந்த விளைவு ஆகும்.

வலங்கை இடங்கை பிரிவுகளின் தலைமை இடம் காஞ்சிபுரமாகும் இங்கேயே வலங்கை இடங்கை கல்வெட்டுகளை அதிகம் காண முடிகின்றன. 1449 படைவீடு ராஜ்ஜியம் சாம்புவராயன் ஆட்சியின் கல்வெட்டுகளிலே முதன் முதலில் வலங்கை இடங்கை மகாஜன்ம என்ற வாக்கியம் பதிவாகி இருந்தது. வலங்கை இடங்கை இந்த இருபிரிவினருக்கும் காஞ்சிபுரம் காளியே முதன்மையான தெய்வமாக சொல்லப்படுகின்றது.

வலங்கை:

வலங்கை இடங்கை சாதியர் என்போர் பிராமண-வெள்ளாளரின் எதிர்ப்பாளர்களாக இருந்தனர் எனவும் இவர்கள் உழைக்கும் மக்கள் சாதியரான செட்டியார்கள் மற்றும் ஆசாரிமார்களும் ஆவர்.

செட்டியார்களை தலைவனாக கொண்ட கூட்டத்தரும் உழைக்கும் இதர சாதியினரும்.(1)பட்டண செட்டி (2) தேவாங்க செட்டி (4) குலால செட்டி (5) பறையர் (6) சேணயர் (7) இடையர் (8) சாலியர் (9)) கோமுட்டி (10) உப்பிலியன் (11)சாணான் (12) சுண்ணாம்புக்காரன் (13) வலையர் (12) அம்பட்டன் (13) வண்ணான் (14) வாணியன் போன்ற உழைக்கும் மக்கள்.

இடங்கை:

இது ஆசாரிமார்களை தலைவர்களாக கொண்ட கூட்டத்தினரான 1)பஞ்ச கம்மாளர் 2)பள்ளர் 3)கைக்கோளர் 4)மேளக்காரர் போன்ற கூட்டத்தினர்கள்.    

பிராமணர்கள் தாங்கள் நினைத்த இடத்தை அடைந்த பின் கிராமங்களில் அன்றாடச் செயல்பாட்டில் தலையீடு செய்தும், அதன் செயல்முறைகளை தங்களுக்குச் சாதகமாக ஒழுங்கு படுத்தினர். கோயில்களிலும்,கோயில்களில் இருந்த கருவூலங்களையும்  தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த  நிலையை பிராமணர்கள் அடைந்ததும், தங்களை நிலச்சுவான்தார்கள் போல எண்ணிக்கொண்டு, அரசின் பெயராலும் ஆலயத்தின் பெயராலும் கிராம மக்களிடம் இருந்து, நிலவரி, வீட்டுவரி ஆகியவற்றைப்  பிரித்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட குடிமக்களை  அரசின் பெயராலும்,சமயத்தின் பெயராலும் ஒடுக்க முற்பட்டனர். இவ்வாறு, ஒடுக்கப்பட்ட மக்களை இடங்கையினர் என முத்திரைக்  குத்தினர்.

"முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) சோழ அரசனாக இருந்தபோது, கி.பி.1071 -யில் இடங்கை-வலங்கைப் போராட்டம் மிகக்கொடூரமாக நடந்தது.பிராமணர்கள் தங்கிய சதுர்வேதி மங்கலத்தை மக்கள் தீகிரையாக்கியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர்கள் ஆலயங்களைத் தவறான முறையில் தங்களுக்கு  சாதகமாகப் பயன்படுத்தியதால் சமூகத்தில் விரிசல்கள் ஏற்பட்டன" (ஆதாரம்:தமிழக வரலாறு,டாக்டர்.அ தேவநேசன்)

 நிலமைக் கட்டுக்கடங்காமல் போகவே, புறக்கணிக்கப்பட்ட இடங்கைப் படையினர் சமயத்தின் பெயராலும், அரசின் பெயராலும் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்த  பிராமணர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பிராமணர்களுக்குப் பாதுகாப்பு அளித்த ஆலயங்களை  இடித்து தள்ளியதோடு, பண்டாரங்களையும் (கருவூலங்களையும்) சூறையாடினர். நில உடமையை எதிர்த்த இவர்கள் வரி கட்ட மறுத்தனர். பிராமணர்கள் தங்கிய இடங்களும் நிர்மூலமாக்கப்பட்டன." என்று  வலங்கை-இடங்கைப் போராட்டம் குறித்து டாக்டர்.அ.தேவநேசன் தனது 'தமிழக வரலாறு' நூலில் (பக்கம்-266,267) கூறுகிறார். 

வலங்கை இடங்கை சாதிகள் பட்டியல் வேறுபாடுகள்:

மேற்கொடுக்கப்பட்ட பட்டியல்கள் இடங்கை வலங்கை சாதி பற்றிய வரலாற்று சுவடிகள்(1) உள்ளவையாகும். ஆனால் இடங்கையில் பத்து சாதிகள் இருந்தன என்று வலங்கை இடங்கை புராணம் பேசுகின்றது.

வலங்கை இடங்கை புராணத்தின் படி, பரமேசுவரன், பார்வதி இவரிகளின் அடிப்படையிலேயே வலங்கை இடங்கை பிரிவுகள் ஏற்பட்டதாகவும், சிவனும் தேவேந்திரனும் இடங்கைக்கு உரியவர்கள் என்றும், பிரம்ம தேவரும், பிருகு முனியும், வலங்கைக்கு உடையவர்கள் என்றும், இச்சுவடி கூறுகின்றது.

நமக்கு கிடைக்கும்  இரண்டாம் சரித்திரம் வலங்கை சரித்திரம் ஆகும். தஞ்சை வேத நாயக சாஸ்திரியால் (1798 ஆம் ஆண்டு) புலவர் மெக்கன்சிக்காக தொகுக்கப்பட்ட நூல் ஆகும். வேதநாயகர் கூறுகையில் “வலங்கையென்கிறது வெள்ளாளரையு மவர்களைச் சேர்ந்த சகல சாதியாரையுஞ்சார்ந்து நிற்க்கும்” எனவும் ”இடங்கையென்றால் கம்மாளரையு மவர்களைச் சேர்ந்த சகல சாதியாரையுங் காட்டும்” என விவரித்துள்ளார்.

நமக்கு கிடைக்கும்  மூன்றாம் சரித்திரம் தான் முக்கியமானது. இதில் தான் வலங்கை 98 சாதிகளும், வலங்கை 98 சாதிகளும் வரிசையிடப்படுள்ளன.

இந்த சரித்திரத்தில், கொள்ளார், ச்சர், தட்டார், கல்தச்சர், செட்டியார், வேளாளர்,வர் முதலிய பிரிவினர் வலங்கை பிரிவில் இடம் பெற்றுள்ளனர். வேடர், ஊர் பிராமணர், வாணிய நகரத்தார், மலைக்குறவர் முதலியோர் இடங்கை பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளனர், இவ்வகையான சாதிகளுக்கு குறிப்பிட்ட அடையாளங்கள் உண்டு, அந்த அடையாளங்களை இந்தச் சுவடிகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. ஒரு சாதி என்ன தொழில் செய்கின்றது என்றும் அவர்கள் எப்படி உருவானார்கள்(புராணத்தின்படி) என்றும் இந்த நூல் நமக்கு சான்று பகர்கின்றது. பண்டைய காலச் சமுதாயம் தொழில் வழிச் சமுதாயம் ஆகும் அதன் வழியே சாதிகள் இருந்ததை, இந்த நூல் நமக்கு எடுத்து உணர்த்துகின்றது.

நான்காவதாக நமக்கு கிடைக்கப்பெறும் சரித்திர நூல் புதுவை இடங்கை வலங்கை சாதிய வரலாறு. இந்த நூல் அந்நாளில் இருந்த சாதிகளின் மதிப்பைப் பற்றி பேசுகிறது. கோயிலில் வீட்டு விழாக்களில் யார் யாருக்கு என்ன வரையறைகள் இருந்தன, என்ன செய்ய வேண்டும்? என்று தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இந்த புதுவை சரித்திர நூலானது. கி.பி 1776 ஆம் ஆண்டு எழுதப்பெற்றது. இந்நூலின் மூலம் இடங்கை வலங்கை சாதிகளுக்கு இடையே இருந்த பூசல்களும் அந்த பூசல்களில் நிகழ்ந்த உண்மைகளையும் அறிய முடிகின்றது. மேலும் செருமன் என்பவர் எழுதிய நூலில் இடங்கை சாதிகள் 9 எனவும் வலங்கை சாதிகள் 18 எனவும் குறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் வங்கை வேலைக்காரர்கள் பற்றிய குறிப்புகள் மிக தெளிவாக கிடைக்கின்றன. காஞ்சிச் செப்பேடு மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. காஞ்சிபுரம் கோயிலில் உள்ள செப்பேடும் பண்டைய இடங்கை வலங்கை சாதிகள் உள்ளதை பற்றி சுட்டிக் காட்டுகின்றன. பண்டைய சாதிகள் வரலாறு, பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம், திருமண முறைகள் முதலிய செய்திகளைச் சுவடிகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். விஸ்வகர்மாக்கள் தங்களை சமூக பூசல்களிலிருந்து எவ்வாறு காத்துக்கொண்டனர் என்பதனையும் இச்சுவடிகள் கூறுகின்றது.  தஞ்சை மராடிய மன்னர் காத்திற்கு பிந்தைய ஆண்டுகளில், தஞ்சாவூர் சமஸ்தானம், ராஜ ஸ்ரீ மகாராஜா சாயபு, அவர்களுடைய பாவாஜி பண்டிதர் காலத்தில் இடங்கை வலங்கை தொடர்பான பிரச்சனை ஒன்று நீதிமன்றத்திற்க்கு வந்தது, அதில் பிராது கொடுத்தவர் நாராயண ஆசாரி ஆவார். அவ்வழக்கு விசாரணையின் போது கேட்ட கேள்விக்கு வலங்கையர்கள் 22 சாதிகளென்றும், இடங்கையர்கள் 6 சாதிகளென்றும், பதில் கூறியுள்ளனர்.   

  இதன் மூலம் இந்த பிரிவுகள் ஒரு நிலையான பிரிவுகள் இல்லை என்பதனை அறிய முடியும், காலம் செல்லச்செல்ல அடுத்தடுத்த தலைமுறையினர், சாதிகளின் சரியான விவரம் அறியாது அதனை கூட்டவும் குறைக்கவும் இருந்துள்ளனர் என்பது புலனாகின்றது. முன்காலத்தில் வாணியர்கள் இடங்கை பிரிவில் இருந்தனர், பின்நாளில் ஒற்றை செக்கான்கள் ஒரு பிரிவிலும் இரட்டை செக்கான்கள் ஒரு பிரிவிலும் இருந்தனர். 11 ஆம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கினாலும் 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பிரிவுகள் மறைந்து போயின.

3.0 98 வகை வலங்கை இடங்கை சாதிப்பிரிவுகள்

வலங்கை பிரிவுகள்:

1.   நம்பி குடிகள்

2.   செட்டியள்

3.   வெள்ளாழர்

4.   சோகு வளஞ்சியர்

5.   சங்கறு கவரைகள்

6.   கலிம்பு செட்டிகள்

7.   தெலிங்கு செட்டிகள்

8.   கோயிலான்

9.   கீழ்மையுடையான்

10.  மாலுமி

11.  வீறணுக்கன்

12.  மலைதாங்கி

13.  பட்டையர்

14.  அறச மக்கள்

15.  நாட்டுக்கு பிறந்தான்

16.  ஏழகத்தார்

17.  கங்கர்

18.  விலாடர்

19.  மலையாளர்

20.  துளுவர்

21.  நத்த மக்கள்

22.  மலையமான்

23.  சூனிமான்கள்

24.  கடிகையர்

25.  சாதி அம்மட்டர்

26.  கன்னிடியச் சேணியர்

27.  நொறுவாளர்

28.  மறவர்

29.  மாசிலவர்

30.  மயிலாடிகள்

31.  காலுவர்

32.  பூலுவர்

33.  ஊறாளிகள்

34.  பக்கத்தார்

35.  வைகானசர்

36.  அனுகூலர்

37.  ஓலைகுடையார்

38.  ஓடமுடையார்

39.  புறப்பாய் வாணியன்

40.  தட்டங்கார்

41.  குசவன்

42.  பாரி சிவன்

43.  இயாமளன்

44.  உவச்சன்

45.  கழியன்

46.  இலை பழுதிவோன்

47.  அளவன்

48.  பாம்பன் அல்லது பரம்பன்

49.  கொல்லன்

50.  தச்சன்

51.  தட்டான்

52.  கன்னான்

53.  கல்தச்சன்

54.  வில்தச்சன்

55.  மறவன்

56.  கட்டிக் கருமான்

57.  பனையான்

58.  தாசுவன்

59.  நாவிதன்

60.  சேணியன்

61.  பச்சை நாடார்

62.  சேடர்

63.  குறுங்கர்

64.  மெதகாறர்

65.  மலைக்குறிஞ்சி நாடார்

66.  மன்னாடிகள்

67.  கொட்டியர்

68.  மெத்தலியர்

69.  கயிலை குலைகாறர்

70.  காவாதிகள்

71.  புனத்தினர்

72.  பொருந்தர்

73.  விட்டலவார்

74.  ஒட்டர்

75.  குவளைக் கிழவர்

76.  மாலைகாரர்

77.  சான்றான்

78.  உரைகாரர்

79.  இருளர்

80.  குறவர்

81.  குளுவர்

82.  நுனையர்

83.  வலையர்

84.  சோனகர்

85.  கடலுவர்

86.  பாதைக்காரர்

87.  பட்டணவர்

88.  ……………..(சிதிலமடைந்த பகுதி)

89.  பண்டை பாகர்

90.  ஆயிலியர்

91.  கீழாயர்

92.  தும்பர்

93.  செம்மார்

94.  கற்ணிகர்

95.  கோவியர்

96.  வங்கரர்

97.  இளமையர்

98.  வனையாகன்

வலங்கை 98 சாதிக்கும், கருடன், யானை, கழுதை, கழுகு சின்னங்களாகும்

இடங்கை பிரிவுகள்:

1.   வையவர்

2.   அலகர்

3.   பவுந்தர்

4.   அஸ்த்திரதாரிகள்

5.   பட்டுடையான்

6.   காயக்குடி மரையோன்

7.   குடும்பர்

8.   ஆரியர்

9.   பூஷணர்

10.  வேலாடியார்

11.  தூத பிராமணர்

12.  பறாதர்

13.  மருந்த பிராமணர்

14.  ஊர் பிராமணர்

15.  ஸ்ரீ கரிணத்தார்

16.  கவரிகள்

17.  மகாமந்திரி

18.  தேவ சேனர்கள்

19.  எண்ணியத்தான்

20.  வன்னியத்தான்

21.  வாளெடுத்தான்

22.  அம்பணவன்

23.  வளக்கை கோளன்

24.  வாணிய நகரத்தான்

25.  மட்டைய கண்டன்

26.  முகட்டேவி

27.  அரசு பள்ளி

28.  முன்னுதார கள்ளயப்பள்ளி

29.  வஞ்சிநாடார்

30.  மலைக்குறவர்

31.  கள்ளர்

32.  கமண்டகர்

33.  ஆணைமேற் பாகர்

34.  குதிரை மேற்பாகர்

35.  முத்தணியார்

36.  இளைய நியாயம்

37.  கொஞ்சிக்குறி நெய்யர்

38.  சோழியப்பள்ளி

39.  மீன் பிடி சோழியப்பள்ளி

40.  சிறுமணி மலை சிவன் படப்பள்ளி

41.  கோயிலங்காடிகன்

42.  சன்றிசேர் சாலியர்

43.  உருத்திர சாலியர்

44.  செங்கொந்த சாலியர்

45.  வேட சாலியர்

46.  செக்காட்டு வாணியர்

47.  சேனையங்காடிகள்

48.  கோட்டைப்படையிலார்

49.  தபுலர்

50.  கோமுட்டிகள்

51.  கொற்றி

52.  முக்குவர்

53.  முத்துக்குளிப்பார்

54.  முத்த ஒள்ளியார்

55.  சந்தனர் எரிவார்

56.  காறர்

57.  கன்னகாறர்

58.  சங்கு கட்டும் மாறங்கொல்லியார்

59.  கலைகாறர்

60.  கன்னிகார்

61.  புலிகாறர்

62.  வேட்டைக்காரர்

63.  புல்வேடர்

64.  புனல்வேடர்

65.  குன்றவேடர்

66.  திருவேடர்

67.  கான வேடர்

68.  கறக்கஞ்சி வேடர்

69.  புவிக்குடி முத்தறையர்

70.  காடு கார்த்தான்

71.  இருசன்

72.  ஒத்தர்

73.  உடுக்கார்

74.  கறையார்

75.  காண்ம சுடர்

76.  ஈற்வாள்க் கொண்டு மறமறுக்கு மேனாதி

77.  கறைத்தறி நெய்வார்

78.  நூல்த்தறி நெய்வார்

79.  பட்டணத்தரி நெய்வார்

80.  விளிம்பர்

81.  ……………..(சிதிலமடைந்த பகுதி)

82.  பாடுமதங்கர்

83.  கம்மகாரர்

84.  சீனர்

85.  பாறத்தார்

86.  துலுக்கர்

87.  திமிலர்

88.  குண்ணலர்

89.  அப்பிடுகாறர்

90.  தீயிலிடுகாறர்

91.  முமுருசிகள்

92.  பலியர்

93.  பலகுறிஞ்சிப்பலியர்

94.  குழையர்

95.  கங்காரணன்

96.  பழியில்லார்

97.  சக்கிலி

98.  ……………..(சிதிலமடைந்த பகுதி)

இடங்கை 98 சாதிக்கும், ஆண்புலியும் நரியும், செம்போத்தும், வாளும், காக்கையும், கருடனும், யாளிசிங்கமும்,  சின்னங்களாகும்.

இதில் வகைப்படுத்தப்படாத பல சாதிகளும் காணப்படுகின்றன. அதன் பிறப்பு மட்டுமே காணப்படுகின்றது. அவர்கள் இப்பிரிவுகளில் பங்கேற்றனரா இல்லையா அல்லது எந்நிலை வகித்தனர் என்பது புலப்படவில்லை. அவற்றில் வகைப்படுத்தப்படாத சாதிகள் கீழே,

காரளம், கொழுவஞ்சி, கிழமையுடையான், பட்டை, மாகுலவன், நிலமையான், ஊறாளிகள், நாரிணங்காத்தான், விஸ்வகன்ம துவட்டர், அன்னக்கொடியுடைய பனையார், தெலுங்க சேணியர், புனத்தி, பொருத்தரு, வட்டத்தரு, வட்டலவார், வண்ணான், சாணார், வலையர், கடலுளவர், ஆயிலி, கணிகை, சேமாறி, சூரிய கூத்தர், கைக்கோளர், வெள்ளக கோளர், ஆசாரி, பாற்கள், அம்பணவர், மட்டையகணற்கவர், கழகண்டர், சேனை அங்காடி, தபுலன், வாதாவி, முத்துராயவர், பட்டை வாளிகர், விளிம்பர், பாணர், கம்மாளர், பள்ளர்.

4.0 வலங்கை -இடங்கை வரலாற்று சுவடியில் வாணியர்கள்

இடங்கை வலங்கை சாதி பற்றிய வரலாற்று சுவடியில் (1) வகைப்படுத்தப்பட்ட 98 வகை சாதிகளுக்குள் இடங்கை பிரிவில் 24 வது சாதியாக வாணிச்சிய நகரத்தானும், 46 வது சாதியாக செக்காடு வாணியனும் கொடுக்கப்பட்டுள்ளது.

24. வைசிய வாணிச்சிய நகரத்தார் பற்றி

சூத்திர கன்னிகைகளை விவாகம் பண்ணக் கடவன். இவன் பாகம் பண்ணுமிடத்து பசுவில் இருபத்து நாலு உறுப்பில் மாம்சம் வாங்கி புசித்தும், இப்பசு எழுந்திருந்து போக யாகம் வளர்க்கவும், பிராமணன் இவனுக்கு தெய்வம்.

பொருள்:

சூத்திர கன்னிகைகளை திருமணம் செய்வோர், பசுவின் மாமிசத்தை உணவாக உண்டும், அதனால் வரும் பாவம் போக்க யாகம் வளர்க்கவும், பிராமணன் உதவி செய்கின்றாதால் பிராமணன் இவனுக்கு தெய்வம்.  

சின்னம்:

வைசிய வாணிச்சிய நகரத்தார்க்கு நாக சுரமும் செண்டும், தோன்றியத் தாரும், கெருடக் கொடியும், மகரக் கொடியும், அடையாளமுடையவர்கள்

நாக சுரம் என்பது ஒரு வகையான துளைக்கருவி இது இன்றைய நாதஸ்வரம் போன்றது, செண்டு என்பது ஒருவகையான ஆயுதம் (செண்டாயுதம்) ஐய்யனார் கையில் இருக்கும் ஆயுதம், தோன்றியதாரும் என்பது தோன்றியின் கொத்து பூவை சுட்டி நின்றது. கருடன் என்பது நாம் அறிந்த பருந்தே, மகரக் கொடி என்பது மீன் கொடி ஆகும், மகரக் கொடி மன்மதனின் கொடி ஆகும், அக நானுற்றில் இக்கொடி பற்றிய குறிப்புகள் உண்டு.  64. செக்காட்டு வாணியர் பற்றி:

”............வைசிய பெண்ணுக்கு பிறந்தவன் செக்கான், இவனுக்கு தொழில், செக்கடி எண்ணையும் வித்து, பிண்ணாக்கும் வித்து உச்சிக்குப் பின் ஊர் புக கடவான், அல்லர், இவன் கிராமங்களுக்கு புறம்பே 200 கோல் தரை இடம்விட்டு கூடியிருக்க கடவான், விஸ்வகர்மாவை ஏழு செங்கல் போட்டு, ஏழுகல் போட்டு சிவிகையும் (பல்லக்கும்) தாங்கக் கடவான், இவனுக்கு தேவதை மாகாளி. (இதனையே அருணகிரி புராணமும் எடுத்துக்கூறுகின்றது.)

* இப்பாடலை பற்றி கருத்து கூற விரும்புவோர் முனைவர். எஸ். செளந்திரபாண்டியன் (1995) இடங்கை வலங்கையர் வரலாறு, கீழ்த்திசைசுவடிகள் நூலகம், சென்னை. என்ற இந்த புத்தகத்தை முழுமையகாக படித்து உணர்ந்து பின் கருத்து கூறவும். 

பொருள்:

 ..................வைசியப்பெண்ணுக்கு பிறந்தவன் தான் செக்கான், செக்கடியில் உருவாக்கப்படும் எண்ணையையும் பிண்ணாகினையும் விற்று வாழ்க்கை நடத்துவோர்கள் இவர்கள், காலை முழுதும் எண்ணெய் ஆட்டி மதியத்திற்க்கு மேல் ஊருக்குள் சென்று எண்ணையையும் பிண்ணாகினையும் விற்று வருவர். இவர்கள் மக்கள் வாழும் கிராமங்களுக்கு புறம்பே 200 கோல் தரை இடம் விட்டு குடியிருப்பவர்கள், (கோல் என்னும் அளவு சிலப்பதிகாரத்திலும் பயின்றுவந்துள்ளது) ஒரு கோல் என்பது ஒருவன் கைவிரல் அளவில் 24 கொண்டது. விஸ்வகர்மாக்களை விழாவின்போது ஏழு செங்கல்லுடன், ஏழு கல் போட்டு பல்லக்கை சுமந்து வருவோன், செக்காட்டு வாணியனுக்கு தேவதை மாகாளியாகும். (கோவலன் முற்பிறவி கதையில் எண்ணெய் விற்ற கதையை நினைவு கூர்க.)   

சின்னம்:

      ”செக்காட்டு வாணியருக்குச் செண்டும், தோன்றித் தாரும், விடுமயிரும் அடையாளமுடையவர்கள்”.

செண்டு என்பது ஒருவகையான ஆயுதம் (செண்டாயுதம்) ஐய்யனார் கையில் இருக்கும் ஆயுதம், தோன்றியதாரும் என்பது தோன்றியின் கொத்து பூவை சுட்டி நின்றது. இங்கு விடு மயிர் என குறிக்கப்பெறுவது கவரி மானின் மயிர் என்று இந்நூலை ஆக்கியோர் கூறுகின்றனர்.

தோன்றிப் பூ:

தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர், சிலர் ஆனால் சிலர் மருதாணி செடியின் மலர் என்கின்றனர், சங்க இலக்கிய பாடல்கள் துணை கொண்டு இம்மலரின் விளக்கத்தை அணுகும் போது அது காந்தளின் சாயலையே பெறுகின்றது.  

இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று. தோன்றிப்பூ தீ போல மலரும். பவள நிறத்தில் இருக்கும். அகல் விளக்கில் சுடர் எரிவது போல இருக்கும். தீச்சுடர் போல இருக்கும். செம்முல்லை பூப் போல இருக்கும். இதழ்கள் நிறைந்த பூ தோன்றி. புதரில் விளக்கு போல் தோற்றமளிக்கும். குவிந்த கொத்துகளாக இருக்கும். உரு என்னும் சிவப்புநிறம் கொண்டிருக்கும். வெறியாட்டம் போல் சுருக்கம் கொண்டிருக்கும். தோன்றிப் பூக்கள் மிகுதியாக உள்ள மலை தோன்றி-மலை. அதன் அரசன் தோன்றிக்கோ.  என பல செய்திகளை சங்கப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பிற செய்திகள்:

1.   இச்சுவடிகளில் ஓடமுடையானுக்கும் ஒடமுடையானின் ஸ்ரீக்கும் பிறந்தவன் புறப்பாய் வாணியன் என அழைக்கப்படுகின்றான். இவனுக்கு தொழில் புறப்பாய் உள்ளிட்டவை நெய்சுவித்து திரியக்கடவான் இவன் ஓடமுடையான் அருகே குடியிருக்க கடவான் இவர்களுக்கு தேவதை லக்‌ஷ்மி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சாதி பற்றிய குறைந்த பட்ச தகவல்கள் கூட கிடைக்கவில்லை.

2.   யாழ்பாணத்தில் நல்லெண்ணை உற்பத்தி செய்யும் சமூகத்திற்க்கு சண்டார் என்று பெயர்.

5.0 வலங்கை – இடங்கையரிடையே பூசல்கள்

சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்த வலங்கையர், இடங்கையர்க்கு வழங்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும் பெற வேண்டிப் போராடினர். இதனை இடங்கையர் எதிர்த்தனர். இதனால் வலங்கை – இடங்கைப் பிரிவினரிடையே பல பூசல்கள் ஏற்பட்டன. இதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் பல உள்ளன. முதலாம் குலோத்துங்கனின் இரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1071இல்), இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் என்ற பிராமண ஊரில் வலங்கை – இடங்கைப் பிரிவினரிடையே ஒரு பெரிய கலகம் நடைபெற்றது. இக்கலகத்தின்போது, கலகக்காரர்கள் ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினர்; கோயில்களை இடித்துத் தள்ளினர். இக்கலகம் முடிந்த பின்னர் ஊரை மீண்டும் சீரமைக்கவும், கோயில்களை மீண்டும் எழுப்பவும் ஊர்ச்சபையினர் கோயில் பண்டாரத்திலிருந்து ஐம்பது கழஞ்சு பொன்னைக் கடன் வாங்கினர். இக்கலகம் பற்றிய செய்தியை முதலாம் குலோத்துங்கனின் பதினோராம் ஆட்சியாண்டில் திருவரங்கக் கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று விரிவாகத் தெரிவிக்கிறது.

வலங்கை – இடங்கையர்க்கு இடையிலான பூசல்கள் பிற்காலச் சோழப் பேரரசர் காலத்தில் தோன்றி, விசயநகரத்துப் பேரரசர் காலத்தில் தொடர்ந்து வளர்ந்து வந்து, ஆங்கிலேயர் அரசாட்சியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் தீவிரம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இவ்விரு பிரிவினர்க்கு இடையே நடந்த பூசல்கள் காரணமாகச் சென்னை நகரின் தெருக்களில் மனித இரத்தம் சிந்தப்பட்டது உண்டு.

6.0 முடிவுரை

 வலங்கை இடங்கை வரலாற்றில் காணப்பட்ட பல சாதிகள் கால ஓட்டத்தில் தடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இன்றைய தமிழக அரசு வெளியிட்டுள்ள சாதிப்பட்டியலில் தமிழ்ச் சாதிகள் வெகு சிலவே காணப்படுகின்றன. பிற சாதிகளை ஒன்றாக கூடிக் கொண்டு அவர்களையும் வாணிய இனத்தில் சேர்க்க முயலாதீர்கள், (இதனை யாரும் புண்படக் கூறவில்லை) பின்னர் நம் சாதியின் வரலாறு பிறரால் அபகரிக்கப்படும், இன்று இந்த செயலை பல தமிழுக்கு தொடர்பில்லாத சாதிய அமைப்புக்கள் செய்து கொண்டிருக்கின்றன. அதனை கண்கூடாக கண்டுகொண்டிருக்கின்றேன்.  பல சாதிகளுக்கு ஒரே பட்டப்பெயர்கள் இருப்பதால் ஒன்று மற்றொன்று ஆகிவிட முடியாது. நம் வரலாற்றை நம் சந்திகளை அறியச் செய்யுங்கள் இல்லையேல் உங்கள் வரலாறு வேறொரு சாதியின் வரலாறாகிவிடும் என்பதனை நினைவில் கொள்க.  

குறிப்புதவி நூல்கள்:

  1.   முனைவர். எஸ். செளந்திரபாண்டியன் (1995) இடங்கை வலங்கையர் வரலாறு, கீழ்த்திசைசுவடிகள் நூலகம், சென்னை.
  2.         ஆ.சிங்கார வேலு முதலியார் (1981) அபிதான சிந்தாமணி, ஆசிய கல்விசேவை நிறுவனம், சென்னை
  3.    நா.சி. கந்தையா பிள்ளை (2018) தென்னிந்திய மக்கள் குலங்களும் குடிகளும், சந்தியா பதிப்பகம், சென்னை.

 

No comments:

Post a Comment