Friday, November 11, 2022

ஓசுநர்

 

ஓசுநர் என்ற

செக்கார வாணியர்களின் இலக்கிய சான்றுகள்

முன்னுரை:

          மருதத்தினையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் தேவைக்கு மீறியவற்றை சேமித்து வைத்தோர் உடமையாளராகவும், சேமிப்பு இல்லாதோர் உடமையற்றவராகவும், விளங்கினர். உற்பத்திக் கருவிகளை வைத்திருந்தோர் செல்வந்தர்களாகவும், உற்பத்திக் கருவிகளைக் கொண்டு வேலை செய்தோர், வறியவர்களாகவும் காணப்பட்டனர். ஒவ்வொரு தொழிற்குடியிலும் இந்நிலைமை காணப்பட்டது. தொல் தமிழ் மக்கள், தாம் தத்தம் செய்த தொழில் பெயர்களாலேயே குடிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். நம் முன்னோர்களும் நாமும் செக்கு தொழிலை மேற்கொண்டு உயிரென போற்றி வளர்த்ததால் நம்முடைய இனம் செக்கார் இனம் என அழைக்கப்பட்டது. செக்கார மக்கள் செக்காலியர் என்றும், செக்காட்டி, செக்கான், சக்கிரி, செக்காரத்தி என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

செக்கார இன மக்களின் மூலம், செக்கில் தேவைக்கு மிஞ்சி உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய் (செக்கிறைப்பாடு, கோவிலுக்கு விளக்கெரிக்க வழங்கப்பட்ட எண்ணெய் போக) வணிக குழுக்களின் மூலம் பிற ஊர்களுக்கு சென்று விற்பனை செய்யப்பட்டன. அவ்வாறு எண்ணெய் விற்போர் ஓசுநர் என்று அழைக்கப்பட்டனர். கி.மு. 3 நூற்றாண்டில் வாழ்ந்த செக்கார வாணியர்கள் ஓசுநர் என்ற இப்பெயரால் அழைக்கப்பட்டனர். இதனை சிலப்பதிகாரம் உறுதி செய்கின்றது.  இதில் மிகப் பெரிய அளவில் வணிக குழுக்களாக சென்று எண்ணெய் வணிகம் செய்தோர், மாயிலட்டி, திருவிளக்கு நகரத்தார், சோதி நகரத்தார், சங்கரப்பாடியார் எனவும் அழைக்கப்பட்டனர்.

கருவிகள் உடமையாளருக்கும், கருவிகள் உடமையற்றவர்களுக்கும் இருந்த பாகுபாடு பின்னாளில் விரிவடைந்து முதலாளி, தொழிலாளி என்ற நிலை உருவானது. கல்செக்கு அரசின் அனுமதி பெற்றே நடத்தப்பட்டது. ஒற்றை எருது உடைய செக்கார் தகுதி குறைந்தோராகவும், இரட்டை எருதுடைய செக்கார் சமூகத்தில் தகுதி உயர்ந்தோராகவும் கருதப்பட்டனர். உள்ளூர்களில் எண்ணெய் விற்போருக்கும், வணிக குழுவில் சென்று எண்ணெய் விற்போருக்கும் இடையே இந்த சமூக தகுதி பாகுபாடு காணப்பட்டது.

தமிழகத்தில் தோன்றிய குடிகளுக்கு மட்டுமே, மிகச் சரியாக கூறினால் செய்தொழிலால் குடிப்பெயர் பெற்ற சாதிகளுக்கு மட்டுமே, ஆண்பால் பெண்பால் பெயர்கள் உண்டு. செட்டியார் இனங்களில் எந்த குடிகளுக்கும் ஆண்பால், பெண்பால் பெயர் கிடையாது. தொல் தமிழ் குடியான செக்கார இனத்திற்கு மட்டுமே ஆண்பால் பெண்பால் பெயர்கள் உண்டு, செக்காரன், செக்காரத்தி, வாணியன், வாணியச்சி. செக்காலியர், வாணியன் என்ற பெயர் தமிழக குடிகளில் மூன்று குடிகளுக்கு மட்டுமே பின்னொட்டாக வழங்கப்பட்டுள்ளன. செக்கார வாணியன், எருத்து வாணியன், இலை வாணியன். இதில் வாணியன் என்ற பெயர் குடிப்பெயராக நிலைத்தது செக்கார வாணியர்களுக்கு மட்டுமே. செக்கார வாணியர்கள் வணிக குழுக்கள் மூலம் எண்ணெய் வணிகம் செய்ததால் அவர்கள் வாணியர் என்ற குடிப்பெயர் பின் செட்டியார் என்னும் பதத்தினை சேர்த்துக்கொண்டனர்.

செக்கார வாணியர் இனம் தொல் குடி, எனினும் நம் சமூகத்தைப் பற்றிய தகவல்கள் கி.பி. 4 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே அதிகமாக கிடைக்கப்பெறுகின்றன. நமக்கு கிடைக்கின்ற இலக்கியச் சான்றுகள் அடிப்படையில் தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம் மட்டுமே நாம் தோராயமாக 2500 ஆண்டுகள் இப்பெருமை மிகு தமிழ் நிலத்தில் வாழ்ந்து வருகின்றோம் என்பதனை சான்று பகர்கின்றன. செக்கார வாணியர் இனம் பற்றிய கல்வெட்டு சான்றுகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே அதிகமாக கிடைக்கப்பெறுகின்றன.

தமிழக தொழிற்குடிகளுக்கு இடையே பல முரண்கள் காணப்பட்டன. தொழிற்குடிகளுக்கு இடையேயும், குடிகளுக்கு உள்ளேயும் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது. இது வைதீகத்தினால் நிகழ்ந்தது. தொழிற்குடிகளுக்கு இடையேயும், குடிகளுக்கு உள்ளேயும் கற்பிக்கப்பட்ட உயர்வு தாழ்வு கி.பி. 13 ஆம் நூற்றாண்டுகளில் உச்சம் தொட்டது. இதனை வலங்கை இடங்கை பிரச்சனை மூலம் அறியலாம். தொழிற் குடிகளில் ஏற்றத் தாழ்வு உருவாக பொருளாதாரமும், ஆட்சியாளர்களின் சட்ட திட்டங்களும் ஒரு காரணமாக அமைந்துவிட்டன. செக்கார குடியிலும் இவ்வகை ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன, இதனை இலக்கிய சான்றுகள் உறுதி செய்கின்றன. பண்ட மாற்று முறை ஒழிந்து பணத்தால் பொருட்களை வாங்கும் நிலை வந்த போது, சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் பொருளாதாரத்தினால் நிர்ணயிக்கப்பட்டன. அதற்கு பணமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. பணம் மக்களிடையே புழக்கத்தில் வந்த உடன் செல்வந்தர் யார் என்ற போட்டி நிலவத் தொடங்கியது, நில உடமைச் சமூகங்களே ஒருகாலத்தில் செல்வந்தர்களாக இருந்தனர், ஆனால் வணிக சமூகமும், வேளாண் சமூகமும் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தாலும், பணம் புழங்கத்தொடங்கிய போது, வணிக சமூகங்களுக்கு இடையேயும், வேளாண் சமூகங்களுக்கு இடையேயும் யார் செல்வந்தர் என்ற போட்டிகள் நிலவத் தொடங்கியது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வாக்கில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் குடிகள் வளரத் தொடங்கின. அதில் நம் செக்காரக் குடியும் ஒன்று. பல குடிகள் வளர்ந்தாலும் பூசல்கள் குறையவில்லை. வணிக சமூகங்களுக்குள்ளேயே பேதமை பாரட்டப்பட்டன. அந்த பேதமை என்பது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அதிகமாக காணப்பட்டது. செக்கார சமூகத்தை வணிக சமூகமாகவே ஏற்க சில வணிக செட்டியார் சமூகத்தினர் மறுத்தனர், இதன் விளைவாக திண்டிவனம் தமிழ் ஆசிரியர் ஓங்கூர் சீ.ரத்தின செட்டியாரால் எழுதப்பெற்ற நிஜ வைசியர் நிரூபணம் என்ற நூலுக்கு எதிராக ப.நா கிருஷ்ணசாமி செட்டியாரால் கி.பி. 1931 ஆம் ஆண்டு நிஜ வைசியர் நிரூபண நிர்த்துளிதம், வாணிய வைசிய விளக்க சூறாவளி என்னும் நிஜவைசிய நிரூபண மறுப்புரையை எழுதி நூலாக வெளியிட்டார். இந்நூலே ஒரு வணிக சமூகம் மற்றொரு வணிக சமூகத்தை ஏற்காமல் புறந்தள்ளியதற்கும் ஒரு சமூகத்திற்குள்ளேயே பாகுபாடு காட்டியதற்கும் சான்று ஆகும். (இந்நூல் பற்றிய கட்டுரை மற்றொரு பதிவில் வெளியிடப்படும்). இனி செக்கார வாணியர் தொடர்பான இலக்கிய சான்றுகளை காணலாம்.  

சிலப்பதிகாரம்:

குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவூரெடுத்த காதையில் புகார்ப் பட்டிணத்தின் ஒரு பகுதியான மருவூர் பாக்கத்தின் தெற்கே காவிரிக் கரையில் துறைமுகம் இருந்தது. அவ்வூரில் இருந்த வணிகர்களைப் பற்றி இப்பாடல் கூறுகின்றது.

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்,

மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,

பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு

ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;  (சிலம்பு)

 

பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமுடன் தானியங்கள் குவித்த தானிய வீதிகளும், காழியர் என்ற பிட்டு வணிகரும், கூவியர் என்ற அப்ப வணிகரும், கள்நொடை ஆட்டியர் என்ற கள் விற்பனையாளர்களும், மீன் விற்கும் பரதவர்களும், வெள்ளை உப்பு விற்கும் உமணர்களும், வெற்றிலை விற்கும் பாசவரும், ஐவகை நறுமணப்பொருட்கள் விற்கும் வாசவரும், பலவகையான இறைச்சிகளை விற்கக் கூடிய பல் நிண விலைஞரும், எண்ணெய் விற்பனை செய்யும் செக்கார வாணியர் என்ற ஓசுநர் போன்ற மக்கள் வாழும் பல்வேறு குடியிருப்புகளும் மருவூர்ப்பாக்கத்தில் இருந்து என சிலப்பதிகாரம் சான்று பகருகின்றது. சிலப்பதிகாரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம் ஆகும், இதனை இளங்கோவடிகள் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் எழுதினார், எனவே செக்கார இனம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளது என்பது உறுதிசெய்யப்படுகின்றது.

தொல்காப்பியம்:

      தமிழ் நூல்களிலேயே மிகப்பழைய மற்றும் மிக மூத்த நூலான தொல்காப்பியம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என கே.எஸ். சீனிவாச பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். இந்நூலின் தொன்மை குறித்து பலரும் பல கருத்துக்களை கூறிவருகின்றனர். கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் எனத் துள்ளியமாகத் தெரிகிறது. காரணம் நக்கீரர், தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார். இடைச் சங்கம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதால் தொல்காப்பியர் பொ.ஊ.மு. 2100-இக்கும் முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

ஒள்வாள் வீசிய நூழிலு முளப்படப்புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.” (தொல்காப்பியம். புறத். 17)

நூழில் = 1. குழியுள்ள செக்கு 2. கொன்று குவிக்கை. இங்கு நூழிலார் என்று அழைக்கப்பெறும் இனம் செக்கினை ஆட்டி எள்ளிலிருந்து எண்ணெய் கொணரும் இனமே ஆகும். தொல்காப்பியம் தும்பைத்திணையின் துறைகளில் ஒன்றாக 'நூழில்' என்னும் துறையைக் குறிப்பிடுகிறது. பல படைவீரர்கள் பின்வாங்குமாறு ஒருவன் வாட்போர் புரியும் நிலை 'நூழில்' எனச் சுட்டப்பட்டுள்ளது.

நூழிலர் = செக்கார், வாணியர்.

நூழிலாட்டு = செக்காட்டுவதுபோற் கொன்று குவிக்கை.

சங்க காலத்தில் செக்கு தொழில் இருந்தமையை இப்பாடல் மூலம் நிறுவலாம்.

மறைமலை அடிகளாரின் தொல்காப்பிய உரையில்:

இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில் களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று...”

 நாலடியார்:

நாலடியார் சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் கி.பி.250 ஐ ஒட்டிய காலம் ஆகும்.

           ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்

           காணமி லாதார் கடுவனையர்; - காணவே

                 செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்

                 அக்காரம் அன்னர் அவர்க்கு. (374)

அன்பு இல்லாத நெஞ்சத்துடன், அழகிய நீலமலர் போன்ற கண்ணை உடையவர் பொதுமகளிர். அவர்களுக்குக் கொடுக்கப் பொற்காசு இல்லாவர்  அவர்களுக்குக் கடுகு போல் மிகச் சிறியவர். அவர்களை நாடி வருபவர் செக்கு ஆட்டி எண்ணெய் வழியும் உடம்போடு வந்தாலும்  ஈட்டிய பொருளைக் கொண்டுவந்து கொடுப்பாராயின் அவர்களுக்கு அவர் வெல்லக்கட்டி போன்றவர். பணமொன்றிலே யல்லாமல் மற்றெதிலும் அன்பில்லாதவராதலால் வேசையர்கள் பணமில்லாதாரை விஷத்து கொப்பாகவும் பணமுள்ளோரை அக்காரத்துக் கொப்பாகவும் கொள்கின்றார்கள் என்றதனால் அவர் போகம் மிகவும் இனிப்பில்லாத தென்பது கருத்து.

திருவாய்மொழி:

      திருவாய்மொழி திராவிட வேதம் எனப் போற்றப்படும் நூல். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார். திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகிய வேறு மூன்று நூல்களையும் இவர் பாடியுள்ளார். இவர் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால். இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர். நம்மாழ்வாரின் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் கொண்டது. இப்பாடல் ஏழாம் பத்தில் இடம்பெற்றுள்ளது.

 

            தீர்மருந் தின்றி ஐவர் நோயடும்

                        செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை

                  நேர்மருங் குடைத்தா அடைத்து

                        நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்

                 ஆர்ம ருந்தினி யாகு வார்! அட லாழி

                         ஏந்தி அசுரர் வன்குலம்

                  வேர்மருங் கறுத்தாய்! விண்ணு

                         ளார்பெரு மானேயோ! (667)

கொல்லுகின்ற சக்கரத்தை ஏந்தி வலிய அசுரர்களுடைய குலத்தைப் பக்கவேரோடு அறுத்தவனே! நித்தியசூரிகளுக்குப் பெருமானே! வேறு பரிகாரம் இல்லாதபடி ஐம்புலன்களாகிய நோய்கள் வருத்துகின்ற சரீரமாகிற செக்கிலே இட்டு மயங்கச்செய்கின்ற ஐந்து இந்திரியங்களையும் எதிரும் பக்கங்களுமாக அடைத்து நிறுத்தி நெகிழ விடுகின்றவரைப் போலே இராநின்றாய்; இரட்சகனான நீ பாராமுகம் செய்தால் இனி உபகாரர் ஆவார் யாவர்?

பிங்கல நிகண்டு:

  இந்நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர். இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது. மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.

      சதயத்தின் பெயர் - குன்றுவருணனாள் பெருஞ்செக்குச் - சுண்டன் போரிவை சதயநாளே. (170)    சதயத்தின் பெயர் - குன்று, வருணனாள், செக்கு, சுண்டன், போர். (5)

இங்கு சதய நட்சத்திரத்தின் வேறு பெயராக செக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய புராணம்:

  பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலை சேக்கிழார் விவரிக்கிறார். இந்நூல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சேக்கிழார் அவர்கள் அநபாய சோழன் அரண்மனையில் முதன்மை அமைச்சராக பணிபுரிந்தவர்.

பெரிய புராணத்தில் 12ஆம் திருமுறையில் இரண்டாம் காண்டத்தில் 3ஆம் சருக்கத்தில் உள்ள பொய்யடி மையில்லாத புலவரில், அறாவதாகக்‌ கலிய நாயனார்‌ புராணங் கூறப்பட்டுள்ளது. கலியர்‌ என்ற பெயருடைய நாயனாரது சரித வரலாறு கூறப்பட்டுள்ளது.

                  கம்பக்‌ கரிக்குஞ்‌ சிலந்திக்கு நல்கிய கண்ணுதலோன்‌

உம்பர்க்கு நாதற்‌ கொளிவிளக்‌ கேற்றற்‌ குடலிலனாய்க்‌

கும்பத்‌ தயிலம்விற்‌ றுஞ்செக்‌ குழன்றுங்கொள் கூலியினால்‌

நம்பற்‌ கெரித்த கலியொற்றி மாநகர்ச்‌ சக்கிரியே".

 

தம்முள்‌ மாறுபட்ட யானைக்கும்‌ சிலந்திக்கும்‌ ஒருங்கே பேறு அருள்‌ புரிந்தவர்,‌ குடத்தில்‌ எண்ணெய்‌ கொண்டு விற்றும்‌, செக்கு ஓட்டிப்‌ பணிபுரிந்தும்‌; கொள்‌ பெற்ற கூலியினாலே; நம்பர்க்கு இறைவருக்குத்‌ திருவிளக்கு எரித்த கலியர்‌ என்பவர்‌; ஒற்றி மாநகர்ச்‌ சக்கிரியே - திருவொற்றியூரில்‌ வாழும்‌ செக்காரக்‌ குலத்தினராவர்‌.

                  எயிலணையு முகின்முழக்கு மெறிதிரைவே லையின்முழக்கும்‌

பயிறருபல்‌ லியமுழக்கு முறைதெரியாப்‌ பதியதனுள்‌

வெயிலணிபன்‌ மணிமுதலாம்‌ விழுப்பொருளா வனவிளக்கும்‌

தயிலவினைத்‌ தொழின்மரபிற்‌ சக்கரப்பா டித்தெருவு. (பெரியபுராணம்-428)

 

மதில்களை அணைகின்ற மேகங்களின்‌ ஓசையும்‌, எறிகின்ற அலைகளையுடைய கடலினது ஓசையும்‌, பயிலப்படுகின்ற பல இயங்களின்‌ ஓசையும்‌, ஆகிய இவைகூடிப்‌ பிரித்தறிய முடியாதபடி சத்திக்கின்ற அப்பதியில்‌; தயிலவினை... சக்கரப்பாடித்‌ தெருவு - எண்ணெய்‌ ஆட்டும்‌  செக்குத்‌ தொழிலுடைய மரபினர்‌ வாழ்கின்ற சக்கரப்பாடித்‌ தெரு என்பது; ஒளி வீசுகின்ற பலவகை மணி முதலாகிய தூய பொருள்கள்‌ விளக்குந்தன்மையுடையது.

 இசையாயிரம்:

சயங்கொண்டார் பாடிய மற்றொரு நூல் கலிங்கத்துப் பரணியைத் தவிர புகார் நகரத்து வணிகரைச் சிறப்பித்து இசையாயிரம்’ என்ற மற்றொரு நூலும் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையால் அறியக்கிடைக்கின்றது. அந்நூலில் செட்டிகள் மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் புகார் தங்கட்கு ஊர் என்று பாடச் சொல்லச் சயங்கொண்டார் பாடியது” என்ற தலைக்குறிப்புடன் காணப்படும்,

                   ஆடுவதுஞ் செக்கே யளப்பதுவு மெண்ணெயே

கூடுவதுஞ் சக்கிலியக் கோதையே-நீடுபுகழ்க் *

கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார் தாம்

உச்சிக்குப் பின்புகா ரூர் "

 செக்கார் இன மக்களால் ஆட்டப்படுவது செக்கு ஆகும், செக்காடுதலின் பயனாய் கிடைப்பது எண்ணெய்யே, அதை அளப்பவர்களும் செக்கார் மக்களே, அவர்கள் கூடி இன்பம் களிப்பது சக்கிலிய கோதையுடனே (பிண்ணாக்கு) நீண்ட புகழையுடைய காஞ்சிபுரத்து செப்பேட்டினை ஆராயுங்கால் செக்கார் மக்கள் உச்சி வேளை சென்ற பின்பு தான் எண்ணெய் விற்று ஊர் திரும்புவார் என்பதாகும். என்ற வெண்பாவால் இதனை அறியலாம்.

* இப்பாடலை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்

(இப்பாடல் ஒரு சிலேடை பாடல்,  இங்கு  சக்கிலிய கோதை என்பது பிண்ணாக்கிற்கும், கச்சி செப்பேடு என்பது பணம் எண்ணும் செயலுக்கும் உவமையாக கொடுக்கப்பட்டுள்ளது. உச்சிக்கு பின் புகாரூர் என்பது வெயில் தாழ்வதற்கு முன் தன் ஊர் புகமாட்டார்கள் என்பதாகும்)  

மேலும் இதன் பொருள் புரியாதோர் புலவர் தா.குருசாமி தேசிகர் அவர்களின் பொருள் விளக்கத்தை பயின்று தெளியவும்.  

தனிப்பாடல்கள் திரட்டு:

தனிப்பாடல்கள் திரட்டு என்ற நூலில் இப்பாடல் கம்பரால் எழுதப்பெற்றதாய் கிடைக்கின்றது. இப்பாடலுக்கு கா.சு பிள்ளை உரையெழுதியுள்ளார்.

                 "செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்

பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,

முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே

எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்!"

செட்டியார் மக்கள் வாழும் தெருக்கள் வழி செல்ல வேண்டாம், செல்வம் ஈட்டுதலையே குறிக்கோளாய் கொண்ட செக்கார மக்கள் வாழும் தெருக்கள் வழி செல்ல வேண்டாம். தலைவாசலின் அளவைக்குறைத்து யாரேனும் வீட்டினுள் நுழைந்தால் தலைவாசலில் முட்டியே வீடினுள் நுழைய வேண்டிய அந்தணர் வீட்டை எட்டி பார்க்க வேண்டாம். எந்நாளும் உணவின் மூலம் அனைவரையும் காப்பாற்றுவோர் வேளாண் தொழில் புரியும் வேளாளர்களே என இப்பாடல் நிறைவுறுகின்றது.

தனிப்பாடல் திரட்டு:

தனிப்பாடல்கள் திரட்டு என்ற நூலில் இப்பாடல் காளமேகப் புலவரால் எழுதப்பெற்றதாய் கிடைக்கின்றது. அவ்வவ் அமையங்களில் பாடியதனிப்பாடல் திரட்டுமொத்தம் 158 பாடல்கள் ஆகும்.

                 ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்

மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை

பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்

உற்றிடுபாம் பெள்ளெனவே யோது .(5) 

பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும். படமெடுத்து ஆடும்போதே 'உச்' என்று இரையும். பாம்பாட்டி பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும். ஓடிப்போய் மண்ணால் செய்த மண்டை ஓட்டில் சுருண்டு படுத்துக்கொண்டு பரபர என ஒலி வருமாறு அசையும். பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கு உண்டு. எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும். செக்கில் ஆட்டப்படும்போது செக்கின் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும். நம் தலை மண்டைக்குள் ஓடிப் பரபர என்று தேய்க்கப்படும். பார்க்கப்போனால் அதற்குப் பிண்ணாக்கு உண்டு.

 

மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்

கூடிமிக மண்பிசைவான் கொல்லனே – தேடி

இரும்படிப்பான் செக்கானெண் ணெய்விற்பான் வண்ணான்

பரும்புடைவை தப்பும் பறை .(123)

மாடு தின்பான் பார்ப்பான் மறை ஓதுவான் குயவன் கூடி மிக மண் பிசைவான் கொல்லனே தேடி இரும்பு அடிப்பான் செக்கான் எண்ணெய் விற்பான் வண்ணான் பரும்புடைவை தப்பும் பறை.மாடு தின்பான் பார்ப்பான் – என்பது போல் வேடிக்கையாகப் பாடியது. பறையன் மாடு தின்பான் பார்ப்பான் மறை ஓதுவான், குயவன் கூடி மிக மண் பிசைவான், கொல்லனே தேடி இரும்பு அடிப்பான், செக்கான் எண்ணெய் விற்பான், வண்ணான் பரும்புடைவை தப்பும் இந்தப் பாடல் பூட்டுவிற்-பொருள்கோள் யாப்பு வகையில் அமைந்துள்ளது. இதனை விற்பூட்டுப்-பொருள்கோள் எனவும், பூட்டுவிற்-பொருள்கோள் எனவும் குறிப்பிடுவர்.

 

ஏய்ந்த தனங்க ளிரண்டுமிரு பாகற்காய்

வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே –தேய்ந்தகுழல்

முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்

குக்கலிச்சிக் குங்கலைச் சிக்கு. (107)

ஏய்ந்த தனங்கள் இரண்டும் இருபாகற்கு ஆய் வாய்ந்த விடை செக்கு உலக்கை மாத்திரமே தேய்ந்த குழல் முக்கலச் சிக்கும் பிடிக்கும் மூதேவியாள் கமலைக்குக் கலிச்சிக்கும் கலைச்சிக்கு. பாகற்காய், செக்குலக்கை என்றெல்லாம் வரப் பாடியது. உமையாகிய அவளுக்கு இரண்டு முலைகள். அவை இரண்டும் தன்னை அம்மையப்பர் என்று, ஆண்பெண் என்று, இரண்டு பாகங்களாக வைத்துக்கொண்டிருக்கும் சிவனுக்கென்று உருவாகி இருக்கின்றன. அவளுக்கு வாய்த்திருக்கும் இடையோ செக்கில் இருக்கும் உலக்கை போல் மட்டுமே உள்ளது. அவள் கூந்தலில் மூன்று கலச் சிக்குப் பிடித்திருக்கும். (சடை போட்டிருக்கும்) மூதேவியான கமலைக்கும், கலிச்சியாகிய திருமகளுக்கும், கலைச்சியாகிய சரசுவதிக்கும் இதே தலைச்சிக்கு-தான்.

குடவாசல் விண்ணாள்: 

திருக்குடவாசல் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராகும். இவ்வூரிலே வாழ்ந்திருந்த விண்ணாள் காளமேகப் புலவரிடம் சென்று தன்னைப்பற்றியும் ஒரு கவி பாடுமாறு கேட்டாளாம். அவளுடைய வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் இந்தச் செய்யுளைப் பாடினார்.

                   செக்கோ மருங்குல் சிறுபய றோதனஞ் சிக்கலிதம்

          வைக்கோற் கழிகற்றை யோகுழி யோவிழி வாவிதோறும்

          கொக்கேறி மேய்குட வாசல் விண்னாள் வரைக் கோம்பி யன்னீர்

          எக்கோ படைத்தது நீரே நெருப்பில் எரிந்தவரே! (2.18)

 'சிவபெருமானின் நெற்றிக் கண் நெருப்பிலே பட்டு எரிந்துபோன காமகேவரே! இவள் இடையோ செக்குப் போலப் பருத்திருக்கிறது. இவள் மார்பகங்களோ சிறு பயற்றின் அளவாகச் சிறுத்துள்ளன. சிக்குப் பிடித்த இவள் கூந்தல் வைக்கோற் கற்றைக் கழித்துப் போட்டாற் போலத் தோன்றுகின்றது. விழிகள் இருக்க வேண்டிய இடத்திலே குழிகள் விளங்குகின்றன. குளங்கள் தோறும் கொக்குகள் சென்று மீன்களை மேய்ந்து கொண்டிருக்கும் குடவாசல் நகரத்திலே இவ் விண்ணாளும் இப்படித் தோன்று கின்றாள். மலையகத்துக் காணப்படும் ஒணானைப் போன்றவரே! எதற்காகத்தான் இவளையும் பெண்ணென்று படைத்திரோ? செய்யுளைக் கேட்டதும் விண்ணாள் சிரித்துவிட்டாள். அழகிற் சிறந்த அவளுக்குக் கவிஞர் பாடிய வசைப்பாடல் வேடிக்கையாகவே இருந்தது. (புலியூர் கேசிகன் உரை) 

முடிவுரை:

      இக்கட்டுரை இன்னும் நிறைவைடையவில்லை, தேடல்கள் தொடர்கின்றன, இலக்கிய சான்றுகள் கண்டடையப்படும்போது பதிவேற்றம் செய்யப்படும்.