Wednesday, April 6, 2022

செட்டியார்கள் யார்?

 செட்டியார்கள் யார்?

 

1.0 முன்னுரை:

            இக்கட்டுரையை எழுத தூண்டியதே இணையத்தில் பார்த்த ஒரு பதிவு தான் வ.உ.சி ஐயா (www.vocayya.com) என்ற வலை தள பக்கத்தில் ’செட்டியார் என்பது சாதி கிடையாது பட்டம் மட்டுமே! செட்டியார் என்பதை சாதியாக கொள்வோர் என்பது முட்டாள்களே’! என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் உள்ள ஒருவிடயம் செட்டியார்கள் என்னும் போர்வையில் அனைவரையும் ஒருங்கிணைக்க ஒரு முயற்சி நடைபெறுகின்றது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. பலர் இக்கருத்தை சரி என ஒற்றுமையை பேண ஏற்றாலும், இதில் தத்தம் வரலாறு மறைக்கப்படும் என்ற புரிதலே இன்றி சிலர் அனைத்து செட்டியார்களின் கதைகளை வெளியிடுவது வருத்தமளிக்கின்றது. ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு செட்டியார் இனதிற்க்கும் அதற்கான பெருமையும் அதன் வரலாறும் உள்ளது அவர்களுக்கென தனி கொடி தனி சின்னம், கொள்கைகள் உள்ளன, அதனை மறைத்துவிட்டு மற்றொரு செட்டியாரின் வரலாற்றை தம் இன வரலாறாக ஏற்பதும், பிற செட்டியார்கள் தன்னுடைய வரலாறு பற்றி பேசாமல் பிற செட்டியார்களின் வரலாற்றை ஏற்பதும் இகழ்ச்சியே. இது சரி என ஏற்கப்படின் அது அரசியல் லாபத்திற்காகவே ஆகும்.

2.0 அக்கட்டுரையில் நான் கண்ணுற்றவை:

        வெள்ளாஞ் செட்டியார்கள், Purely வெள்ளாளர்கள் ஆவர்! வெள்ளாஞ் செட்டியார்களுக்கும் வாணிப செட்டியார்களுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை, செட்டியார் என்பது பட்டம் தான் சாதி கிடையாது, பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளில் உள்ள வெள்ளாளர்கள், வெள்ளாஞ் செட்டியார்கள் எங்கே எங்கே உள்ளார்கள் என்பதை அடையாளம் கண்டு வெள்ளாஞ் செட்டியார்களை வெள்ளாளர் அமைப்புகளில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்! வெள்ளாஞ் செட்டியார்களுக்கும் வெள்ளாளர் அல்லாத வாணிப செட்டியார்களுக்கும் இடையே திருமணம் நடைபெறுவதை தடுத்து நிறுத்துங்கள்! செட்டியார் பட்டத்தை சாதியாக நினைத்து சில செட்டியார் அமைப்புகள், சங்கங்கள் வெள்ளாஞ் செட்டியார் கபளிகரம் செய்ய நினைக்கின்றனர்! ஜாக்கிரதையாக இருப்போம்! சைவ வேளாளர்களுக்கும், துளுவ வேளாளர்களுக்கும் கூட செட்டியார் பட்டம் உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்!  வேளாளர் அல்லாத மற்ற சாதிகளான குலாலர் (குயவர்), சேனைத்தலைவர் சாதிக்கும் செட்டியார் பட்டம் உண்டு, ஆகவே செட்டியார் என்பது பட்டம் மட்டுமே, சாதி கிடையாது!  செட்டியார் பட்டம் கொண்ட அனைத்து சாதியும் ஒரே சாதி கிடையாது! இவர்களுக்குள் மாற்றி மாற்றி திருமணம் என்பது கூடவே கூடாது.  

3.0 செட்டியார்கள் யார்?  

      மேற்கூறிய விடயங்கள் உண்மையே. செட்டியார்கள் யார்? செட்டியார் என்பது சாதிப்பெயர் அல்ல மாறாக வணிகத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு தமிழ் குடிகளுக்கும் அரசர்களால் வழங்கப்பெற்ற பட்டமே செட்டி, செட்டி என்னும் சொல் வடமொழியில் சிரேஸ்டி என திரியும். அக்காலத்தில் செட்டிப்பட்டம் வழங்கப்பட்டதென்னவொ கடல் கடந்து வாணிகம் செய்தோர்க்கும், உள்நாட்டில் பெருவணிகம் செய்தோர்க்கும் தான், அதன் பின் சில மன்னர்களால் உள்நாட்டில்  சிறுவணிகம் செய்தோர்க்கும் செட்டி பட்டம் வழங்கப்பட்டது.

செட்டியார் என்பது குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழகம், கேரளாவில் வணிகம் செய்வோர்க்கு மட்டுமே வழங்கப்பட்ட பட்டம் என்பதனை Indian Institute of Population Studies (1975) வெளியிட்ட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவரெல்லாம் செட்டிகள் என்பதற்க்கு பல செய்யுள் சான்றுகள் உள்ளன. இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என் மூவகை வணிகர்கள் இருந்தாக சிலப்பதிகாரம் கூறுகின்றது.  


1.   இப்பர் – குறைந்த செல்வமுடைய செட்டியார்கள்

2.   கவிப்பர் – நடுத்தர செல்வமுடைய செட்டியார்கள்

3.   பெருங்குடியர் – நிறைந்த பெருஞ்செல்வமுடைய செட்டியார்கள்.

அரசனுக்கு அடுத்த நிலையில் உள்ளதாக கருதப்பட்டோர் பெருங்குடியர் ஆவர்.  பெருங்குடியினர் நீர்வழி வணிகமும், நில வழி வணிகமும் சேர்த்து செய்தனர். நீர்வழி வணிகத்தில் தான் அதிக வருவாய் கிடைத்தது. வணிகத்தை பரம்பரையாக செய்துவரும் வணிக மரபினர் வைசியர் எனப்பட்டனர். வடமொழி ஆதிக்கம் ஏற்பட்ட பின்புதான் பல வணிக குடிகள் தங்களை வைசியர்களாக கருதி அப்பெயரை பயன்படுத்த தொடங்கினர். அது வரை தான் வாணிகம் செய்த பொருள்களாலேயே தங்கள் குடி பெயரை அமைத்துக் கொண்டனர். நீர்வழி வணிகத்தில் உழவினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டும், காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் வணிகம் செய்தனர். நில வழி வணிகத்தில் அனைத்து பொருட்களும் வணிகம் செய்யப்பட்டன. வாணிபன் என்ற பெயர் வணிகத்தை செய்வோரால் ஏற்படுத்தப்பட்டது. இப்பெயர் வாணியர்களுக்கும் பொருந்தும். 

வணிகர் என்போர் ஒருகுடியல்ல. பல குடிகள் சேர்ந்தே வணிகம் செய்தனர். நவ தானியம் விற்றோர் கூல வாணிகன் என்றும், துணிவிற்றோர் அறுவை வணிகரென்றும், பொன் விற்றோர் பொன் வணிகரென்றும், அரசு பணிகளில் இருந்தவர்கள் சேனை வணிகர் என்றும் அழைக்கப்பட்டனர். தொல்காப்பியத்தில் வைசியர்களுக்கு உரிய தொழில்கள் என ஐந்து தொழில்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

1.தமக்குரிய நூல்களை ஓதுதல்

2.தமக்குறிய யாகங்களை செய்தல்

3.தாம் பெற்ற பொருட்களை நல்வழியில் ஈதல்

4.உழவு செய்வித்தல்

5.பசுக்களை காத்தல் என்பன.

 

வாணியர்களிடம் எருது இன்றும் உள்ளது என்பதனை நினைவில் கொள்க. வாணியர்களில் ஒரு பிரிவினர் வேளாண்மை செய்தனர் அவர்கள் வாணுவ செட்டிகள் எனப்பட்டனர். இமயவரம்பனால் பல உணவு பண்டங்கள் விற்கும் வணிகர்கள் பாராட்டப்பட்தையும் அவர்களின் குடிகாத்தலையும் குமட்டூர்க் கண்ணனார், ”கூலம் பகர்நகர் குடிபுறந் தராஅ” என வாழ்த்தி பாடியுள்ளார்.

காசு மாற்றம் செய்வோர், பண்டம் விற்போர், கூலம் விற்போர், அணிகலன் விற்போர், மீன் விற்போர், உப்பு விற்போர், எண்ணெய் விற்போர், உழவு செய்தவர்களில் சிலர், அனைவரும் செட்டியார்களே. இவர்கள் அனைவரும் வெவ்வேறு பின்புலம் கொண்டவர்கள், வேறு சூழியல் அமைப்பில் இருந்து வந்தவர்கள் இவர்கள் ஓரிடத்தில் வணிகம் செய்தவர்கள் அல்ல. இவர்களின் தமிழ் மொழி வழக்கும் வெவ்வெறானவை. இதில் பெரும்பாலான வணிகர்கள் ஒன்றுகூடி வாழ்ந்த இடமே வாணியம்பாடி ஆகும். பாடி என்பது தங்குமிடத்தை குறிக்கும், வணிகர்கள் வந்து தங்கிய பகுதியாதலால் வாணியம்பாடியானது.

3.0 வணிக குழுக்கள்:

     தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் வட நாடுகளிலிருந்து மக்கள் வணிக குழுக்களாக வந்து தங்கி வணிகம் செய்தனர் என்பதனை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் நடுகற்கள் தெரிவிக்கின்றன. கேத்தாண்டன்பட்டி ஆராவமுத பெருமாள் கோவில் நடுகல், இங்கு வந்து தங்கிய வணிக குழுக்கள் பற்றி பேசுகின்றன. வடநாட்டு வணிக குழுக்கள் 1.நிகமா 2.புகா 3.சிரேணி 4.சங்கம் அகியவை ஆகும். (தினமணி:08-03-2015) தென்னாட்டில்,

1.   நாநாதேசி

2.   ஐநூற்றுவர் (பஞ்ச சதவீரர்)  

3.   கவரை(பலிஜர்)

4.   மாயிலட்டி

5.   சித்திர மேழி

6.   சாத்து

7.   அத்திகோசம்

8.   மணிகிராமத்தார்

9.   அஞ்சுவண்ணத்தார்

10.  பன்னிரெண்டார் (நகரத்தார்)

11.  அறுநூற்றுவர்

12.  மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள்

13.  ஆயிரவர்

14.  இருபத்துநான்கு மனையார்

நாநாதேசி:

      கிருஷ்ணகிரியில் போச்சம்பள்ளி அருகே உள்ள பேருஹள்ளியில்  கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டானது ஹொய்சாள மன்னரான வீர ராமனாதன் காலத்தை சேர்ந்தது, அக்கல்வெட்டில் நாநாதேசி வெளிநாடு சென்று வணிகம் செய்யும் வணிக குழு எனவும், மன்னரான வீர ராமனாதனின் நலனுக்காக நிலத்தை தானம் அளித்த செய்தியினை இக்கல்வெட்டு கூறுகின்றது. இதன் மூலம் ஹொய்சாள மன்னர்களின் கீழ் இவ்வணிக குழு இருந்ததை அறியலாம். இவ்வணிக குழு பற்றிய கல்வெட்டுக்கள் தமிழகத்தில் குறைவாகவே உள்ளன. (இந்து தமிழ் திசை: 26-10-2015) இவர்களுடன் இருந்தவர்கள் தான் ஐநூற்றுவர்.

ஐநூற்றுவர் (பஞ்ச சதவீரர்)

      ஐந்நூற்றுவர் எனப்படுவோர் முற்காலத்தில் சாளுக்கியத் தலைநகராகிய வாதாபியில் உள்ள ஐகோலே என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்த ஒரு வணிகக் கழகத்தினர் ஆவர். இன்றைய இந்தியாவின் தமிழகம், கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம் சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றிப் பொ.கா. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன. சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்திலீடுபட்டதாகத் தெரிய வருகிறது. எனினும் ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலை தூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்குமிடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றியும் தெளிவுறுத்துகின்றன. தென்னிந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் செயற்பட்ட இவ்வணிகக்குழு  கன்னடத்தில் ஐயவோலே என்றும் தெலுங்கில் ஐயவோலு என்றும் வடமொழியில் ஆரியரூபா என்றும் தமிழில் ஐந்நூற்றுவர் என்றும் அறியப்படுகிறது. சோழர்களின் கடுமையான கட்டுப்பாடு காரணமாக இவர்களின் சொந்தப் பண்பாட்டு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டாலும் சோழர்களின் கீழ் இவர்கள் மிக்க வலிமை பெற்றனர். ஐநூற்றுவர்களை பஞ்சத வீரர்கள் என கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஈரோடு, பெரிய பாளையத்தில் வெட்டப்பட்ட வணிக குழு கூட்ட கல்வெட்டு இவர்கள் பற்றி கூறுகின்றது. மேலும் பிரான் மலை கல்வெட்டும் இவர்கள் பற்றி கூறுகின்றது.( A History of India, by Burton Stein and David Arnold, p.120)

கவரை(பலிஜர்)  

   தெலுங்கு வணிக குழுவினரான இவர்கள் சோழர் காலத்தில் வணிகப் பிரிவினரில் வலஞ்சியர் அல்லது வளஞ்சியர் குழுவில் இருந்தனர், வளஞ்சியர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினர். வளஞ்சியர் என்பது தற்கால பலிஜா என்ற வணிகர் மக்களைக் குறிப்பதாகும். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கவரை வளஞ்சியர்கள் எனும் வணிக பிரிவினர் பல குடிகளுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினைப் பற்றி முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டுர்க் கல்வெட்டு  ஒன்று விரிவான செய்திகளைக் கூறுகின்றது. இதில் தென்னிலங்கை வளஞ்சியர் என ஒரு பிரிவும் உண்டு. தெலுங்கு வார்த்தையான பலிஜாவும் பலிஜிகாவும் ஒரு ஒருபொருள் குறித்தவை. இதுவே வளஞ்சியம், வளஞ்சியர், பலஞ்சி, பலிஜா என பெயர் மாற்றம் பெற்றது. வணிஜ் என்ற சொல்லிருந்தே பலிஜா என்னும் சொல் உருவாகியதை Epigraphia Indica and Record Of The Archaeological Survey Of India - Volume 18. Office of the Superintendent of Government Printing, India. 1983. பக். 335. என்ற நூல் எடுத்து கூறுகின்றது.

தென்னிலங்கை வளஞ்சியர்

தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும் என்ற கருத்துப் பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல்கள், இலங்கைக்கும் தமிழகத்திற்கும் அதாவது மருங்கூர் உட்பட ஏனைய பாண்டியர் துறைமுக மற்றும் வணிக நகரங்களிற்கும் நெடுங்காலத் தொடர்பு இருந்தமையை அதாவது முற்காலப் பாண்டியர் காலமான சங்ககாலத்தில் காலத்தில் தொடர்பு இருந்தமையை உறுதிப்படுத்தப்படுத்துவனவாக அமைந்துள்ளன. முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுகள் வளஞ்சியரை, தென்னிலங்கை வளஞ்சியர் என குறிப்பிடுகின்றன. வேள்விக்குடி கோவிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும் திசையாயிரத்துநூற்றுவரும் கட்டச்செய்தனர் எனக் கல்வெட்டு கூறுகிறது. தென்னிலங்கை வளஞ்சியர் தொடர்பான தகவல்கள் வேள்விக்குடி கோவில் பற்றியும், கண்டியூர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. செம்பியன் கண்டியூர் அகழாய்வு மூலம் இலங்கை தொடர்பான சில தகவல்கள் அறியப்பட்டுள்ளன.

மாயிலட்டி

மேல் பாடி சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டு படி ஸ்வஸ்திஸ்ரீ என்னும் மங்கலச் சொல்லுடன் தொடரும் முதல் ஏழு வரிகள், முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தியாகும். இக்கல்வெட்டு இராசராசனின் 14-ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. எனவே, கல்வெட்டின் காலம் கி.பி. 999.  சோழ நாடு கூற்றங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. மாயிலட்டி – மாயிலட்டி என்பது வணிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பட்டப் பெயர். நந்தாவிளக்கெரிக்க ஆகும் செலவினங்களுக்காகத் தங்கள் ஆளுகையில் இருக்கும் வாணசமுத்திரத்தில் ஆயிரம் குழி நிலத்தை ஒதுக்கித் தருகிறார்கள். அந்த நிலத்தைப் பெற்றுக்கொண்ட, ராஜரயபுரதில் இருக்கும் எண்ணெய் வணிகனான கண்டன் மறவன் என்பவன்  (மாயிலட்டி என்னும் பட்டப்பெயருடையவன்) நந்தாவிளக்குக்கு வேண்டிய எண்ணெய் நாள்தோறும் (நிசதம்) அளந்து தருவதாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறான். குறிப்பாக எண்ணேய் வணிகரின் குழு, கல்வெட்டுகளில் “மாயிலட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. இங்கே, கண்டன் மறவன் என்பவன் ஒரு எண்ணெய் வணிகக் குழுவினன். ஏனெனில், சங்கரப்பாடியான் என்னும் தொடர் எண்ணெய் வணிகரைக் குறிக்கும் சொல்லாகும். சோதி நகரத்தார் என்னும் பெயர் ஆந்திர கருநாடக  பகுதிகளில் இருந்த பெரும் எண்ணெய் வணிகர்களை குறிக்கும்.

சித்திர மேழி 

சித்திரமேழி என்பது கி.பி. 11 ஆம் நூற்றண்டில் சோழர் காலத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட வணிகக் குழுவாகும். சித்திர மேழி என்பது காவிரிப்பூம்பட்டிண செட்டியார்களின் வெள்ளிக்கதவுகளில் பொறிக்கப்பட்டிருந்த ஏர்கலப்பை சின்னமாகும். இவர்கள் வேளாண் வணிக குழுக்கள், இவர்கள் சித்திர மேழியை வணங்கியதால் அவர்கள் அழகிய ஏர்கலப்பை நாட்டார் அல்லது பொன் கலப்பை நாட்டார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வேளாண்மையை முதன்மைபடுத்திய நாட்டார்கள் அல்லது நகரத்தார் ஆவர். இவர்கள் வேளாண் இனத்தை சார்ந்தவர்கள்.

சாத்து வணிகர்கள்

      பொதி எருதுகளின் மீதும் ஏற்றிச் சென்றுள்ளனர். அவைகளின் மூட்டைகள் பொதி என்றும், பாக்கம் என்றும் அழைக்கப்பட்டன. அதனால் வணிகர்கள் சாத்தர் எனப்பட்டனர். நாட்டு கோட்டை நகரத்தார் இதில் அடங்குவர்.  வணிகர்கள் ஓர் ஊருக்குப் பொருள்களைக் கொண்டு சென்று விற்பதுடன், அங்கு கிடைக்கும் பொருள்களைத் தம் ஊர்க்கும் வாங்கி வந்தனர். எனவே அவர்கள் இருவழி வணிகமும் செய்தனர். வணிகப் பொருள்கள் சாத்து எனப்படும். அதனால் வணிகர்கள் சாத்தர் எனப்பட்டனர். ஐம்பெரும் காப்பியத்துள் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டார். கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும் பெயராகும். தானியங்கள் 18 வகைப்படும் என்பர். ஏற்றுமதிப் பொருள்கள் ஏறுசாத்து என்றும், இறக்குமதி பொருள்கள் இறங்குசாத்து என்றும் கூறப்படும். சோழநாட்டு வணிகப் பொருளுக்குப் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது.

அத்திகோசம்

      வணிகர்கள் தங்கள் பதுகாப்புக்கு வைத்திருந்த குழுவே அத்திகோசம். இவர்கள் பற்றிய குறிப்புக்கள் பெருவழி ஒரங்களில் கிடைக்கின்றன. இவர்கள் வீர கோசம் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் வணிகர்கள் உடன் தங்கி இருந்து அவர்களை யானை குதிரை ஆயுதங்கள் கொண்டு காத்து அதற்கான சுங்கத்தையும் வசூலித்துக் கொண்டனர். இவர்கள் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். (தினமணி:15-03-2022)

மணிகிராமத்தார்

மணிக்கிராமத்தார் என்போர் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தோர் ஆவர். உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. காஞ்சி, மாமல்லபுரம், பழையாறை போன்ற பெரிய நகரங்களில் வாழ்ந்தவாறு வாணிகம் புரிந்தோர் நகரத்தார் ஆவர். இவர்கள் நகர ஆட்சியையும் ஏற்று நடத்தினர்.

அஞ்சுவண்ணத்தார்

      இது இஸ்லாமிய வணிக குழு ஆகும். அஞ்சுவண்ணத்தாரையும், மணிக்கிராமத்தாரையும் அறுநூற்று பேரையும் (நாயர் அமைப்பு) ஈசோ சபீருக்கு வழங்கும் உரிமைகள் (அதிகாரங்கள்) முறையாக செய்யப்படுகின்றனவா என்று மேற்பார்வை செய்ய அதிகாரப்படுத்தியதாக தரிசாபள்ளி செப்பேட்டில் காணப்படுகிறது. அஞ்சுவண்ணம் என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாகவும், அவ்வூரைச் சார்ந்த மக்கள் அஞ்சுவண்ணத்தார்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் டாக்டர் Dr. HULTZSCH என்பவர் குறிப்பிடுகிறார். சிலர் அஞ்சுவண்ணம் என்பது யூதர்களுடைய காலனி என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். செப்பேட்டில் 11 பேர் கூஃபி லிபியில் கையொப்பம் இட்டுள்ளனர். இந்த லிபி அரேபியாவுடன் தொடர்புடையது.

பன்னிரண்டார் (நகரத்தார்)

தஞ்சையை ஆண்டு வந்த சோழமன்னன் ஒருவன் காவிரிப் பட்டினத்தில் வாழ்ந்து வந்த செட்டிகுலத்தைச் சேர்ந்த பெண்ணை மணக்க நினைத்தான். இதை அனுமதிக்கமுடியாத நிலையில் காவிரிப்பட்டினமே தீக்கு இரையாக்கப்பட்டது. அந்த ஊரிலிருந்து தப்பி வந்தவர்கள் பதினொரு செட்டி குலத்தினைச் சேர்ந்தவர்கள் பதினொருவர் தங்களோடு கொண்டுவந்த பொருட் செல்வங்களை இரத்தினகிரிமலையில் பொன்னிடுபாறை என்னும் இடத்தில் வைத்துப் பங்கிட்டுக் கொண்டார்கள். ஆளுக்கொரு பங்காகப் பதினொரு பங்காகப் பலமுறை பிரித்தும், அச்செல்வம் பன்னிரண்டு பங்குகளாகத் தானாகவே பிரிந்தது. எத்துணை முறை பாகம்பிரித்த போதிலும் பன்னிரண்டு பங்காகவே அமைய அவர்கள் திகைத்திருக்கையில் அவர்கள் முன்போய் ‘உங்களிலே நானும் ஒரு நகரத்தான்' என்று இறைவன் நிச்சயித்துக் கூற அவர்களும் இசைந்து அன்று முதல் அந்தப் பன்னிரண்டாம் பங்கை இறைவனுக்கே அளித்தனர். அது முதல் அவர்களுக்குப் ‘பன்னிரண்டாம் செட்டிமார்' என்ற பெயர் வழங்கலாயிற்று. அவர்கள் உலகெங்கும் சென்று வாணிபம் செய்து வாழ்ந்து வரலாயினர். கூட்டுப் பதினொன்றான கோநகரத்தார் முன்போய்... பன்னிருவராகிப் பலதிசையும் கீர்த்தி செல மன்னியே வாழும் வணிகர்' என அழைப்பர்  தமிழகத்தில் கி.பி. 11 – 13 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் பன்னிரண்டார், இவர்கள் இன்றளவும் கொங்கு பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். சேறைக் கவிராசபிள்ளை இயற்றிய வாட்போக்கி என்னும் "இரத்தினகிரியுலா" நூலில் இச்சமூகம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

அறுநூற்றுவர்

      ராமநாதபுரம் அருகே கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகக் குழுவின் பாதுகாவலர்களான அறுநூற்றுவரின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறுநூற்று மங்கலம் சிவன்கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது. கி.பி.1297 முதல் கி.பி.1342 வரை மதுரையை ஆண்ட கடைசி பாண்டிய மன்னனான மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. அரசர்கள் பிராமணர்களுக்கு நிலதானம் தரும்போது மன்னரின் பெயருடன் ‘மங்கலம்’ என்பதையும் இணைத்து ஊர்களை தானமாக அளித்துள்ளனர். அது போல வணிகக் குழுக்களின் பாதுகாப்புப் படைவீரர்கள் எனக் கருதப்படும் அறுநூற்றுவர், தங்கள் பெயருடன் மங்கலம் என்பதையும் இணைத்து பிராமணர்களுக்காக ஒரு ஊர் உருவாக்கி, அதை தானமாகக் கொடுத்துள்ளனர். இதனால் இவ்வூரின் பெயர் அறுநூற்றுமங்கலம் என ஆகியுள்ளது. இவ்வூரின் காவல் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுள்ளனர். மேலும் அறுநூற்றுவர் பெயரில் திருவாடானை அருகே அறுநூற்றுவயல் என்ற ஊரும் உள்ளது. (இந்து தமிழ் திசை: 05-12-2017)

சோனகரர்

இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்.

மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள்

காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்த செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.

ஆயிரவர்

மஞ்சப்புத்தூர், காசுக்காரர், சோழியர், நகரம், சமயபுரம், பஞ்சுபுரம், பக்காமணி, துவரங்கட்டி, தாராபுரம் என பதினெட்டு பிரிவுகளைக் கொண்டவர்களே இந்த ஆயிரவர். இவர்களுக்கான ஆயிரம் கோத்திரம் வைசிய புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுவர். இவர்கள் இன்று தமிழ்நாடு முழுதும் பரவி வாழ்கின்றனர். உள்நாட்டு வணிகத்தில் இவர்கள் சிறந்து விளங்கினர்.  

இருபத்துநான்கு மனையார்

      24மனை தெலுங்கு செட்டியார் இனம் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இனம். இவர்கள் ஆதியில் பலிஜா இனத்தை சார்ந்தவர்கள். இவர்களே செட்டி பலிஜாக்கள். செட்டி பலிஜாக்களே பலிஜாவின் முதல் கிளை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் பல பெயர்களில் வரலாற்றில் குறிப்படுகின்றனர். செஞ்சி நாயக்கர்கள் அனைவரும் செட்டிபலிஜாக்களே. மேலும் மாமன்னர் கிருஷ்ணதேவராயரும் பலிஜா இனத்தை சார்ந்தவரே. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 24 மனைதெலுங்கு செட்டிபலிஜாக்கள் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்கள் 24 மனை தெலுங்கு செட்டி, தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு பட்டி செட்டி, ஜனப்ப செட்டி, சலுப்பா செட்டி,  சாது குல தேசாதிபதி தெலுங்கர் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), யாக க்ஷத்ரிய செட்டியார் (1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்), தேசதிபதி தெலுங்கர்(1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியல்) என பல பெயர்களால் அறியப்படுகிறது. பண்ணைகாடு வனப்பகுதியில் உள்ளவர்கள் வாழைகாய்தெலுங்கர், என்றும், கிராமப்புறங்களில் உள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ளவர்ளை உப்பு தெலுங்கர் என்றும் அழைக்கிறார்கள்.

4.0 செட்டிபட்டத்துடன் கூடிய இன்றைய சாதிகள்:

1.      அகரம் வெள்ளாஞ் செட்டியார்,

2.      ஆயிர வைசியர்,

3.      தேவாங்கர்,

4.      கற்பூர செட்டியார்,

5.      காசுக்கார செட்டியார்,

6.      பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தமச் செட்டியார்,

7.      சாதுச் செட்டி,

8.      தெலுங்குச் செட்டி,

9.      இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டியார்,

10.    சுந்தரம் செட்டி,

11.    வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட),

12.    வயநாடு செட்டி,

13.    கொங்குச் செட்டியார்,

14.    குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட),

15.    சோழிய செட்டி,

16.    தெலுங்குப் பட்டி செட்டி,

17.    அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்),

18.    ஆரிய வைசியச் செட்டியார் (கோமுட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,)

19.    பலிஜா செட்டியார்,

20.    பேரி செட்டியார்,

21.    சோழபுரம் செட்டியார்,

22.    காயல் செட்டி,

23.    செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட)

24.    கோட்டைப்புரச் செட்டியார், கோட்டைப்புர வைசியச் செட்டியார்,

25.    மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்),

26.    நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்),

27.    திருவெள்ளறைச் செட்டியார்

அகரம் வெள்ளாஞ் செட்டியார் வேளாண்மையையினால் செட்டியார் பட்டம் பெற்றனர் வேளாள மரபினர்.

ஆயிர வைசியர் வணிகத்தையும் அவ்வினத்தை சேர்ந்தவர்களான 18 குடிகளும் தமிழகத்தில் சிறுவணிகம் மற்றும் வேளாண்மையும் செய்து வந்தனர். பரமக்குடியினை சுற்றி கிராமத்தில் வாழ்ந்த ஆயிர வைசியர்கள் இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலம் தங்கள் விவசாய நிலங்களை விற்று குடியேறியவர்களே. காசுக்கார செட்டியார்கள் ஆயிர வைசியர்கள் பிரிவில் ஒரு குடி ஆகும். ஆயிர வைசியர்கள் பேரி செட்டி எண்ட்ரும் அழைக்கப்படுவர்.

தேவாங்கர்கள் கருநாடகா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் இடம் பெயர்ந்து வந்தார்கள் என்பது குறித்து இவர்களது கோயில் விழாக்களில் பெரியவர்கள் பாடும் பாடல்களில் விளக்கம் காணப்படுகிறது. இந்தப் பாடல்களில் இவர்கள் கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து விட்டதாகவும் பாடல் உள்ளது. இதில் அவர்களது முன்னோர் பாதிக்கப்பட்ட கதையும் விளக்கப்படுகிறது.  தேவாங்க செட்டியார் எனப்படுவோர் தமிழ்நாட்டில், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டு வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சேடர் எனும் பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் இந்த சமுதாயத்தினர் தேனி, விருதுநகர், திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஜவுளி செட்டிகள் என்ரும் அழைக்கப்படுவர்.

கற்பூர செட்டியார்கள்  கொங்க உப்பிலியர்களில் ஒரு பிரிவினர் ஆவர். உப்பு காய்ச்சுவது உப்பிலியர்களில் ஒரு பிரிவினர். இவர்கள் 10 வகையான உப்பு காய்ச்சுவர். அதில் கற்பூரம் தயாரிப்போரே கற்பூர செட்டியார்கள் ஆவர். இதில் சிலர் கன்னடத்தையும் தாய்மொழியாக கொண்டவர்கள்.  இவர்களின் குல தெய்வம் கெஜகட்டியில் உள்ள ஆதி பொம்ம தேவ கருவன்றாய சுவாமிகள் என கற்பூர செட்டியார்கள் வரலாற்று நூலை எழுதிய ஜியார்வி தெரிவிக்கின்றார். இவர்கள் தெலுங்கில் உப்பாரா எனவும் அழைக்கப்படுவர்.  

பன்னிரண்டாம் செட்டியார்கள் அல்லது உத்தமச் செட்டியார்கள் தமிழகத்தில் கி.பி. 11 – 13 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் பன்னிரண்டார், இவர்கள் இன்றளவும் கொங்கு பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர்.

சாதுச் செட்டி பெரும்பாலும் 24 மனை தெலுங்கு செட்டிகளே, இதில் தெலுங்கு பட்டி செட்டி, தெலுங்கு செட்டிகள் அடங்கும். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

சுந்தரம் செட்டி திண்டுக்கல், திருச்சி பகுதிகளில் இன்றளவும் வாழ்ந்துவரும் இனக்குழு தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்கள் புன்செய் விவசாயம் மேற்கொண்டுள்ளானர்.

வாணியர், வாணியச் செட்டியார் தமிழை தாய்மொழியாக கொண்ட எண்ணெய் ஆட்டி விற்கும் சமூகத்தினர்.  கர்நாடகாவில் காண்டல சமூகத்தினர் சோமசத்திரிய காணிக, காணிக ஷெட்டி, ஜோதிநகர காணிக, ஜோதிபன காணிக, ஒற்றெருது காணிக, ரெண்டெருது காணிக, வீரசைவ காணிக, விஜயநகர காணிக எனும் பிரிவுகளாகவும், ஆந்திராவில் தேவ காண்டல மற்றும் சஜ்ஜன காண்டல என்றும் அழைக்கப்படுகின்றனர். மேலும் தமிழகத்தில் வாணிய செட்டியார், வாணிக வைஷ்யா என்றும், கேரளாவில் வாணிய செட்டியார், செக்காள நாயர் என்றும், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் வட இந்தியாவில் தெலி, காணிசா, சாஹீ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

வயநாடு செட்டி என்பவர்கள் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், நீலகிரி மலையிலுகள்ள வய நாடு பகுதியில் வாழக்கூடிய ஒரு சாதியினர் ஆவர் வய நாட்டுச் செட்டிகள் தொழிலால் உழவர்கள் ஆவர். இவர்களது மொழி வயநாடு செட்டி மொழி எனப்படுகிறது. இவர்கள் மலையாள மொழியையும் பேசுவதோடு, கேரளத்தின் மருமக்கள் தாய முறையையும் கடைப்பிடித்து ஒழுகுகின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் முன்னோர்கள் கோவை மாவட்டத்திலுள்ள தாராபுரத்திலிருந்து நீலகிரி மலைமீது குடிபுகுந்த வெள்ளாளச் செட்டியரே ஆவர். எனவே இவர்கள் இனத்தால் தமிழர், வய நாட்டுச் செட்டிகளிடையே இரண்டுவிதத் திருமணங்கள் இருந்தது. முதல்வகைத் திருமணத்தின்படி, பெண்ணானவள் கணவனிடம் தொடர்பு கொள்ளுவாள். ஆனால் கணவன் வீட்டுக்குச் சென்று வாழமாட்டாள். மற்றொரு வகைத் திருமணம் ‘மாலைக் கல்யாணம்' என்று சொல்லப்படுகிறது. அதன்படி மனைவி கணவனோடு வாழ அனுமதிக்கப்படுகிறாள். மருமக்கள் தாய முறையே இத் திருமண வேறுபாடுகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் வய நாட்டுப் பீடபூமியில், பாய்ந்துவரும் நீரருவிகளின் நீரைப்பாய்ச்சி நெல் விளைவிக்கின்றனர். அதோடு புன்செய்த் தானியங்களையும் விளைவிக்கின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் சமுதாயத்தில் ஐந்து குடும்பங்கள் தலைமைபெற்ற குடும்பங்களாகக் கருதப்படுகின்றன.

கொங்குச் செட்டியார்கள், வெள்ளாஞ்செட்டி, எண்ணெய் செட்டி, வணிக செட்டி இம்மூன்று இனம் சேர்ந்த கூட்டே கொங்குச் செட்டியார்கள் என அழைக்கப்படுகின்றது.

குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட), தமிழ்நாட்டில் அதிக அளவில் மண்பாண்டத் தொழில் செய்து வரும் குலாலர் சாதியினர் கேரளாவில், குலாலர் சமூகத்தினர் கும்பாரர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கும்பார மொழி பேசுகின்றனர். கேரளத்தில், நிலாம்பூர் பிரதேசத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சிறிய இனக்குழுவால் பேசப்படும் மொழியாகும். இவர்கள் எல்லோரும் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து, தமிழகம் வழியாகக் கேரளம் போய்ச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கலந்து சேர்ந்த மொழிதான் கும்பார மொழி. இதற்கு வரிவடிவம் கிடையாது என்பதால், கும்பார இனத்தவர்கள் தங்களுக்குப் பழக்கமான மலையாள வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாயக்கர் ஆட்சியின் போது ஆந்திராவிலிருந்து, தமிழகம் வந்து மதுரையில் தங்கிய குயவர்கள் தங்களை செட்டியார் என அழைத்துக்கொள்கின்றனர். இவர்கள் சாலிவாகன மன்னர் வம்சம் என கூறுவர்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆதியில் நாக நாடு என்ற பகுதியில் வாழ்ந்து வந்த வைசியர்கள். முதலில் மூன்று பிரிவாக அதாவது, ஆறு வழியார், ஏழு வழியார், நான்கு வழியார் என்று தான் இருந்துள்ளனர். மூன்று பிரிவினரும் நாக நாட்டில் இருந்த காலத்திலிருந்தே மரகத விநாயகரை வழிபட்டு வந்துள்ளனர். பாண்டிய நாடு வந்த பின்தான் அரியூரார், இளையாற்றங்குடியார், சுந்தரப்பட்டணத்தார் என்று அழைக்கப்பட்டனர். அரியூரார், அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார் என்று அழைக்கப்படுகின்றனர். இளையாற்றங்குடியார் மட்டுமே பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று அழைக்கப்பட்டனர். அரியூர் வந்தவழி நகரத்தார் வடக்கு வளவு, தெற்கு வளவு மற்றும் நாகர்கோயில் ஏழூர் செட்டி சமூகம் என்று மூன்று பிரிவாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அதே போல் சுந்தரப்பட்டணத்தார் பல்வேறு காரணங்களால் கேரளத்தில் உள்ள கொல்லம் அருகே குடி பெயர்ந்து சென்று விட்டார்கள்.

ஆரிய வைசியர் தெலுங்கை தாய் மொழியாய் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பான்மையாக வணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆரிய வைசியர்களின் குலதெய்வம் வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்பாள் ஆவார். இவர்கள் கோமுட்டி செட்டி எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாணிகத்திற்காக ஆப்பிரிக்காவில் உள்ள கோமட்டி நகரில் குடியேறினர் எனவும்  இந்த நகரத்தின் அருகில் உள்ள ஆற்றின் பெயர் கோட்டி ஆறு, எனவும் கூறுகின்றனர். கோமுட்டி மக்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு வணிகத்தின் பொருட்டு சென்றுள்ளனர் என்று கூறுகின்றனர்.

செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ழூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) இவர்கள் கன்னியாகுமரிமாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் வாழும் செட்டியார்கள் ஆவர். கோட்டார் இன்று நாகர்கோவில் உள்ளது என்றாலும் இந்த ஊருக்குப் பல நூற்றாண்டு வரலாறு உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாகவே இந்நகரம் ஒரு வணிகத் தலமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த வணிகத் தலம்தான் இந்த ஏழூர் செட்டுகளின் வாழிடமாக இருந்துவருகிறது. இவர்கள் பல்லாண்டுகளாக ஒரே குடியிருப்பில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள். கடல் கோள் காரணமாகத் தென் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த இவர்கள் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் தங்கள் குடியிருப்பை நிலைநிறுத்திக்கொண்டார்கள். இதிலிருந்துதான் ஏழூர் செட்டு என்னும் பெயர் உருவாயிற்று. அந்த ஊர்களில் ஒன்றுதான் கோட்டார். மற்ற ஊர்களும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே உள்ளன. செட்டு கப்பலுக்குச் செந்தூரான் துணை என்னும் நூலில் டாக்டர் சி. மாணிக்கவாசகம் இவர்களின் வரலாற்றை பதிவு செய்துள்ளார். 

 சோழபுரம் செட்டியார், காயல் செட்டி, கோட்டைப்புரச் செட்டியார், திருவெள்ளறைச் செட்டியார் இந்த செட்டியார் இனங்கள் எந்த ஊரில் குடியேரினரோ அந்த ஊரின் பெயரால் தங்களை அழைத்துக் கொண்டனர்.

5.0 முடிவுரை:

 மேலே குறிப்பிட்டுள்ள செட்டியார் சாதிகளில் பல சாதிகள் ஆந்திராவையும், கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். பல செட்டியார் இனங்கள் தமிழ்நாட்டினை சேர்ந்தவையாகும். இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கான தொழில்களை செய்து வந்துள்ளனர். இதில் பலர் உழவுத் தொழிலையும், சிலர் பண்ட மாற்று தொழிலையும், சிலர் அறுவை தொழிலையும், சிலர் வட்டி தொழிலையும், சிலர் எண்ணெய் ஆடும் தொழிலையும், உப்புத் தொழிலையும், மீன் விற்கும் (பரதவ செட்டி) தொழிலையும் செய்து வந்துள்ளனர். எனவே இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மூலங்களில் இருந்து வந்தவர்கள். ஆனால் வணிகம் செய்வதால் இச்சாதி மக்கள் அனைவரும் தங்கள் சாதி பெயருக்கு பின் செட்டியார் என்னும் பெயரை சேர்த்துக் கொள்கின்றனர். செட்டியார் என்பது பொதுப்பெயர் மட்டுமே. அது சாதியல்ல. செட்டியார்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது மகிழ்ச்சிதான். என்றாலும் அவர்களுக்கான வரலாற்றை ஒற்றை பரிமாத்தில் உள்ளடக்குவது அல்லது ஓர்மைக்குள் அடக்குவது என்பது தவறான ஒன்றாகும். (என் கருத்து மட்டுமே) செட்டியார் இனம் பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்கும் போது, அவர் எந்த செட்டியார் இனத்தை சார்ந்தவர் என்பதையும் தாங்கி அச்செய்திகள் வெளிவரும் போது அது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அது அவர்களுக்கான அல்லது அந்த சமூகத்துக்கு அளிக்கும் ஒரு அங்கீகாரமாகவும் அது கருதப்படும்.