வாணியதாதன்
முன்னுரை:
கம்பர்
வாழ்ந்த காலத்தில் இருந்த சமகால புலவர் வாணியதாதன். வாணியர் குலத்தவர் ஆதலால் அப்பெயர்
கொண்டே அவர் அழைக்கப்பட்டர். ஒவ்வொருவர்க்கும் ஓர் இயர்பெயர் உண்டு. இவரின் இயர்பெயர் பற்றி அறியப்படவில்லை. கம்பர் வாழ்ந்த காலமானது
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம் ஆகும். அதாவது கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
ஆகும். அவருடன் சமகாலத்திய புலவராக வாழ்ந்தவர் தான் வாணியதாதன்.
கம்பர்,
கம்பராமாயணத்தை எழுதினார். கம்பர் தன்னுடைய இராமாயணத்தில் ஆறு காண்டங்களை மட்டுமே எழுதினார்.
ஏழாவது காண்டமான உத்திரகாண்டத்தை கம்பர் எழுதவில்லை. மூன்றாம்
குலோத்துங்கச்சோழனின் ஆதரவால் ஏழாவது காண்டமான உத்திர காண்டத்தை வாணியதாதன் எழுதி முடித்தார்.
சிலர் உத்திர காண்டத்தை ஒட்டக்கூத்தர் தான் எழுதினார் என்றும் கூறுவர் ஆனால் அது தவறு.
ஒட்டகூத்தர்
கம்பன் காலத்துக்கு முற்பட்டவர். அவர் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தை சேர்ந்தவர்.
கம்பர் வாழ்ந்த காலம் கி.பி.1180-1250 ஆகும்.
ஒட்டகூத்தர் வாழ்ந்த காலம் கி.பி.1136-1150 ஆகும்.
வாணிய
தாதன் கம்பரின் சமகாலத்தவர் என்பதால் இவ்விருவருக்குமிடையே போட்டிகள் நிலவியுள்ளன.
இவ்விருவரும் ஒருவரை ஒருவர் இழித்தும் பழித்தும், புகழ்ந்தும் வசைபாடியும் பாடல்கள்
பாடியுள்ளனர்.
வாணிய தாதனின் பாடல்கள்:
வாணிய தாதன் பாடல்கள் மிக குறைவாகவே நமக்கு கிடைக்கின்றது.
இது வாணிய தாதன் கம்பர் மேல் பாடிய வசைப்பாட்டு.
கம்பர் மும்மணிக் கோவையொன்று பாடினார் எனவும், அதன் முதற்பாட்டு முதற் சீர் பாட்டியல்
முறைப்படி குற்றமுடையதென்று வாணியதாதன் குற்றங் கண்டறிந்தார் எனவும் அவர் அக்குற்றத்தை இப்பாட்டால் சுட்டிக்கூறினார் எனவும் கூறுவர்.
கட்டளைக் கலித்துறை
கைம்மணிச் சீரன்றிக் சீரறி யாக்கம்ப நாடன்சொன்ன.
மும்மணிக் கோவை முதற்சீர் பிழைமுனே வாளெயிற்றுப
பைம்மணித் துத்திக் கணமணிப் பரந்தட் படம்பிதுங்கச்
செம்மணிக் கண்பதம் பொங்க்கொல் யானைச் செயதுங்கனே.
கைம்மணிச் சீர் - கோயில்களில் கையால் அசைத்து இயக்கப்படும்
மணியோசை. கம்பர் உவச்சர் குடியிற் பிறந்தவரென்றும், உவச்சர் கோயில்களில் மணியடித்தல் முதலிய பணிசெய்பவரென்றும்
கூறப்படும் வரலாற்றுக் குறிப்பிற்கேற்ப, இப் பாட்டுக்கைம்மணிச் சீரன்றிச் சீரறியாக்
கம்பன்:எனக் கூறுகின்றது.
கம்பரை போற்றியவர்:
கம்பரது வாழ்நாள் முழுதும் அவரிடம் விரோதம்
பாராட்டியவர். ஆனால் அந்தரங்கத்தில் கம்பரது புலமையில் மிகுந்த மதிப்பு
வைத்திருந்தார். கம்பர் காலமானபோது அவரோடு கவியும், கலையும், கல்வியுமே
செத்துவிட்டதுபோல் வாணியன் தாதனுக்குத் தோன்றியது. கம்பன் இறந்தபோது வாணியதாதன் இரங்கல் பா ஒன்றை
பாடினார். இது, கம்பர் இறந்தது கண்டு தாதன் வருந்திப் பாடிய கையறம். கையறம் என்பது கையறுநிலைப் பாட்டு ஆகும். இதனைச் சமரகவி எனவும் அழைப்பர்.
இன்றேநங் கம்ப னிறந்தநா ளிப்புவியில்
இன்றே தான் புன்கவிகட் கேற்றநாள்! – இன்றே தான்
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும் நாள்!.
இன்றே தான் புன்கவிகட் கேற்றநாள்! – இன்றே தான்
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும் நாள்!.
கவிச்சக்கரவர்த்தி மறைந்த நாளிலேயே சரஸ்வதிதேவி தன்
மாங்கல்யத்தை இழந்து விட்டாள் என்றும் தாதன் கருதினார். அதோடு இனி அற்பமான புலமையுடையவர்கள் பாடு
கொண்டாட்டமாய்ப் போய்விடும். கம்பர் இல்லாத உலகில் அவர்கள் பேரும் புகழும்
சம்பாதித்து வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வாணியன் தாதனுக்குத்
துயரம் பொறுக்கவில்லை. கம்பர் இல்லாத உலகத்தில் மகாலட்சுமிக்கு வாழ்வு உண்டு; பூமாதேவியும் என்றும்
போல் இருப்பாள்; சரஸ்வதியின் பாக்கியந்தான் போய்விடும் என்று புலம்புகிறார்:
முடிவுரை:
பிறர்
செய்யும் தவறினை பதிவு செய்து சுட்டிக்காட்டுபவனும் சமூக அக்கறையும் உடையவனே கவிஞன்,
புலவன். கம்பருடன் பகைமை பாராட்டினாலும் அவரின் கவிகளை அங்கீகரிக்க தவறியதில்லை. பிறர் கவியினை மதிக்க தெரிந்தவனே உண்மையான புலவன்.
அதை வாணிய தாதன் செய்யத்தவறியதில்லை. வாணிய தாதனின் உத்திர ராமாயணத்தை படித்து பயன்பெறுவோம்.
செக்கார குலத்து மக்கள் தம் குழந்தைகளுக்கு வாணியதாதன் பற்றிய அறிவினை ஊட்ட வேண்டுகிறேன்.
குறிப்புதவி
நூல்: தமிழ் நாவலர் சரிதை-பக்கம்-88